அவநம்பிக்கையின் களஞ்சியம்!
இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்களின்பேச்சுவார்த்தை, நடவடிக்கையைப் பார்த்து மூத்த தலைமுறை அதிர்ந்து நிற்கிறது. இந்த தலைமுறையின் மனநிலையினை அட்டகாசமாக ஃபேஸ்புக்கில் வடித்திருக்கிறார் டி.தர்மராஜ். இவர், ஜல்லிக்கட்டு என்ற நூலின் ஆசிரியர்.
இனி, அவர் எழுதியிருப்பதைப் படியுங்கள்.
தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே நான் ஒரு விஷயத்தை எச்சரித்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதாவது, வரப்போகிற தலைமுறை, நாம் அறிந்த அல்லது அறிந்திராத தமிழகமாக இருக்கப் போவது இல்லை.
கருத்தியலற்ற அரசியலையும், சமூகநீதி குறித்து கவலைப்படாத கூட்டத்தையும், சூழ்வதையும் கிளர்ச்சியடைவதையும் மட்டுமே அரசியல் செயல்பாடாகக் கொண்ட பெருந்திரளையும் நாம் அரசியல் காரணிகளாக எதிர்கொள்ளப் போகிறோம். இந்த வகைத் தலைமுறை, தலித்தியம், பெண்ணியம், மார்க்சியம், சுயமரியாதை போன்ற எல்லாவகை மக்களரசியலையும் இருந்த சுவடு தெரியாமல் நிர்மூலமாக்கப் போகின்றது. இதையே நான் விரிவாக எனது ‘ஜல்லிக்கட்டு’நூலில் எழுதியிருக்கிறேன்.
இதை எதிர்கொள்வதற்கு நம்மிடம் போதிய தளவாடங்கள் இல்லை என்பது தான் உண்மை. நம்மிடமிருப்பதெல்லாம் இக்கூட்டம் பற்றிய வசைகளும், குற்றச்சாட்டுகளும் தான். அரசியல் பேசுகிற ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக, வீட்டின் மூலையில் புலம்பித் தவிக்கும் கிழடுகட்டைகளைப் போல உருமாறவிருக்கிறோம் என்பதே என் கணிப்பு.
இந்தத் தலைமுறையினருக்கு அரசியலைப் போதித்து விட முடியும் என்று சிலர் நம்பிக்கை கொள்வது இன்னொரு வேடிக்கை. எந்தவொரு போதனைக்கும் புதிய தலைமுறையிடம் இடம் இல்லை. நாம் சமூக நீதி என்று நினைப்பதை அவர்கள் கட்டுப்பெட்டித் தனமாகக் கருதுகிறார்கள் என்பது தான் நிஜம்.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். புதிய கல்வித் திட்டத்தின் மூலம், படிப்பை எந்தத் தருணத்திலும் நிறுத்திக் கொள்ளும் சுதந்திரத்தை மாணவர்களுக்கு வழங்குவது, அவர்களின் கல்வி கற்கும் உரிமையைப் பாதிக்கும் செயல் என்று நாங்களெல்லாம் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறோம். எதைக் கற்பது, எப்படிக் கற்பது என்ற சுதந்திரத்தை மாணவர்களுக்கு வழங்குது ஆபத்தானது என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், நமது மாணவர்கள் இந்த சுதந்திரமே தங்களது வாழ்வுரிமை என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். கல்விக்காக நீண்ட காலத்தை செலவிடுவது விரையம் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். கல்வியின் பயன் விழுமியங்களைக் கற்றுக் கொள்தல் இல்லை என்று பேசுகின்றனர். உடனடியாகப் பணம் தரும் வாய்ப்பு எது என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சீக்கிரத்தில், இந்த மாணவர்களே கூட புதியக் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்தச் சொல்லி வீதியில் திரளக்கூடும். இது தான் உண்மை நிலவரம்.
