படிப்பை விடாதீர்கள்.
கல்வித் தகுதியில் காந்தி, நேரு, படேல், ஜின்னா, போன்ற சமகாலத் தலைவர்கள் பலரைக் காட்டிலும் உயர்தகுதி பெற்றவராக அம்பேத்கர் இருந்தார் என்றாலும், அவரை தங்களுக்கு இணையான தலைவராக காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை.
ஊமைகளின் நாயகன்
ஏனென்றால், அவர் நாட்டுக்கு சேவகம் செய்வதை விட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவகம் செய்தார். மூக்நாயக் எனப்படும் அதாவது ஊமைகளின் நாயகன் என்ற பத்திரிகை மூலம் சாதிக் கொடுமைகளையும், கீழ் சாதிக்காரர்கள் படும் சித்ரவதை களையும், மேல்சாதிக்காரர்கள் இழைக்கும் அநியாயங்களையும் படிப்போர் பொங்கி எழும்படி, எழுதினார்.
நாட்டை விட மனிதர்கள் முக்கியம்
‘நாட்டில் விடுதலைப் போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. இந்திய சுதந்திரம் என்பது, தாழ்த்தப்பட்டவர்களும் சமத்துவம் பெறும்போதுதான் பரிபூரணமடைகிறதே தவிர, மேல் சாதிக்காரர்களிடம் அடிமைப்பட்டு நொந்து கிடக்கும் கீழ் சாதிக்காரர்களுக்கு அந்தச் சுதந்திரத்தினால் எந்தப் பயனும் விளைந்துவிடாது எனக் கட்டுரைகளில் எழுதி வந்தார்.
தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளில் அம்பேத்கர் கலந்துக் கொண்டு ஊமை ஜனங்களின் வலியை வேதனையை எடுத்துச் சொல்லி கம்பீர முழக்கமிட்டார்.
செம்மையான அறிவு
அம்பேத்கரின் தனி மனித சாதனை இன்றளவும் எவராலும் முறியடிக்கப் படவில்லை. அறிவு இருள் சூழ்ந்த இந்தியாவில் தம் இடையறா முயற்சியால் மிக உயர்ந்த கல்வித் தகுதியை தேடிப் பெற்றார் பேராசான் அம்பேத்கர். அவர் பெற்றிருந்த செம்மையான அறிவு தான் எதிரிகளோடு மோதிட ஆற்றல் மிக்க கருவியாகப் பயன்பட்டது.
படிப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டவர் யாரும் தோல்வி அடைவதில்லை என்பதற்கு உதாரணமே அம்பேத்கர்.
