தணிக்கை துறையிலும் ஒரு புரட்சி

என்ன செய்தார் சைதை துரைசாமி – 471

மேயர் சைதை துரைசாமியின் 207 சாதனைத் திட்டங்களைப் பார்த்திருக்கிறோம். அதேநேரம், அவர் நிர்வாகத்திறமைக்கு தணிக்கைத் துறை சான்றளித்த அதிசயமும் அவருடைய காலத்தில் நடந்தேறியது.

பொதுவாகவே, தணிக்கைத் துறை என்றாலே அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அச்சப்படுவார்கள். அதுவும் அரசு பதவியில் இருப்பவர்கள் எல்லோருமே தணிக்கை என்றாலே வேண்டாவெறுப்பாகவே அணுகுவார்கள்.

மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் அமைப்புகளின் வரவு – செலவுக் கணக்கை சரிபார்க்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக தணிக்கைத் துறை இருக்கிறது. தேர்தல் கமிஷன் போன்று இதுவும் மத்திய அல்லது மாநில அரசுகளுக்குக் கட்டுப்படாத அமைப்பு ஆகும். கணக்குவழக்கில் தில்லுமுல்லு செய்தவர்கள் மற்றும் நிர்வாகத் திறன் இல்லாதவர்கள் மட்டும்தான், இந்தத் துறையைக் கண்டு அச்சப்படுவார்கள்.

அனைத்து மாநகராட்சிகளின் கணக்குவழக்குகளைப் பார்த்து சீர்செய்யும் அதிகாரம் தணிக்கைத் துறைக்கு உண்டு. மாநகராட்சியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு துறையிலும்  நடைபெற்ற பணிகள் சரியாகவும்,  முறையாகவும்,  மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளபடி  அனைத்துப் பணிகளும் உண்மையாக  நடைபெற்றுள்ளதா  என்பதை ஆய்வு செய்து, தணிக்கைச்  சான்றிதழ்  வழங்குகிறது.

ஏதேனும்  பணியில் தில்லுமுல்லு செய்யப்பட்டது கண்டறியப்பட்டால்,  தணிக்கைத் தடைகள் எழுப்பப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அலுவலர்கள் விளக்கம் தரமுடியவில்லை என்றால், மாநகராட்சிக்கு  நிதியை  இழப்பீடு செய்ததற்காக ஒழுங்கு நடவடிக்கை, பணியிடை நீக்கம், சம்பளப் பிடித்தம்  போன்ற  தண்டனைகள் வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும்.

மக்கள் பணத்தை திறம்பட பயன்படுத்தும் நற்செயலுக்குப் பாராட்டும், தவறுகளுக்கு குட்டும் வைக்கும் மிகப்பெரும் அதிகாரம் தணிக்கைத் துறைக்கு உண்டு . மாநகராட்சியில்  பணிகள் தரமாக  நடைபெறவும், வரவு செலவுகளை அலசி ஆராய்ந்து,  தவறான பாதையைக்  கண்டுபிடித்து மாநகராட்சிக்கு   இழப்பு ஏற்படாதவகையில் நிதியைக்  கண்காணிக்கும் பணியை தணிக்கைத் துறை செய்கிறது.

இந்த தணிக்கை துறையை மேயர் சைதை துரைசாமி எப்படி கையாண்டார் என்பதைப் பார்க்கலாம்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment