உயிர் குடுத்தது கடவுள் இல்லைன்னா, யாரு….?!

கண்ணால் காண்பதே உண்மை

உயிர் எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பது இன்று வரை மர்மமாகவே இருப்பதாலே, கடவுள் கொடுக்கிறார், அவரே எடுக்கிறார் என்று சொல்கிறார்கள்.

உயிர் உருவாவதற்கு அறிவியலும் உயிரியலும் சில வேதிவினைகள் புரிவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இப்படியெல்லாம் குழப்பம் தேவையா..? நமக்கு உடலும் உயிரும் கொடுத்தவர்கள் பக்கத்தில் இருக்கிறார்கள். ஆம், அம்மாவும் அப்பாவும் சேர்ந்துதானே இந்த உடலும் உயிரும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு சட்டை வாங்கிக்கொடுத்த உறவினரைக் கொண்டாடுகிறோம்… கடன் கொடுத்த நண்பரைப் பாராட்டுகிறோம். ஆனால், நமக்கு உயிரும் உடலும் கொடுத்த பெற்றோருக்கு நன்றி செலுத்துகிறோமா? எத்தனை நாட்கள் எந்த வாடகையும் கொடுக்காமல் தாயின் வயிற்றுக்குள் குடி இருந்தோம்… அதற்கு என்ன நன்றிக்கடன் செலுத்தினோமா?

அதனால் நமது உயிருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், முதலில் நம் பெற்றோரை மதிக்க வேண்டும். அவர்களை நம் கண் போன்று மதித்துக் காப்பாற்ற வேண்டும். அதுதான் நாம் உயிருக்குக் கொடுக்கும் மரியாதை.

உயிரைப் போலவே நம் உடலுக்கும் மரியாதை கொடுக்கவேண்டும். ஏனென்றேன் உயிரைச் சுமந்து நிற்கும் பாத்திரம் இந்த உடல்தானே. இந்த உடலை நாம் கொண்டாடவேண்டுமே தவிர கெடுத்து குட்டிச்சுவராக்கக் கூடாது. புகையிலை, மது, பாக்கு என்று உடலுக்கு ஆபத்து தரும் பொருட்களை எல்லாம் சாப்பிடுபவர்களுக்கு உடல் மீதும் உயிர் மீதும் அக்கறையும் இல்லை, அன்பும் இல்லை என்றுதான் அர்த்தம். அதனால்தான் அவர்களின் உடலைவிட்டு உயிர் வெளியேறத் துடிக்கிறது.

Leave a Comment