இத்தகைய நபர்களையே தவெக தனது களவீரர்களாகக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் இல்லை என்றாலும், அடுத்தடுத்த வாய்ப்புகளில் இவர்களின் எண்ணிக்கையும் ஆதரவும் கூடும்; அன்றைக்கு மக்களதிகாரம் அவர்களிடம் சென்று சேரும். அப்பொழுது கொடூரமாக வஞ்சிக்கப்படப் போவது, கருத்தியலைத் தவிர வேறொன்றையும் நம்ப வழியற்ற தலித்துகளும், பெண்களூம், ஏழைகளும் மட்டுமே. மரபாகப் புறக்கணிக்கப்பட்ட இம்மக்களுக்கான மேம்பாடும் கூட கேளிக்கையாக மட்டுமே அன்று எஞ்சி நிற்கப் போகிறது. தெருவோரப் பிச்சைக்காரர்களுக்கு உணவளிப்பதும், அவர்களில் அழுக்கானவர்களுக்கு புத்தாடை அணிவித்துப் பார்ப்பதும், அவர்களை ஒரு நொடியில் பிரபலமாக மாற்றிக் காண்பிப்பதுமே இனி புரட்சிகர நடவடிக்கையாக இருக்கப் போகிறது.
இந்த மோசமான சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதே என் கேள்வி. இந்தத் தேர்தலில் ஒரு வேளை திமுக வெற்றி பெற்று வந்தால், இத்தகைய திரளுக்கு அரசியல் போதிக்கவும், சமூக நீதி பாடம் எடுக்கவும் பலர் தயாராக இருக்கிறார்கள்.
திமுக அரசாங்கம் கூட அதற்கெனக் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்ககூடும். இதனால், சமூக நீதி பேசும் சில நபர்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைக்க முடியும்; சமூக நீதி பரப்புரை ஆணையம் என்பது போல ஏதாவது உருவாகக்கூடும்.
ஆனால், இதற்கு இணையாக, திமுக இன்னொரு காரியத்தையும் செய்து கொண்டிருக்கும் என்பது தான் வரலாறு. நாமே எதிர்பாராது, திமுகவினர் இந்த பெருந்திரளைக் கவர்வதற்காக தன்னைத்தானே மாற்றிக் கொள்ள ஆரம்பிப்பார்கள். பெரியாரின் பல்வேறு நிலைப்பாடுகளை வெகுஜன அரசியலுக்காக சமரசம் செய்து கொண்டது போல, இப்புதியத் திரளுக்காக திமுக தன் நிறத்தை மாற்றிக் கொள்வது வெகுவிரைவில் நடக்க ஆரம்பிக்கும். எம்ஜியாரின் கவர்ச்சியை முறியடிக்க, திமுக இன்னொரு கவர்ச்சியை நாடியதைப் போல, விஜய்யின் ஈர்ப்பை தகர்க்க இன்னொரு ஈர்ப்பாக தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கும். அது ராஜதந்திரம் என்பது போல சப்பைக்கட்டு கட்டப்படும். அதற்கான அத்தனை சமிக்ஞைகளையும் நாம் இந்தத் தேர்தலில் பார்த்து விட்டோம்.
இந்த சூழலில், கருத்தியலை மட்டுமே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் வெகு சிலரோடு நானும் நின்று கொண்டிருக்கிறேன் என்பது தான் நிதர்சனம். இச்சிறு கூட்டம், இன்னமும் கலையை இலக்கியத்தை எழுத்தை வாசிப்பை விவாதத்தை உரையாடலை மிகப்பெரும் அறிவுச் செயல்பாடாக நம்பிக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கை தங்களை உன்னதமாக்கும் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறது.
தன்னைத் திரளில் கரைத்துக் கொள்ளத் தெரியாத அல்லது திரள்வது குறித்து அலுப்பு கொள்ளுகிற சொற்பமான நபர்கள் யாருக்கென்று தெரியாமல் எழுதவும் பேசவும் செய்கிற காலம் வந்து கொண்டிருக்கிறது.
