ஞானகுரு பதில்கள்
கேள்வி : சிறந்த வாழ்க்கை ஆன்மிகமா..? குடும்ப வாழ்வா? எந்த வயதில் ஆன்மிகத்தில் இறங்க வேண்டும்..?
- எஸ்.ரவிச்சந்திரன், பெத்தனாட்சி நகர்.
ஞானகுரு :
எல்லா வசதிகளும் இருந்தாலும் புத்தருக்கு குடும்ப வாழ்க்கை இன்பமாக இல்லை. வாழ்க்கையின் உண்மையை அறிந்துகொள்ள ஆசைப்பட்டார். அதனாலே சுகபோகங்களை வெறுத்து இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டார். சந்தோஷமான சராசரியான குடும்ப வாழ்க்கை புத்தருக்குப் பிடிக்கவில்லை.
எத்தனையோ மனிதர்கள் குடும்பத்தை உதறிவிட்டு ஆன்மிகத்தில் நுழைந்து சாமியாராகிறார்கள். ஆனால், அவர்கள் குடும்பத்தை உதறினாலும் அவர்களுக்கென ஒரு கும்பலுடன் இணைந்தே வாழ்கிறார்கள். இப்படி கும்பலாக வாழ்வதே அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.
ஆனால், குடும்ப வாழ்க்கையை ஜெயிக்க முடியாத ஒருவரால் எப்போதும் ஆன்மிகத்தை அறிந்துகொள்ளவே முடியாது. குடும்ப வாழ்க்கை என்பது பள்ளிப்படிப்பு. இதை படிக்காமல் நேரடியாக கல்லூரிக்குள் நுழைய முடியாது. எனவே, முதலில் குடும்ப வாழ்க்கையை நன்கு அனுபவியுங்கள். ஆன்மிக வாழ்க்கை என்பது ஒரு போலி நம்பிக்கை, அதை நம்பி ஏமாந்து போகாதீர்கள்.
