மனிதருக்கு சமம் ஆனதா பூச்சிகள்?

இயற்கை மகத்துவம்

மனிதர்கள் இந்த பூமியை தாங்கள் மட்டுமே வாழும் இல்லமாகப் பார்க்கிறார்கள்.  தங்களைத் தவிர இங்கு வாழ்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பது போல் காடுகளையும், நதிகளையும், பறவைகளையும், மிருகங்களையும், இயற்கை செல்வங்களையும் அழித்து வருகிறார்கள்.

வண்ணத்துப் பூச்சிகளை முன்பு நம் ரோட்டோரத்து மரங்களில், செடிகளில், பூக்களில் பார்க்கமுடியும், ரசிக்க முடியும். நாம் நடந்து சென்றால் நம்மோடு உரசிக்கொண்டே வரும். ஆனால் இன்று அவற்றை தொலைக்காட்சி பெட்டிகளிலும் உயிரியல் பூங்காக்களிலும்தான் பார்க்க முடிகிறது.

அதே போன்று வெளிச்சம் இல்லாத ராத்திரிகளில் நம் வீடுகளுக்கு வெளிச்சத்தை சுமந்துகொண்டு வருவதுண்டு, மின்மினிப் பூச்சிகள். அவற்றை இப்போது எங்கு தேடினாலும் காண முடிவது இல்லை. குருவிகள் முட்டை போட்டு குஞ்சு பொரிப்பது என்பது அனைத்து வீடுகளிலும் சாதாரணமாகவே நடக்கும். குழந்தைகள் அதனைப் பார்த்து ஆனந்தப்படுவதும், அதற்கு உணவு கொடுத்து சீராட்டி வளர்ப்பதும் உண்டு.

ஆனால் இன்று எந்தப் பூச்சியும் பறவையும் வீடுகளுக்குள் நுழைந்துவிடக் கூடாது என்று ஜன்னல், கதவுகளை மட்டுமின்றி நமது மனதையும் மூடி வைக்கிறோம். அதனால்தானோ என்னவோ ஒரு கட்டெறும்பைப் பார்த்தால்கூட, நம் வீட்டுப் பிள்ளைகள் அலறுகிறார்கள். மனிதர்களுடன் இணைந்து வாழ்ந்துவந்த சின்னச் சின்ன உயிர்கள் எல்லாம் எங்கே போயின?

வெட்டுகிளி, பொன்வண்டு, அணில், சிட்டுக் குருவி, கம்பளி பூச்சி, மண் புழு, பட்டாம்பூச்சி, அக்கக்கா குருவிகள், தவளை, நத்தை, நாட்டுக்கோழி போன்றவை எல்லாம் மனிதர்களோடு இணைந்து வாழ்ந்த காலம் எல்லாம் போயே விட்டன. வீடுகள் தோறும் கோழி வளர்ப்பார்கள். குழந்தைகள் ஒவ்வொரு கோழிக் குஞ்சுகளுக்குப் பெயர் வைத்து அழைப்பார்கள். தன்னுடைய கோழி என்று தனியே உணவு வைத்து அன்பு செலுத்துவார்கள். இன்று கோழி என்றாலே சாப்பிடும் உணவு என்று மாறிவிட்டதே தவிர, ஆதரவு தேடும் உயிரினமாகப் பார்க்கும் எண்ணம் எவரிடத்திலும் இல்லை.

இன்று மனிதர்கள் ஆர்வத்துடனும் ஆசையுடனும் வளர்ப்பது நாயை மட்டும்தான். அதனால் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது, தனிமை தீர்கிறது என்ற எண்ணத்தில்தானே தவிர, ஜீவகாருண்யம் காரணம் அல்ல. எல்லா மிருகங்களையும் ஏதாவது ஒரு விடுமுறை தினத்தில் மிருகக் காட்சி சாலையில் போய் பார்த்தால் போதும் என்ற நிலையில்தான் மனிதர்கள் இருப்பதால், அந்தச் சின்னஞ்சிறு உயிர்கள் எல்லாம் இந்தப் பூமியை விட்டே சென்றுவிட்டன.

உண்மையில் இந்த பூமி என்பது மனிதர்கள் மட்டும் வாழத்தானா? மற்ற உயிர்களுக்கு எல்லாம் இங்கு வாழ உரிமை இல்லயா? சின்ன உயிர்களை எல்லாம் மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காக அழித்து ஒழிப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல.

நம்மைப் போலவே அனைத்து உயிர்களும் இந்த உலகத்திற்கு வந்திருக்கும் விருந்தாளிகள். மனிதர்களைப் போலவே மற்ற உயிரினங்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் சம பங்கு இருக்கிறது. இயற்கையை அழிக்காமல் வாழ்வதே மனிதம்.

Leave a Comment