என்ன செய்தார் சைதை துரைசாமி – 487
புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் கண்டிப்பாக குணமடைந்து வந்துவிடுவார் என்பதே அனைத்து அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கருத்தாக இருந்தது. ஆனால், அப்பல்லோ மருத்துவமனையில் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணத்தைத் தழுவினார்.
அந்த நேரத்தில், புரட்சித்தலைவிக்கு எங்கு நினைவிடம் அமைப்பது என்பதில் மிகப்பெரும் குழப்பம் நிலவியது. அன்றைய தினம் நடந்த சம்பவம் குறித்து விவரிக்கிறார் சைதை துரைசாமி.
’’புரட்சித்தலைவர் நினைவிடம் அமைப்பதற்கு குழப்பம் நிலவியது போலவே, புரட்சித்தலைவி மறைந்தபோதும் குழப்பம் இருந்தது. அப்போது அடையாறு காந்தி மண்டபம், சஃபையர் தியேட்டர் அல்லது நேரு விளையாட்டு மைதானம் ஆகிய மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வதற்கு திட்டமிடுவது தெரியவந்ததும் பதறிப்போனேன்.
‘கடலோர ஒழுங்காற்று மண்டல விதிமுறைகளின்படி கடற்கரையோரம் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை உள்ளது என்பதால் அப்படியொரு முடிவு எடுக்கப்படுவதாக சொல்லப்பட்டது. இதை என்னால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கடலோர ஒழுங்காற்று மண்டல விதிமுறைகளின்படி கடற்கரையோரம் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை இருப்பது உண்மை என்றாலும், அது புதிய கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சமாதி அமைந்திருக்கும் இடத்துக்குள் புரட்சித்தலைவிக்கு சமாதி அமைப்பதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை என்பதை தெரிவித்தேன்.
ஆனாலும் உடனடியாக என்னுடைய ஆலோசனை ஏற்கப்படவில்லை.
- நாளை பார்க்கலாம்.
