இந்த தாய்ப்பாசம் உண்மை இல்லீங்க

பொய் செய்தி வில்லங்கமாகிவிடும்.

நர்மதை ஆற்று விபத்தில் பிள்ளையை கட்டிப்பிடித்தபடி உயிர் இழந்த தாயின் புகைப்படம், இந்தியா முழுக்க வைரலாகிவருகிறது.  

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர், பர்கி அணையில் ஜாலியாக தொடங்கிய படகு பயணத்தில் டெல்லியில் இருந்து வந்த நான்கு பேர் குடும்பம் இருந்தது. திடீரென வீசிய பலத்த புயல் காற்றினால் படகுக்குள் தண்ணீர் புகுந்து கவிழ்ந்துவிட்டது.

தாய்ப்பாசம்

டெல்லி குடும்பத்தில் தாய்க்கு மட்டுமே லைஃப் ஜாக்கெட் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் தன்னுடைய நான்கு வயது மகனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைக்கப் போராடினார். அந்த பெண்ணின் கணவரும் மகளும் தண்ணீரில் தத்தளித்து கரைக்கு வந்து சேர்ந்தனர்.

ஆனால், அந்த 4 வயது சிறுவனைக் கட்டிப்பிடித்தபடி தாய் உயிரிழந்து மிதந்தார். அந்த தாய்க்கு தப்பித்து உயிர் பிழைக்கும் வாய்ப்பு இருந்தது. லைஃப் ஜாக்கெட் உதவியால் அந்த தாய் மட்டும் கண்டிப்பாக தப்பித்திருக்க முடியும். ஆனால், அவர் தனது உயிரைவிட மகன் உயிரே முக்கியம் என்று நினைத்திருக்கிறார். அதனாலே உயிர் பிரியும் போராட்ட தருணத்திலும் தனது கரங்களில் இருந்த மகனை மரணத்தின் கையில் ஒப்படைக்காமல் அவர் கெட்டியாக அணைத்துக் கொண்டார். இயற்கை கொடூரத்திடம் இருந்து தாயால் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம். ஆனால், தாய் பாசத்துக்கு இலக்கணமாக மாறிவிட்டார் என்று பலரும் தாய்மையைப் போற்றி வருகிறார்கள்.

எது உண்மை..?

ஆனால், இந்த படம் உண்மை இல்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான விஷயம்.

இந்தப் புகைப்படமும் செய்தியும் மே 17, 2017 அன்று மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் அருகே உள்ள பர்கி அணையில் நடந்த விபத்திற்கு உரியவை. டெல்லியைச் சேர்ந்த அர்பணா மாலிக் மற்றும் அவரது 4 வயது மகன் ஹர்ஷித் உயிரிழந்தனர். அன்றைய விபத்தில் தாய்க்கும் மகனுக்கும் ஒரே லைஃப் ஜாக்கெட் போடப்பட்டிருந்தது.

லைஃப் ஜாக்கெட் அணிந்தால் மட்டும் போதாது, அதன் அனைத்துப் பிடிகளும் இறுக்கமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாகக் குழந்தைகளுக்கு அவர்கள் அளவுக்கு ஏற்ற ஜாக்கெட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; பெரியவர்களுக்கான ஜாக்கெட் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்றது. ஒரு லைஃப் ஜாக்கெட்டை இருவரும் போட்டுக்கொண்டதாலே இருவரும் உயிர் இழந்தனர்.

பிள்ளையைக் காப்பாற்றுவதற்குப் போராடினார் என்று இப்போது ஏ.ஐ. மூலம் படம் உருவாக்கப்பட்டு, நிஜமாக ஏப்ரல் 30ம் தேதி நடந்த விபத்துடன் தொடர்புபடுத்தி பொய் செய்தி பரப்பப்படுகிறது.

இது, உணர்வுபூர்வமாக இருப்பதால் இந்த செய்தி அதிவேகமாக பரவுகிறது, அதில் உண்மைத்தன்மையைக் காண வேண்டியது அவசியம்.

இதுவே, தாய்ப்பாசம் தவிர்த்து வேறு ஒரு மோசமான விஷயங்களுக்கும் இதுபோன்ற பொய் செய்தி பரப்பப்படலாம். எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை சரிசெய்த பிறகே அடுத்தவருக்குத் தெரிவிக்க வேண்டும். அதுவே, பாதுகாப்பான சமூகத்திற்கு முக்கியம்.

எந்த உள்நோக்கமும் இல்லை என்றாலும் ஒரு பொய் செய்தி பல்வேறு தவறுகளை உருவாக்கிவிடும்.

Leave a Comment