60 வயதினருக்கு 50 உளவியல் ரூல்ஸ்
பொதுவாக 60 வயதுக்குப் பிறகு மனிதர்களின் மனோபாவம் பரிதாபமாகிவிடுகிறது. அதுவும் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் ரொம்பவே சோர்ந்துவிடுகிறார்கள். இனிமேல் வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம் அல்லது எதற்காக வாழ்கிறோம் என்ற தெளிவு இருப்பதில்லை.

இளம் வயதில் இன்னும் கொஞ்சம் இன்பம் அனுபவித்திருக்கலாம், நிறைய ஊர்கள் சுற்றிப் பார்த்திருக்கலாம். புதிய முயற்சிகள் செய்திருக்கலாம் என்று முடிந்துபோன விஷயங்களை நினைத்து கவலைப்படுகிறார்கள்.
50 கட்டளைகள்
முதியவர்கள் எதற்காகவும் கலங்குவதற்கு அவசியமே இல்லை என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த உளவியல் மருத்துவரான ஹிடேகி வாடா. முதுமையைத் தொட்டவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான 50 கட்டளைகளை, ‘த 80 இயர் ஓல்டு வால்’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இவற்றை கடைபிடித்துப் பாருங்கள், வாழ்க்கை புதிதாகத் தெரியும்.
1. தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருங்கள்.
2. கோபம் வரும்போது ஆழமாக மூச்சு விடுங்கள்.
3. உங்கள் உடல் இறுக்கம் அடைந்துவிடாத வகையில் தினமும் மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள்.
4. கோடை காலத்திலும், குளிர் அறையிலும் அதிக தண்ணீர் குடியுங்கள்.
5. தேவைப்படும் சமயத்தில் கூச்சப்படாமல் டயப்பர் அணிந்துகொள்ளுங்கள்.
6. எவ்வளவு அதிகமாக மென்று சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக மூளையும் உடலும் சுறுசுறுப்பாக இருக்கும்.
7. ஞாபக மறதிக்குக் காரணம் வயதல்ல, மூளையைப் பயன்படுத்தாதது மட்டும்தான்.
8. அதிக மருந்துகளை உட்கொள்ளத் தேவையில்லை. மருத்துவர் ஆலோசனையைக் கேட்டு எண்ணிக்கையைக் குறையுங்கள்.
9. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை தேவையில்லாமல் குறைக்கத் தேவையில்லை.
10. தனியாக இருப்பது தனிமையல்ல; அது அமைதியாக நேரத்தைச் செலவிடுவது.
11. சோம்பல் ஒரு அவமானமல்ல.
12. டிரைவிங் லைசென்ஸ் கிடைக்காது என்று வருந்தாதீர்கள், ஓட்டுநர் உரிமத்திற்காக பணம் செலவழிக்கத் தேவையில்லை என்று மகிழ்ச்சி அடையுங்கள்.
13. பிடித்ததைச் செய்யுங்கள்; பிடிக்காததைச் செய்யாதீர்கள்.
14. இயற்கையான ஆசைகள் முதுமையிலும் நீடிக்கின்றன.
15. எந்தச் சூழ்நிலையிலும், எல்லா நேரமும் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டாம்.
16. உங்களுக்குப் பிடித்ததைச் சாப்பிடுங்கள்; லேசான உடல் பருமன் நல்லது.
17. எதிலும் அவசரம் தேவையில்லை. எல்லாவற்றையும் கவனமாகச் செய்யுங்கள்.
18. மனசுக்குப் பிடிக்காதவர்களுடன் பழக வேண்டாம்.
19. எல்லா நேரமும் தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.
20. நோய் மற்றும் வலியுடன் போராடுவதற்குப் பதிலாக, அதனுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
21. முடிவு என்று எதுவுமில்லை, திருப்பத்தில் புதிய வாழ்க்கை காத்திருக்கலாம்.
22. புதிய பழங்கள் மற்றும் சாலட்களைச் சாப்பிடுங்கள்.
23. குளிப்பதற்கு அதிக நேரம் ஒதுக்காதீர்கள்.
24. தூக்கம் வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள், சிந்திக்க நேரம் கிடைத்திருக்கிறது என்று எதையாவது யோசித்தபடி படுத்திருங்கள்.
25. மகிழ்ச்சி தரும் செயல்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன.
26. மனதில் பட்டதைப் பேசுங்கள், அதிகமாக யோசிக்காதீர்கள்.
27. ஒரே மருத்துவரிடம் வைத்தியம் பாருங்கள்.
28. அதிக பொறுமையும் வேண்டாம், அதிக பிடிவாதமும் வேண்டாம்.
29. சில சமயங்களில் மனதை மாற்றிக்கொள்வது சரியானதுதான்.
30. மறதியை நோயாகப் பார்க்காதீர்கல். இதுவும் ஒரு வரம்.
31. எதையாவது கற்றுக்கொள்ளுங்கள். கற்பதை நிறுத்துபவருக்கே வயதாகிறது.
32. புகழுக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் ஏங்க வேண்டாம்.
33. பிள்ளைகளுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைக்காதீர்கள், அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
34. யாரும் கேட்காமல் ஆலோசனை கொடுக்காதீர்கள்.
35. சூரியக் குளியல் நல்லது, தினமும் கொஞ்ச நேரம் வெயிலில் நில்லுங்கள்.
36. மற்றவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய முடிந்தால் மகிழ்ச்சியுடன் செய்யுங்கள்.
37. இன்றைய நாளை வசதியாகக் கொண்டாடுங்கள்.
38. ஆசைதான் நீண்ட ஆயுளுக்கான திறவுகோல்.
39. எல்லாவற்றையும் மகிழ்ச்சியாகப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
40. ஆழமாகவும் எளிதாகவும் சுவாசியுங்கள்.
41. அவமானம் என்று எதுவும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
42. எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
43. மகிழ்ச்சியாக இருப்பவர்களை யாரும் புறக்கணிக்க மாட்டார்கள். .
44. எல்லோரிடமும் புன்னகை செய்யுங்கள்.
45. குறைவாக உண்ணுங்கள், அதிகம் தூங்குங்கள்.
46. பேசுவதற்கும் பழகுவதற்கும் ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
47. படுக்கையிலிருந்து உடனே எழவேண்டாம். நிதானமாக எழுந்து, நிதானமாக நடங்கள்.
48. பிள்ளைகள் செய்யும் தவறை சுட்டிக்காட்டாதீர்கள், அவர்களே அடிபட்டு திருந்தட்டும்.
49. நோய் அவஸ்தைகளை அடுத்தவர்களிடம் காட்டாதீர்கள்.
50. மரணம் என்பது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்றே நம்புங்கள்.
வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே. எத்தனையோ நபர்கள் 60 வயதைத் தொட முடியாமல் இறந்திருக்கிறார்கள், அவர்களை விட அதிர்ஷ்டசாலி என்று நம்புங்கள். வாழ்க்கை இனிப்பாக இருக்கும்.
