ஞானகுரு பதில்
இறந்துபோன முன்னோர்கள் வீட்டில் கண்ணுக்குத் தெரியாமல் இருந்து தங்கள் குலத்தை வழிநடத்துவார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.
அதனாலே உயிருடன் இருந்த காலத்தில் தாய், தந்தையை மதிக்காத பிள்ளைகள் கூட, அமாவாசை தினங்களில் செத்தவர்களுக்கு படையல் போடுகிறார்கள். மரணத்துக்குப் பிறகு அவர்கள் ஏதேனும் சாபம் விடுவார்கள், அது பலித்துவிடும் என்று அஞ்சுகிறார்கள்.
தீபம் ஏற்றும் நேரத்தில் உண்டாகும் வெளிச்சம் ஜனனம் என்றால், அது அணைந்துபோவது மரணம். அந்த ஒளி எங்கேயிருந்து வந்தது, எங்கே சென்றது என்பது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. எனவே, இறந்த மனிதர்களின் நினைவுகள் மட்டும் மனதில் தங்கியிருப்பது போதும், அவர்களை ஒருபோதும் வழிபடுவதற்கு அவசியம் இல்லை. பழையன எல்லாம் கழிந்தே தீரவேண்டும்.
இந்த வகையில் குலதெய்வ வழிபாடும் அவசியமில்லாத ஒன்று. குலதெய்வம் என்பது முன்னோர் வழிபாடு. தியாகம் செய்தவர்கள், துரோகத்தினால் இறந்தவர்கள், நிறைவேறாத ஆசையில் மரணம் அடைந்தவர்கள், மானம் காக்க மரணித்தவர்கள் என்று ஏதேனும் ஒரு வகையில் செத்துப் போனவர்களின் ஆத்மா அங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கும் என்ற அச்சத்தில், அவர்களை திருப்திபடுத்துவதற்காக செய்யப்படுகிறது.
கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட மக்களுக்கு இதுவே பெரும் தெய்வமாக மாறிவிட்டது. குலதெய்வத்தைக் கும்பிடவில்லை என்றால் சாபம் கிடைக்கும் என்று பயத்தினாலே எல்லோரும் வருடம் ஒரு முறை எட்டிப் பார்க்கிறார்கள்.
வாழும் காலத்தில் கொசு, கோழி தொடங்கி எத்தனையோ உயிர்களை மனிதன் கொலை செய்கிறான்… இந்த உயிர்களுக்கு ஆத்மா இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தாலே குல தெய்வ வழிபாடு தேவையா என்பது தெரிந்துவிடும்.
இந்த உலகில் உயிரோடு வாழும் வரையிலும் ஒருவரையொருவர் மதித்து வாழ்வதே முக்கியம். செத்தவர்களை மறந்துவிட்டு உயிருடன் இருப்பவர்களைக் கொண்டாடுங்கள். அதுவே முக்கியம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
