வாய்ப்பு எப்படி வரும் என்று தெரியுமா?

நாகேஷ் சக்சஸ் ரகசியம்

வாய்ப்பு என்பது கிடைப்பதற்கு அரியது. அதனால் கிடைக்கும்போது அதனை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால் அப்படிக் கிடைக்கும் வாய்ப்புகளை மிகச்சரியாகப் பயன்படுத்தி வெற்றி காண்பது ஒரு சிலர்தான்.

அவர்களில் ஒருவர்தான் நகைச்சுவை நடிகர் நாகேஷ். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே, அவரது சினிமா வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

நடிப்பதற்கு ஆசைப்பட்டு சென்னைக்கு ஓடிவந்த நாகேஷ் ஒரு நாடக கம்பெனியில் கெஞ்சிக் கூத்தாடி வேலைக்குச் சேர்ந்தார். நடிப்பதற்கு உடனே வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கும் கெஞ்சிக்கூத்தாட வேண்டியிருந்தது. நாகேஷ் ரொம்பவும் கேட்டுக்கொண்டதால், நாடகத்தில் ஒரே காட்சியில் வரும் வயிற்று வலிக்காரன் கேரக்டர் கிடைத்தது.

டாக்டர் பரிசோதிக்கும்போது, ‘வயிறு வலிக்கிறது’ என்று சொல்லவேண்டியது மட்டும்தான் நாகேஷுக்கு கொடுக்கப்பட்ட டயலாக்.

நாடகத்தில் தோன்றிய நாகேஷ், வயிற்று வலிக்காரன் போன்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு உடலை வளைத்து, நெளித்து நடித்ததைப் பார்த்து நாடகக் கொட்டகையே கை தட்டியது.

அன்றைய நாடகத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்.ஜி.ஆர்., ‘ஒரே காட்சியில் வந்தாலும் எல்லோரையும் சிரிக்க வைத்துவிட்டார்’ என்று நாகேஷைப் பாராட்டினார். அதன்பிறகு நாகேஷ் இல்லாத நாடகம் இல்லை என்ற நிலையே ஏற்பட்டுவிட்டது. வாய்ப்புகள் சிறியது, பெரியது என்று பாரபட்சம் பார்க்காமல், கிடைத்ததை சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது.

Leave a Comment