அச்சத்திலிருந்து விடுதலை கிடைக்குமா?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : மன பயத்தை எதிர்கொள்வது எப்படி?

  • எஸ்.சகுந்தலா, சாத்தூர்.

ஞானகுரு : .

அறையில் இருந்து கெட்ட வாடை வருகிறது என்றால், உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, அதனை அப்புறப்படுத்தினால் மட்டுமே கெட்ட வாடை நிரந்தரமாக தீரும். அதைவிட்டு அறைக்குள் நறுமணத்தை திணிப்பது வீண். அதுபோல், மன பயம் ஏன் வருகிறது, எதற்காக வருகிறது என்று ஆய்வு செய்வதுதான், அதனை எதிர்கொள்ளும் முதல் வழி.

சின்ன வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயத்தை உருவாக்குகிறோம். பரிட்சையைக் கண்டும், ஆசிரியரைக் கண்டும் பயப்படுகிறார்கள். உயர் அதிகாரிகளைக் கண்டு பயப்படுகிறார்கள். காவலர்களை கண்டாலே பயப்படுகிறார்கள். ஏன் பயம் வருகிறது என்பதை எழுதிப் பார்த்தாலே, அதன் மூல காரணம் தெரிந்துவிடும். இதன் பிறகும் கண்டறிய முடியவில்லை என்றால், கவுன்சிலிங் செல்லுங்கள். அச்சத்திலிருந்து விடுதலை பெறுங்கள்.

கேள்வி : கணவன் – மனைவி கருத்து வேறுபாடுகளைக் களைவது எப்படி?

  • பி.மருதுபாண்டி, ஶ்ரீவில்லிபுத்தூர்.

ஞானகுரு :

நூறு சதவிகிதம் ஒற்றுமையான தம்பதியர் என இந்த உலகில் யாருமே இல்லை. இருவருக்கும் தனித்தனி கருத்துக்கள், சிந்தனைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும். இதனை இருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் கடமைகள், உரிமைகளின் எல்லை எதுவரை என்பதை இருவரும் பேசி எல்லை வகுத்துக்கொண்டாலே பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

மனைவியின் உறவினர்கள் வந்தால் கவனிப்பது கணவனாகவும், கணவன் வீட்டு உறவினர்களை கவனிப்பது மனைவியாகவும் இருத்தல் வேண்டும். சமையல் முதல் தொலைக்காட்சி வரை யாருக்கு எதில் முன்னுரிமை என்று தெளிவாக இருந்தால், பிரச்னைகள் குறையும். யாருமே இல்லாத தனித்தீவில் இருவரும் மாட்டிக்கொண்டால்…. ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருந்தே தீர

வேண்டும். அப்படியொரு சூழலாக இந்த குடும்பத்தையும் எண்ணிக்கொள்ளுங்கள். கருத்துவேறுபாடுகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம், முற்றிலும் நீக்க முடியாது, நீக்கவும் வேண்டாம். இந்த கருத்துவேறுபாடுகளில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடங்கியிருக்கிறது. அதை அனுபவித்து மகிழுங்கள்.

Leave a Comment