ஞானகுரு பதில்
மனிதர்கள் கூடி வாழும் இயல்பைச் சேர்ந்தவர். பாதுகாப்புக்காக மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு இது. அதேநேரம், ஒவ்வொரு மனிதரும் சுதந்திரத்தை விரும்புபவர்கள். எல்லோரும் தனக்கு சேவையும் சேவகமும் செய்யவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்.
இங்கு மனைவி, கணவன், அண்ணன், தம்பி, மாமா என்ற எல்லா உறவுகளுமே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவுவதற்கு படைக்கப்பட்டவை மட்டுமே. யாரும் யாருக்கும் முழுமையாக உதவி செய்வது இல்லை.
எத்தனை பாசமான உறவு என்றாலும் ஒருவர் செத்துவிட்டார் என்பதற்காக யாரும் சாவதில்லை. கணவன், மனைவி, பிள்ளைகள் என யார் செத்தாலும் மற்றவர்கள் தேம்பித் தேம்பி அழுதபடி உயிரோடு தான் இருப்பார்கள்.
அதேநேரம், மனிதரின் இந்த குணம் தவறு அல்ல. ஏனென்றால், உயிர் வாழப் போராடுவதற்காகவே இந்த உடல் படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் மற்றவர்களை வேஷக்காரர்கள் என்று சொல்வது போன்றே, அவர்கள் உங்களையும் வேஷக்காரர் என்றே நினைப்பார்கள்.
எனவே, இங்கு யாருடைய அன்பும் நிலையானது இல்லை. அதிகம் அன்பு முதலீடு செய்தால் நிறைய ஏமாற்றம் கிடைக்கும். எனவே, எல்லோரிடமும் அன்பாக இருங்கள். அதேநேரம், கொஞ்சம் விலகியே இருங்கள். அன்பு கொடுப்பதில் இன்பம் காணுங்கள். அன்பு பெறுவதற்கு ஆசைப்படாதீர்கள். கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டாலும் நல்லது என்ற மனநிலையுடன் வாழப் பழகுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.