என்ன செய்தார் சைதை துரைசாமி – 486
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த நேரத்தில் பெரும் அதிர்ச்சியடைந்து, அழுது புலம்பிக்கொண்டு இருந்தார் சைதை துரைசாமி. கண்ணீர் சிந்தி கவலையில் அழுதுகொண்டிருந்த சைதை துரைசாமியை தன்னுடன் அழைத்துக்கொண்டு மெரினா பீச்சுக்கு விரைந்தார் ஆர்.எம்.வீரப்பன். அதன்பிறகு நடந்ததை விவரிக்கிறார் சைதை துரைசாமி.
‘’மெரினா பீச்சில் காத்திருந்த தலைமைச்செயலக அதிகாரிகளுடன் புரட்சித்தலைவருக்கு எந்த இடத்தில் சமாதி எங்கு அமைப்பது என்று அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் போய் ஆலோசனை நடத்தினார்.
பேரறிஞர் அண்ணா சமாதிக்கு முன்புறம், பின்புறம், வலப்புறம், இடப்புறம் அமைக்கலாம் என்று அதிகாரிகள் ஆளுக்கு ஓர் ஆலோசனை சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
அந்த நேரத்தில் எனக்கு ஒரு யோசனை வந்தது. உடனே நான், ‘’அண்ணாவின் இதயக்கனி நம் புரட்சித்தலைவர். அதனால், அவரை அண்ணாவுக்கு இடப்புறம் புதைக்கலாம்’’ என்று சொன்னேன்.
நான் சொன்ன ஆலோசனையைக் கேட்டதும் அத்தனை பேரும் அமைதியாக இருந்தார்கள். சில நொடிகள் அந்த அமைதி நீடித்தது.
கொஞ்ச நேரம் யோசித்த அண்ணன் வீரப்பன், ‘’மிகவும் சரியான முடிவு… அப்படியே செய்துவிடலாம்’’ என்று ஆமோதிக்க, அங்கிருந்த அதிகாரிகளும் அப்படியே ஏற்றுகொண்டனர். என்னுடைய ஆலோசனைப்படி புரட்சித்தலைவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டதில் எனக்கு மிகப்பெரும் திருப்தி ஏற்பட்டது. அதேபோன்று புரட்சித்தலைவிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டதிலும் எனக்கு முக்கிய பங்கு இருக்கிறது….’’
- நாளை பார்க்கலாம்.
