ஞானகுரு பதில்
இந்த கேள்வி ஆழமானது அதேநேரம் ஆபத்தானது. இப்படி பார்க்கத் தொடங்கினால், திருமணம் முடிக்காமலே பிள்ளை பெற முடியும் என்பதற்காக கல்யாணத்தை நிறுத்திவிடலாம்.
போலீஸார் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதால் காவல் நிலையத்தை மூடி விடலாம். தண்ணீர் ஓடவில்லை என்பதற்காக ஆற்றின் பாதையை அடைத்துவிடலாம்.
இப்படி சொல்லிக்கொண்டே போனால் இது போன்ற கேள்விகளுக்கு முடிவே இல்லை. உண்மை என்னவென்றால் கல்வி என்பது இத்தனை காலமும் வாழ்ந்த மனிதர்களின் ஒட்டுமொத்த உழைப்பு. அத்தனை மனிதர்களின் அறிவும் ஒன்றிணைந்து பாடத்திட்டமாக மாறியிருக்கிறது.
கல்வி என்பது அறியாமையைப் போக்கும் விளக்கு. கல்வி இல்லையென்றால் எல்லா மனிதர்களாலும் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது. கல்வி கற்ற மனிதர்களே புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்தத் தெரியாமல் இருக்கிறார்கள் என்றால், கல்வி கல்லாத மனிதர்களை என்ன செய்ய முடியும்.
மனிதர்கள் இயற்கைக்குத் திரும்பாத வரை கல்வி அவசியம். சிலர் கல்லாமலே அறிவாளியாக மாறினார்கள் என்றால், அவர்கள் மனிதர்களைப் படித்தார்கள். ஏதேனும் ஒரு கொள்கையில் உறுதியாக நின்றார்கள், அதனாலே வென்றார்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
