ஞானகுரு பதில்
காலை எழுந்ததும் குயில் கூவுவதை அதன் மகிழ்ச்சி என்று எடுத்துக்கொள்கிறோம். சேவல் கூவுதலை சுறுசுறுப்பு என்று மொழி பெயர்க்கிறோம். விலங்கு, பறவைகளை பார்க்கும் பார்வை இருக்கிறதே தவிர, அவற்றின் மனதைப் படிக்க முடியாது.
அதனாலே மனிதர்களை விட மற்ற உயிரினங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக நினைக்கிறார்கள். இது ஒரு வகையில், இக்கரைக்கு அக்கரைப் பச்சை. தன் இலையில் விழுந்ததை விட பக்கத்து இலை நண்பனுக்கு பெரிய சிக்கன் துண்டு விழுந்திருப்பதாகவே மனம் நினைக்கும். ஆனால், உண்மை அப்படி இருப்பதில்லை.
உங்களுக்கு என்ன வாழ்க்கை கிடைத்திருக்கிறதோ அதனை அனுபவியுங்கள். இல்லாத ஒன்றுக்கு நடக்காத ஒன்றுக்கும் ஆசைப்படுவதால் எதுவும் ஆகப்போவதில்லை.
ஒரு நாய் ஒரு காகத்தின் செயலை அரை மணி நேரம் உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள். உணவுக்காக எத்தனை அலைச்சல் என்பது புரியும். உங்களுக்கும் கீழே இருக்கும் சில மனிதர்களைப் பாருங்கள். உங்கள் வாழ்க்கை எத்தனை உயர்வானது என்பது தெரியவரும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
