காந்தி தேசத்தின் ரத்த சரித்திரம்

சீரிஸ் எனும் வாழ்க்கை – Freedom at Midnight

இந்திய மக்கள் அனைவரும் அன்பானவர்கள், சகோதர, சகோதரிகளாகப் பழகுபவர்கள். விருந்தோம்பலுக்கு இலக்கணமாகத் திகழ்பவர்கள் என்றெல்லாம் நம்மைப் பற்றி நாமே பெருமையாகப் பேசிக்கொள்கிறோம், நம்மை நாமே பாராட்டிக்கொள்கிறோம்.

அதேநேரம் மதம் பிடித்துவிட்டால், தெரிந்தவர், நெருங்கியவர் என்றெல்லாம் பார்க்காமல் எத்தகைய கொடூரத்தையும் செய்வதற்கு இந்தியர்கள் தயங்கவே மாட்டார்கள் என்பதை நிஜமான வரலாற்றுத் தகவல்களுடன் காட்டுகிறது, ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ சீரிஸ். டாக்குமென்டரி டைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த நள்ளிரவு சுதந்திரத்தின் ஒவ்வொரு அத்தியாயமும், நம் பாடப்புத்தகங்களில் படிக்காத இந்தியாவின் இன்னொரு கோர முகத்தை நமக்குக் காட்டுகிறது.

பரபரப்பு புத்தகம்

1975ம் ஆண்டு லாரி காலின்ஸ்  – டொமினிக் லேப்பியர் ஆகியோர் எழுதிய ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து, பாலிவுட் இயக்குநர் நிகில் அத்வானி அதே பெயரில் இந்த வெப் தொடரை இயக்கியிருக்கிறார். இந்தியாவில் 1946 முதல் 1948 வரை நடந்த வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பாக வந்துள்ளது.

மகாத்மா காந்தியை இந்திய தேசத்தின் தந்தை என்று கொண்டாடுகிறோம். சத்தியாகிரகப் போராட்டம் மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் என்றும், அஹிம்சை எனும் புதிய போராட்ட வடிவத்தை உலகிற்குக் கொடுத்தவர் என்றும் காந்தியை ஒரு வெற்றியாளராக போற்றிப் புகழ்கிறோம். ஆனால், இந்த தொடர் காந்தியின் மோசமான தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. வாழ்நாள் முழுவதும் அஹிம்சையை போதித்த மகாத்மா காந்தியை, ஒரு வன்முறையாளன் சுட்டுக்கொலை செய்தது கொடூர முரண்.

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் ஒரு காந்தி இருக்கிறாரோ இல்லையோ, ஒரு கோட்சே நிச்சயம் இருக்கிறான் என்ற உண்மையைச் சொல்லும் இந்த ரத்த சரித்திரத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

பற்றியெரிந்த தேசம்

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திரக் கொண்டாட்டம் நாடு முழுக்க நடைபெற்றது என்று படிக்கிறோம். அது உண்மையல்ல. ஏனென்றால் பிரிவினை என்ற நெருப்பு பல இடங்களில் பற்றி எரிந்தது. பல்வேறு பகுதிகளிலும் மதக் கலவரம், அச்சம், கண்ணீர், இழப்பு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்று மறக்கமுடியாத கருப்பு நாட்களாகவும் அந்த சுதந்திரம் இருந்தது. நள்ளிரவில் ஏன் இந்தியாவுக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது என்பதையும் காட்டியிருக்கிறார்கள். 

இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு பிரிட்டிஷார் தயாராக இருந்த 1946ம் ஆண்டின் நிகழ்வில் சீரிஸ் தொடங்குகிறது. இந்தியாவை ஒரு பாதுகாப்பான கைகளில் ஒப்படைக்கும் பொறுப்பு மவுண்ட்பேட்டனுக்கு வழங்கப்படுகிறது.

நேருவின் கையில் பாரதம்

இந்திய சுதந்திரத்துக்கு நாள் குறிக்கப்படும் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்படுகிறார் வல்லபாய் படேல். காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருப்பவரே, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருப்பார் என்பதால், அந்த பதவியை நேருவுக்கு விட்டுக்கொடுக்கச் சொல்கிறார் காந்தி. மறுபேச்சு பேசாமல் நேருவை தலைவராக்குகிறார் வல்லபாய்.

முழுமையான இந்தியாவை காங்கிரஸ் கைகளில் ஒப்படைப்பதற்கு முஸ்லீம் லீக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. இஸ்லாமியர்களுக்கு என்று தனி நாடு வேண்டும். இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் மட்டுமே தீர்வு என்று ஜின்னா கோரிக்கை வைக்கிறார்.

இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ முடியும் எனவே, இந்தியாவை துண்டாக்கக்கூடாது என்கிறார் காந்தி. இதுவே நேருவின் ஆசையாகவும் இருக்கிறது. அதேநேரம், முஸ்லீம்கள் ஆசைப்படும் வகையில் பாகிஸ்தானை பிரித்துக் கொடுத்துவிட்டால் தலைவலி குறைந்துவிடும் என்று வல்லபாய் படேல் நினைக்கிறார்.

இந்தியாவை பிரிக்கக்கூடாது என்று காந்தியும் நேருவும் நினைக்கிறார்கள். பிரிப்பதே தீர்வு என ஜின்னாவும் படேலும் நினைக்கிறார்கள். இந்த நான்கு தலைவர்களையும் சரிக்கட்டி ஒரு நல்ல முடிவு கொடுப்பதற்கு மவுண்ட்பேட்டன் என்னவெல்லாம் செய்தார் என்பதையே ஒவ்வொரு அத்தியாயமும் விவரிக்கிறது.

காந்தியின் தோல்வி

காந்தி என்ன சொல்கிறாரோ, அதுவே காங்கிரஸ் கட்சியின் வேதவாக்கு என்று இருந்துவந்த நேரத்தில், இந்த பிரிவினையில் முதல் தோல்வியை அவர் சந்திக்கிறார்.

இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் போதிய அங்கீகாரம் இல்லை, இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்று முகமது அலி ஜின்னா குற்றம் சாட்டி தனி நாடு மட்டுமே தீர்வு என்பதில் உறுதியாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் இஸ்லாமியர்களுக்குப் போதிய அங்கீகாரம் இருக்கிறது. இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தியாவில் அமைதியாக வாழ முடியும், அதற்கான உத்தரவாதத்தை காங்கிரஸ் கொடுக்கும் என்று காந்தியும் நேருவும் உறுதியளிக்கிறார்கள். ஆனால், ஜின்னா பிடிவாதம் பிடிக்கிறார்.

இந்த நேரத்தில் ஒரு புதிய தீர்வை காந்தி முன்வைக்கிறார். அதாவது ஜின்னாவின் கையில் இந்தியாவை கொடுத்துவிடலாம், அவர் இந்தியாவை உடையாமல் பாதுகாப்பார் என்கிறார் காந்தி.

ஜின்னாவுக்கு எதிர்ப்பு

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக காங்கிரஸ் தலைவர்கள் வருடக்கணக்கில் சிறையில் வாடியிருக்கிறார்கள். போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், நாட்டு சுதந்திரத்திற்கு எந்த தியாகமும் செய்யாமல் முஸ்லீம்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் ஜின்னாவின் கையில் நாட்டைக் கொடுப்பது அர்த்தமற்ற செயல் என்று நேருவும், வல்லபாயும் ஒன்றாக சேர்ந்து காந்தியின் திட்டத்தை முறியடிக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் காந்தியின் தோல்வி இங்குதான் ஆரம்பமாகிறது. காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தின் மீது விருப்பம் வந்துவிட்டது என்று கட்சியிலிருந்து காந்தி விலகிச் செல்கிறார்.  

நாட்டை பிரிக்கும் முடிவு எடுப்பது மிகப்பெரும் சிக்கலாக மாறிவிடும் என்று காந்தி நினைக்கிறார். நாடு பிரிப்பில் வன்முறை வெடித்தாலும் பரவாயில்லை, தனி நாடு முக்கியம் என்று ஜின்னா நினைக்கிறார். இந்தியர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யும் அளவுக்கு வன்முறையில் இறங்குபவர்கள் அல்ல என்று நேரு நம்புகிறார். இந்துக்கள் நிம்மதியாக வாழவேண்டுமென்றால், இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு கொடுப்பதே தீர்வு என்பது வல்லபாய் நிலைப்பாடு. இந்த குழப்பத்தின் இடையில் நாடெங்கும் வன்முறை வெடிக்கிறது.

எனவே, வேறு வழியின்றி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்படுவதற்கு நேருவும் ஜின்னாவும் ஒப்புதல் கொடுக்கிறார்கள். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எந்தெந்த பகுதிகள், இந்தியாவுக்கு எந்தெந்த பகுதிகள் என்று பிரிப்பதில் மோதல் ஆரம்பமாகிறது.

இடமாற்றம்

பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் இந்துக்கள் இந்தியாவுக்குத் திரும்பவேண்டும், இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்குப் போகவேண்டும் என்று போராட்டம் வெடிக்கிறது. இந்து, முஸ்லீம், சீக்கியர்கள் என எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள். நாடெங்கும் கலவரங்கள், எல்லா பக்கமும் உயிர்ப்பலிகள். ராவல்பிண்டி, கல்கத்தா தீக்கிரையானது.

