புரட்சித்தலைவரின் பாராட்டு

என்ன செய்தார் சைதை துரைசாமி – 489

கால்சட்டை பருவத்தில் இருந்து எம்.ஜி.ஆர். ரசிகன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாளில் இருந்து தொண்டன், எம்.ஜி.ஆரின் படைத்தளபதியாக இருந்தவர் சைதை துரைசாமி. புரட்சித்தலைவரால் அதிக முறை பாராட்டு பெற்றவர் என்றாலும் இரண்டு சம்பவங்களை இன்றும் பெருமையாகப் பேசுகிறார்.

சைதை துரைசாமியே அந்த சம்பவங்களை விவரிக்கிறார். ‘’ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவன் நான். புரட்சித்தலைவருக்குக் கொடுப்பதற்கு என்னிடம் உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதனாலே, புரட்சித்தலைவரை அவமதித்த அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு உயிரை துச்சமென மதித்து எலுமிச்சம்பழம் மாலை அணிவித்தேன். அன்று கொடூரமாக தாக்கப்பட்ட நேரத்தில், என் உயிரைக் காப்பாற்றியவர் எம்.ஜி.ஆரை. இதற்காக போடப்பட்ட வழக்கில் பரோலில் வந்த என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, ‘அண்ணா திமுகவின் முதல் தியாகி, அண்ணா திமுகவின் பகத்சிங்’ என்று மனம் திறந்து பாராட்டினார்.

அதேபோன்று, அதிமுகவில் முதன்முதலாக கட்சித் தேர்தல் நடந்தபோது, நிர்வாகிகள் தேர்வுக்கு கடுமையான போட்டி நிலவியது. அந்த தேர்தலில் நான் ஒருவன் மட்டுமே போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்ட தொகுதி அமைப்பாளர். இதற்காக என்னை பாராட்டியதுடன் நில்லாமல், ‘சைதாப்பேட்டை என்றாலே எனக்கு எலுமிச்சம்பழ மாலையும் சைதை துரைசாமியும்தான் ஞாபகம் வரும்’ என்று பொதுக்கூட்டத்தில் பேசியதும் நான் பெற்ற பாக்கியங்கள்.

புரட்சித்தலைவர் மறைந்தாலும் அவர் பேரை உலகம் முழுக்க கொண்டுசெல்லும் பணியை சிறப்புற செய்துகொண்டு இருக்கிறோம். கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீடு கேட்பாரற்றுக் கிடக்கும் தகவல் கிடைத்ததும், ‘மனிதநேயம் மையம்’ சார்பில் அந்த வீடு புதுப்பிக்கப்பட்டது. இப்போது நூற்றுக்கணக்கான நபர்கள் தினமும் பார்வையிட்டு மகிழ்கிறார்கள்.

அதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு புரட்சித்தலைவி பெயர் சூட்டப்படுவதற்கும், பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புரட்சித்தலைவர் பெயரை சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சூட்டுவதற்கும் ஒரு முக்கிய காரணியாக நான் இருந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்…’’ என்கிறார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment