ஊழல், லஞ்சத்தை எப்படி ஒழிப்பது..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : சம்பளம் வாங்கும்போதும் ஒருவர் ஊழல் செய்வதற்கும், லஞ்சம் வாங்குவதற்கும் காரணம் என்ன..? ஊழலை ஒழிப்பது எப்படி?

  • எஸ்.கற்பகம், புதுவை.

ஞானகுரு :

ஆணவம்தான் ஊழலுக்கு அடிப்படைக் காரணம். நான் செய்யும் ஊழலை யாராலும் கண்டுபிடிக்க முடியாது, அப்படியே கண்டுபிடித்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து என்னால் தப்பித்துவிட முடியும் என்ற அகங்காரம்தான் தைரியம் கொடுக்கிறது. அதனால்தான் ஊழல் குற்றவாளிகள் போலீஸ் வாகனத்தில் ஏறும்போதும், ஒலிம்பிக் வெற்றியாளர்கள் போன்று சந்தோஷமாக கையாட்டிக் கொண்டே போகிறார்கள்.

ஊழலை ஒழிப்பது என்பது ஒரே ஒரு சட்டத்தால் அல்லது ஒரே ஒரு தலைவரால் நடக்கக்கூடிய விஷயம் அல்ல. அது சமூக மனநிலை, அரசியல் நேர்மை, நிர்வாகத் தெளிவு, மக்களின் விழிப்புணர்வு என அனைத்தும் இணைந்தால் மட்டுமே சாத்தியம்.

ஊழல் வழக்குகள் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் கிடப்பில் போகும் போது, குற்றவாளிகளுக்கு பயம் குறைந்து விடுகிறது. அதனால் விரைவு நீதிமன்றங்கள், சொத்து பறிமுதல், அரசுப் பதவி தடை போன்ற கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.

வேலை சீக்கிரம் நடக்கவேண்டும் என்று மக்கள் தாமாகவே முன்வந்து லஞ்சம் கொடுக்கும் மனநிலையும் ஊழலை வளர்க்கிறது. எனவே, லஞ்சம் வாங்குபவருக்கு மட்டும் அல்ல, கொடுப்பவருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்.

ஊழலை பார்த்தும் “எனக்கு என்ன?” என்று அமைதியாக இருப்பது, ஊழலுக்கு ஆதரவாக மாறிவிடுகிறது. சமூக ஊடகம், RTI, மக்கள் இயக்கங்கள் ஆகியவை வலுவாக பயன்படுத்தப்பட வேண்டும்.

ஊழல் என்பது பணம் திருடுவது மட்டுமல்ல; அது ஏழையின் உரிமையை பறிப்பது, நாட்டின் வளர்ச்சியை தடுக்குவது, மக்களின் நம்பிக்கையை சிதைப்பது ஆகும். எனவே, நேர்மை பாராட்டப்படும் இடத்தில் அநீதி அழிந்துபோகும்.

…………………

கேள்வி : குழந்தையும் தெய்வமும் ஒன்றா..?

  • எம்.மணிவண்ணன், பரங்கிநாதபுரம்.

ஞானகுரு :

மனிதர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை குழந்தை பெயருக்குத்தான் எழுதி வைக்கிறார்கள். எல்லாம் கொடுத்த கடவுளுக்கு மனிதன் சம்பாதித்த அத்தனையயும் கொடுத்துவிடுவதில்லை. அதனால் மனிதனைப் பொறுத்தவரை, கடவுளைவிட குழந்தையே பெரிது.

Leave a Comment