இந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் கலவரக் காட்சிகள் கருப்பு வெள்ளையாகப் படமாக்கப்பட்டுள்ளது. நிறைய இடங்களில் அந்த காலத்தின் ஒரிஜினல் புகைப்படங்களுடன் புதிய காட்சிகள் பொருத்திக் காட்டப்படுகிறது. இந்த பிரிவினை காலத்தில் நடந்த கலவரங்கள் மற்றும் அகதிகளின் துயரங்களும் நெஞ்சை பதறச் செய்கின்றன.

உயிர் பெற்ற தலைவர்கள்

இந்த சீரிஸின் மிகப்பெரிய பலம் என்றால் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, முஹம்மது அலி ஜின்னா போன்ற வரலாற்று நபர்களின் தேர்வு. நிஜமாகவே அந்தக் காலத்தில் வாழ்வது போன்று கலை இயக்கம், உடை வடிவமைப்பு ஆகியவற்றில் முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

பாடப்புத்தகங்களில் படிக்காத, நாம் கேள்விப்படாத நம் நாட்டின் வரலாற்றை திரும்பிப் பார்க்கையில் மனது வலிக்கிறது. பாகிஸ்தானுக்காக கடுமையாகப் போராடிய ஜின்னா, நாடு பிரிக்கப்பட்டதும் அதுவரை வாழ்ந்த பம்பாய் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும் என்பதை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார். இவருக்கே இந்த நிலை என்றால், இத்தனை காலமும் சொந்த வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்களை, திடீரென இடப்பெயர்வு என்று விரட்டியடிப்பது எத்தனை பெரிய துயரம்.

நாடு கிழிக்கப்பட்டதால் நிகழ்ந்த வன்முறைகளைப் பார்வையிட வரும் காந்திக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனாலும், தைரியமாக முன்னேறுகிறார். அவர் வரும் பாலத்தை உடைக்கிறார்கள். காந்தி தண்ணீரில் இறங்கி அவர்களுடைய இடத்துக்குச் செல்கிறார். ஆனால், அங்கு காந்தி தங்குவதற்கு இடம் மறுக்கப்படுகிறது. மரத்தடியில் அமர்கிறார். மழையில் நனைகிறார். ஆனாலும், அவர் பிடிவாதத்தைக் கைவிடாமல் உறுதியாக இருக்கிறார். அதைக் கண்டு மனம் மாறி காந்தியை தங்களுடன் சேர்த்துக்கொள்கிறார்கள்.

காந்தியின் மரணம்

வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்த காந்தி மத துவேஷத்தில் மாட்டிக்கொள்கிறார். காந்திக்கு இந்துக்களை விட இஸ்லாமியர்கள் மீதுதான் உண்மையான பாசம் இருக்கிறது என்று சுட்டுக் கொல்கிறார்கள். எந்த வன்முறைக்கு எதிராக வாழ்நாள் முழுக்க காந்தி போராடினாரோ, அதே வன்முறைக்கு அவர் பலியாகிறார்.

காந்தி, ஜின்னா, நேரு, படேல் என நான்கு பேரும் நாட்டையும் மக்களையும் நேசித்தவர்கள் என்பது உண்மை. ஆனால், நான்கு பேரும் நான்கு பாதையில் சென்றவர்கள். இவர்கள் அன்றைய நாளில் எடுத்த முடிவுகளால் லட்சக்கணக்கான இந்தியர்களின் உயிர் பறிபோனது, வீடுகள் சூறையாடப்பட்டது. அகதிகளானார்கள்.

இந்திய வரலாற்றில் சொல்லப்படாத கதையை துணிந்து சொன்ன வகையில் இது பாராட்ட வேண்டிய படைப்பு. அதேநேரம், விறுவிறுப்பு குறைவாகவும், டாக்குமென்ட்ரி ஸ்டைலில் நகர்வதும் இன்றைய ஓடிடி ரசிகர்களுக்கு சோர்வு தரலாம். ஆனாலும், இந்தத் தொடரைப் பாருங்கள்.

காந்தியும் அஹிம்சையும் இந்தியாவில் எப்படி தோற்றுப்போனது என்று பாருங்கள். மதம் பிடித்த மனிதர்களே இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

மதத்தில் இருந்து விடுதலை கிடைப்பதே மக்களுக்கு நிஜமான விடுதலை. அந்த நாள் வரும் வரையில் இந்தியாவும் இந்தியர்களும் அடிமைகள்தான்.

Leave a Comment