மார்ச் 26 – பங்களாதேஷ் சுதந்திர தினம்
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, அது பாகிஸ்தான் – கிழக்கு பாகிஸ்தான் என்று இந்தியாவின் இரண்டு பக்கமும் பிரிந்து இருந்தது. கிழக்குப் பாகிஸ்தானுக்குப் போதிய நிதியுதவி கொடுக்கவில்லை, உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை, வங்காள மொழிக்கு உரிய அந்தஸ்து கொடுக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு மீது மக்கள் கோபமாக இருந்தார்கள்.
மேலும் கிழக்கு பாகிஸ்தானில் வெற்றி பெற்ற அவாமி லீக் கட்சியை பதவியேற்க விடாமல் தடை செய்தது பாகிஸ்தான். இதுபோன்ற காரணங்களால் பாகிஸ்தான் அரசு மீது மக்கள் பெரும் கோபத்திலும் வருத்தத்திலும் இருந்தார்கள்.
இந்த நேரத்தில் கிழக்கு பாகிஸ்தானைத் தாக்கிய சூறாவளி, ஏராளமான மக்களை உயிரிழக்கச் செய்தது. இதற்கு உரிய நிவாரணம் கொடுக்கவும் பாகிஸ்தான் அரசு முன்வரவில்லை. இதனால் கிழக்குப் பாகிஸ்தானில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது.
1971-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதியான இன்று, ‘இன்று முதல் எங்கள் நாடு வங்காள தேசம்’ என்று அழைக்கப்படும் என்று பிரிவினை கிழக்கு பாகிஸ்தானில் அறிவிக்கப்பட்டது. உடனே பாகிஸ்தான் தனது தாக்குதலைத் தொடங்கியது. இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாகத்தான் பாகிஸ்தான் இந்தியா மீதும் போர் தொடுத்தது.
இதனால் கோபமடைந்த இந்திராகாந்தியின் உத்தரவினால் இந்திய ராணுவம் செய்த உதவி காரணமாக வங்காளதேசம் தனி நாடாக மலர்ந்தது. போர் முடிவடைந்து வங்காளதேசம் முழு விடுதலை அடைந்தது டிசம்பர் 16-ல் என்றாலும், மார்ச் 26 அன்றுதான் சுதந்திர பிரகடனம் செய்யப்பட்டது என்பதால், இதுவே திருப்புமுனை நாளாக கருதப்படுகிறது.
