மருத்துவச் செலவை குறைக்க சிம்பிள் வழி

குடும்ப மருத்துவர் நாள்

உடலில் எந்த ஒரு பிரச்னை என்றாலும் குடும்ப மருத்துவரை அணுகும் காலம் போய்விட்டது. இணைய தளத்தில் நுழைந்து அதற்குரிய காரணத்தைக் கண்டறிந்து, குறிப்பிட்ட ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரைத் தேடி ஓடும் காலம் வந்துவிட்டது. குடும்ப மருத்துவர் என்பது எல்லா காலத்துக்கும் முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில், இன்றைய மே 19 குடும்ப மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

குடும்ப மருத்துவர் எதற்காக..?

சாதாரண  காய்ச்சலுக்குக் கூட பெரிய மருத்துவமனைகளை நாடும் நிலை உருவாகிவிட்டது. ஆனால் முன்பு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குடும்ப மருத்துவர் இருந்தார். வீட்டில் உள்ள அனைவரின் உடல்நிலை, பழைய நோய்கள், மரபணு பின்னணி, மனநிலை, வாழ்க்கை முறை என அனைத்தையும் தெரிந்த ஒருவர்.

இப்போது அந்த பழக்கம் குறைந்து விட்டதால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்படாமல் போகின்றன. மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கின்றன. இதனால் மீண்டும் குடும்ப மருத்துவர் என்ற கருத்தின் அவசியம் குறித்து மருத்துவ உலகமே வலியுறுத்தத் தொடங்கியுள்ளது.

குடும்ப மருத்துவர் யார்?

குடும்பத்தில் உள்ள குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் அடிப்படை மருத்துவ ஆலோசனையும், தொடர்ச்சியான சிகிச்சை வழிகாட்டுதலையும் வழங்கும் மருத்துவரே குடும்ப மருத்துவர்.

அவர் வெறும் மருந்து எழுதுபவர் அல்ல. குடும்பத்தின் மருத்துவ வரலாற்றை அறிந்தவர். நோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பவர். தேவையற்ற பரிசோதனைகளைத் தவிர்ப்பவர். மனநல ஆதரவையும் தருபவர். அவசரநேரத்தில் சரியான மருத்துவமனைக்கு வழிகாட்டுபவர்

முக்கிய நன்மைகள்

ஒரு மருத்துவர் குடும்பத்தை நீண்டகாலமாக கவனித்தால், உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட விரைவாக கவனிக்க முடியும்.

  • உதாரணமாக திடீர் உடல் எடை குறைதல், அடிக்கடி சோர்வு, ரத்த அழுத்த மாற்றம், சர்க்கரை அளவு உயர்வு, மன அழுத்த அறிகுறிகள் போன்றவை பெரிய நோய்களின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
  • பலர் இணையத்தில் பார்த்த தகவல்களை வைத்து தேவையில்லாமல் ஸ்கேன், டெஸ்ட், மருந்துகள் எடுப்பது அதிகரித்துள்ளது. ஆனால் குடும்ப மருத்துவர் எந்த பரிசோதனை அவசியம்? எந்த மருந்து தேவையில்லை? எப்போது பெரிய மருத்துவமனை செல்ல வேண்டும்? என்பதை தெளிவாகச் சொல்வார். இதனால் மருத்துவச் செலவுகள் கட்டுப்படும்.
  • ஒரே குடும்பத்தில் சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, புற்றுநோய் போன்றவை மரபாக இருக்கலாம். குடும்ப மருத்துவர் இதை முன்கூட்டியே கவனித்து தடுப்பு வழிமுறைகளை சொல்ல முடியும்.
  • குழந்தைகளின் வளர்ச்சி, தடுப்பூசி, உணவுமுறை ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க குடும்ப மருத்துவர் உதவுவார்.
  • முதியவர்களுக்கு மருந்து அளவு சரிபார்த்தல், பல நோய்களுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை ஒழுங்குபடுத்தல், நினைவாற்றல் குறைபாடு கவனித்தல், விழுந்து காயமடைவதைத் தடுக்கும் ஆலோசனைகள் போன்றவற்றிலும் உதவி கிடைக்கும்.
  • பல குடும்பங்களில் மனஅழுத்தம், தனிமை, பதட்டம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன. குடும்ப மருத்துவர் நீண்டகாலமாக அறிந்திருப்பதால் மனநிலை மாற்றங்களை கவனிக்க முடியும். கவுன்சிலிங் பரிந்துரைக்க முடியும். தற்கொலை எண்ணம் போன்ற அபாயங்களையும் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியும்
  • நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், திடீர் மயக்கம் போன்ற சூழல்களில் மக்கள் பதறி தவறான முடிவெடுக்கலாம். ஆனால் குடும்ப மருத்துவர் உடனடி முதல் உதவி வழிகாட்டுவார். எந்த மருத்துவமனை சரி என்பதை சொல்வார். நோயாளியின் பழைய மருத்துவ விவரங்களையும் பகிர முடியும். இதனால் உயிர் காப்பாற்றும் வாய்ப்பு அதிகரிக்கும்.

மருத்துவரை மாற்றாதீர்கள்

இப்போது மக்கள் பல்வேறு மருத்துவர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் மருத்துவ வரலாறு சிதறுகிறது. மருந்து மீள்மீள் பயன்பாடு அதிகரிக்கிறது, தேவையற்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன, நோய்களின் முழு படம் யாருக்கும் தெரியாமல் போகிறது

இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகவே “Family Medicine” என்ற துறை உலகம் முழுவதும் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது.

மருத்துவர் தேர்வு

குடும்ப மருத்துவர் தேர்வு மிகவும் முக்கியம். அவர் குடும்பத்துடன் நேரம் ஒதுக்கிப் பேசுபவராக இருக்க வேண்டும். தேவையற்ற பயத்தை ஏற்படுத்தாதவர். அடிக்கடி மருந்து மாற்றாதவர். நோயை எளிமையாக விளக்குபவர். அவசரநேரத்தில் அணுகக்கூடியவர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கவனிக்கக்கூடியவராக ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்.

இன்றைய உலகில் மக்கள் மருத்துவமனைகளை அதிகமாக நம்புகிறார்கள்; ஆனால் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய சக்தி தொடர்ச்சியான மருத்துவ உறவு என்பதுதான்.

ஒரு நல்ல குடும்ப மருத்துவர் இருந்தால் நோய் வருவதற்கு முன்பே தடுக்க முடியும். உடலையும் மனதையும் பாதுகாக்க முடியும், குடும்பத்தின் ஆயுளையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த முடியும்

வீட்டில் முதல் உதவிப் பெட்டி இருப்பதைவிட, நம்பிக்கைக்குரிய குடும்ப மருத்துவர் இருப்பதே பெரிய பாதுகாப்பு.

Leave a Comment