எல்லோருக்கும் பரிசு கொடுக்கலாமா..?

புதிய கலாச்சாரம்

பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, ஓட்டப்போட்டி என்று பள்ளியில் ஏராளமான போட்டிகள் வைக்கப்படுகின்றன. இதன் மூலம் அனைத்துப் பிள்ளைகளும் ஏதேனும் ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

முன்பு முதலில் வரும் மூன்று பேருக்கு மட்டும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு சிலருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால், இப்போது பங்கு பெறும் அனைவருக்கும் பார்ட்டிசிபிஷேசன் சர்டிஃபிகேட் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார்கள்.

ஏதோ ஒரு சர்டிஃபிகேட் வாங்குவது போதும் என்று பிள்ளைகளும் பெற்றோரும் திருப்தியாகிறார்கள்.

ஆனால், இது தவறான அணுகுமுறை என்கிறார்கள் மனவியல் ஆய்வாளர்கள். எல்லோருமே பரிசு பெறுவதால் கடுமையாக போராடி ஜெயித்தவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். மற்றவர்கள் மகிழ்ந்து போகிறார்கள். தோல்வியின் சுவை அறியாமல் வளர்பவர்கள் தாண்டுவதற்குத் தடைகளே இல்லை என்று நினைக்கிறார்கள்.  அதனால் எந்த விஷயத்திலும் அதிகம் சிரமம் எடுத்துக்கொள்வதில்லை.

சரியாகப் படிக்காமலே பாஸ் ஆகிவிடுவது, உழைக்காமலே பரிசு வாங்கிவிடுவது போன்ற குணத்துடன் இருப்பவர்கள், எதிர்காலத்தில் நிஜ உலகில் போராடும்போது மிகவும் சோர்ந்துவிடுகிறார்கள். தோல்விகளும் வாழ்க்கையில் சகஜம், கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதை சொல்லிக்கொடுத்தால்தான் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவார்களாம்.

பிள்ளைகளுக்கு தோல்வி அடையக் கற்றுக்கொடுப்பதே நல்ல கல்வி.

Leave a Comment