அறிவியலா… ஆன்மிகமா..?
ராமேஸ்வரம் சென்று வருபவர்கள் நிச்சயம் மிதக்கும் பாறையைப் பார்த்து ரசித்திருப்பார்கள். இதை ஆன்மிக அதிசயம் என்று வியக்கிறார்கள், போற்றி வணங்குகிறார்கள்.
இது பார்ப்பதற்கு பாறை போன்று தெரிந்தாலும், தொட்டுப்பார்த்தால் மென்மையாக இருக்கும். இதை தூக்கிப் பார்த்தால் எடை இல்லாமல் லேசாகத்தான் இருக்கும்.
உண்மை என்னவென்றால் இது, கல்லால் ஆன பாறை அல்ல, பவளப் பாறை என்ற அறிவியல் பெயரில் அழைக்க வேண்டும். ஜெல்லி மீன் இனத்தைச் சேர்ந்த பவளம் என்று அழைக்கப்படும் உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட் ஒன்றுசேர்ந்து இப்படி பவளப் பாறையாக மாற்றம் அடைகிறது.
இந்த பவளப் பாறைகளைச் சுற்றி ஏராளமான மீன் இனங்களும் சின்னஞ்சிறு உயிரினங்களும் வசிக்கின்றன.
இந்த பவளப் பாறைகளை ஆதாயத்துக்காக மனிதர்கள் வெட்டி எடுப்பதால், கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் சொல்கிறார்கள். நம் நாட்டைப் பொறுத்தவரை அந்தமான் மற்றும் லட்சத் தீவுகளில் இந்தப் பவளப் பாறைகள் நிறைய காணப்படுகின்றன. இது இயற்கையின் ஆச்சர்யமே தவிர, ஆன்மிக அதிசயம் எதுவும் இல்லை.
