ஏப்ரல் 5 தேசிய கடல்சார் தினம்
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கப்பல் வந்துவிட்டது, வளைகுடா நாடுகளிலிருந்து கப்பல் வந்துவிட்டது என்பதெல்லாம் இப்போது மக்களுக்கு ரொம்பவே நிம்மதி தருகிறது. ஏனென்றால் ஒரு கப்பலில் அவ்வளவு அதிகம் கொண்டுவர முடியும்.
பஸ், ரயில், விமானப் பயணங்களைவிட கப்பல் மூலமே அதிக அளவு ஏற்றுமதி, இறக்குமதி நடக்கிறது. பண்டைய காலத்தில் இருந்தே இந்தியர்கள் கப்பல் மூலம் கடல் வணிகம் செய்திருக்கிறார்கள். ஆனாலும் 1919-ம் ஆண்டுதான் இந்திய கடல் வணிகத்திற்கு முக்கியமான ஆண்டாக குறிக்கப்படுகிறது.
ஆம், இன்றைய தினம் அதாவது ஏப்ரல் 5, 1919-ம் ஆண்டு இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான எஸ்.எஸ்.லாயல்டி – மும்பையில் இருந்து லண்டனுக்குப் பயணம் செய்தது. இதனை நினைவுகூறும் வகையில்தான் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 தேசிய கடல்சார் தினமாக கொண்டாடப்படுகிறது.
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அதாவது சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதில், கப்பல் போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுவதில் 90 சதவிகிதம் கப்பல் போக்குவரத்து மூலமே நடக்கிறது. அதனால் இந்திய கடல் எல்லைகள் மற்றும் கப்பல் போக்குவரத்தை சக்தி வாய்ந்த அமைப்பாக மாற்றுவதற்கான அவசியத்தை இந்த நாள் எடுத்துச் சொல்கிறது.
கப்பல்துறையின் தேவை, கடல் சார்ந்த வேலைவாய்ப்புக்கள் மற்றும் கடற்படை குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் இன்றைய தினம் பயன்படுகிறது.
