தினமும் 24 லட்சம் ரூபாய்..?

ஆச்சர்யம் ஆனால் உண்மை

இலவசமாகக் கிடைக்கும் பொருளுக்கும் சேவைக்கும் மக்களிடம் மதிப்பு இருப்பதில்லை. இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம். அம்மாவும் அப்பாவும் எக்கச்சக்கமாக அன்பு செலுத்துகிறார்கள். ஆனால், இந்த அன்பை எந்த பிள்ளையும் மதிப்பது இல்லை.

அரசு பள்ளியில் எல்லாமே இலவசம். ஆனால், கடன் வாங்கியாவது அதிக கட்டணம் கட்டி தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். இலவசமாக ஏஐ கோர்ஸ் ஆன்லைனில் கற்றுத்தரப்படுகிறது. ஆனாலும், பணம் கட்டி பெரிய நிறுவனங்களில் படிக்கிறார்கள். இலவசமாகக் கிடைப்பதாலே தண்ணீர், காற்று, நேரம் ஆகியவற்றின் அருமையும் மக்களுக்குத் தெரியவில்லை.

பணத்தின் மதிப்பு தெரிந்த மக்களுக்கு நேரத்தின் மதிப்பு அதை விட அதிகம் என்று தெரிவதில்லை. அதனாலே தினமும் 24 லட்சம் ரூபாயை வீணாகச் செலவழிக்கிறார்கள்.

இதன் அர்த்தம் என்ன தெரியுமா..?

பணமும் நேரமும் ஒன்று. ஆமாங்க, தினமும் காலையில் கண் விழிக்கும்போது மனிதருக்கு 24 மணி நேரம் கிடைக்கிறது. இந்த 24 மணி நேரம் என்பது 24 லட்சம் ரூபாய்க்கு சமம். வீணாகப் பொழுதைக் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பணத்தை நஷ்டப்படுத்துவதாக அர்த்தம். ஆக்கபூர்வமாக செயல்படும் ஒவ்வொரு நிமிடமும் லாபம் என்று அர்த்தம்.

பணம் போன்று நேரத்தை மிச்சப்படுத்தும் கலையைக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை கட்டுக்குள் வந்துவிடும். நேரத்தை மதிப்பவரிடம் பணம் தானே வந்து சேரும். இதில் தூங்கும் நேரமும் மகிழ்ச்சியாக பொழுதுபோக்கும் நேரமும் உடல் நலனுக்கான முதலீடு. இது செலவல்ல, ஆரோக்கியத்துக்கு வரவு. எனவே, நேரத்தை நல்ல முறையில் முதலீடு செய்யுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.   

Leave a Comment