பணமே மந்திரம்
உடல் சரியில்லை என்றால் சாதாரண நபர்கள் மருத்துவமனைக்குப் போகிறார்கள். பணக்காரர் என்றால் டாக்டரை வீட்டுக்கு வரவழைக்கிறார்கள். சாதாரண நபர்கள் கடன் கேட்டால் விரட்டியடிக்கும் வங்கிகள், பணக்காரர்களுக்கு எந்த கேள்வியும் கேட்காமல் கடன் கொடுக்கின்றன. கோயிலுக்குப் போனால் கூட, பணக்காரர் கடவுளுக்குப் பக்கத்தில் நின்று தரிசனம் செய்கிறார்.
இதைத்தான் பணம் பத்தும் செய்யும் என்கிறார்கள். பணக்காரராக மாறுவதற்கு எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், சரியான திட்டமிடல் இல்லாதவர் வெற்றி பெறுவதில்லை.
பணம் சம்பாதிக்க எத்தனையோ முயற்சிகள் செய்திருக்கலாம். ஆனால், எத்தனை முயற்சிகள் செய்தீர்கள் என்பதை உலகம் மதிப்பதே இல்லை. அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா என்று மட்டுமே பார்க்கும். அந்த முடிவுகளை மட்டுமே மதிக்கும்.
ஒரு மனிதரிடம் நிறைய திறமைகள் இருக்கலாம். அந்த திறமையை வைத்து பணம் சம்பாதிக்கத் தெரியவில்லை என்றால், அந்த திறமையால் எந்த பயனும் இல்லை. எத்தனை வலிமை, திறமை இருந்தாலும் பணம் இல்லாதவர் யாராலும் கவனிக்கப்படாத நபராக மாறிவிடுவார்.
எனவே, பணம் சம்பாதிக்க விரும்புபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான 10 விதிகளைப் பார்க்கலாம்.
- பணத்தை பீரோவில் வைப்பது சேமிப்பு அல்ல, வட்டி தரும் வகையில் சேமிக்க வேண்டும். சிறு சேமிப்பின் மதிப்பை குறைவாக மதிக்காதீர்கள். சின்னச்சின்ன அளவில் திட்டமிட்டு சீராக சேமிப்பது காலப்போக்கில் மிகப்பெரிய செல்வமாக மாறும்.
- செலவுகளே நிறைய பேரை ஏழையாக்குகிறது. எந்த ஒரு பொருள் வாங்குவது என்றாலும், நான்கு முறை யோசியுங்கள். அசட்டையாக செய்யப்படும் செலவுகள் சீக்கிரம் வறுமையைக் கொண்டுவரும்.
- வருமானத்தையும் செலவினத்தையும் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்ய வேண்டியது முக்கியம். பணம் எங்கே விரயமாகிறது என்பதை கணக்கு எழுதும்போது மட்டுமே கண்டுபிடிக்க முடியும். பணம் இப்போது எவ்வளவு இருக்கிறது, எப்படி வளர்கிறது என்பதை அன்றாடம் கண்காணிப்பவரே செல்வந்தராவதற்குத் தகுதி படைத்தவர்.
- பணத்தின் எதிரி ஆடம்பரம். காரணமின்றி எந்த ஆடம்பரச் செலவையும் ஒரு பணக்காரர் செய்ய மாட்டார். பிரமாண்ட திருமணம் முடிக்கிறார் என்றால், அதையும் ஒரு பிசினஸ் முதலீடாக மட்டுமே மேற்கொள்வார். சாதாரண நபர்களே, பிறரை கவர்வதற்காக பணம் செலவழித்து இருப்பதையும் காலி செய்கிறார்கள்.
- திட்டமிடுதல் மிகவும் முக்கியமான பணி. உங்களிடம் இருக்கும் பணம் அடுத்த வருடம் எந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்காலத் திட்டம் முக்கியம். சாதிக்கும் அளவுக்கு குறிக்கோள் அமைத்து, அதனை நோக்கி நகர்த்த வேண்டும்.
- பேரம் பேசும் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள். பணக்காரர்கள் பேரம் பேசாமல் பொருட்கள் வாங்குவார்கள் என்பது உண்மை அல்ல. ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் வருமானம். பணக்காரர்கள் ஒருபோதும் முழு விலையை செலுத்தமாட்டார்கள்.
- பணக்காரர்கள் ஒரே மாதிரியான முதலீடு செய்வதில்லை. தங்கம், நிலம் என்று மட்டும் முதலீடு செய்வதில்லை. வங்கி தொடங்கி பங்குச் சந்தை வரையிலும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்கிறார்கள். அதனால் அவர்கள் செல்வம் ஒருபோதும் ஒட்டுமொத்தமாக அழிவதில்லை.
- பேராசைப்படுதல் பணக்காரராவதற்கு மிகப்பெரும் எதிரி. விரைவில் பணக்காரர் ஆகலாம் என்று ஆசை காட்டப்படும் குறுக்குவழிகளில் இறங்கவே மாட்டார்கள். சட்டத்திற்குப் புறம்பான செல்வம் ஒரே ராத்திரியில் காணாமல் போய்விடும்.
- பணம் சம்பாதிப்பதற்கு கடினமாக உழைக்கத் தேவையில்லை, புத்திசாலித்தனமாக உழைக்க வேண்டும். ஓய்வுக்கும் சிந்தனைக்கும் நேரம் ஒதுக்குபவரே அதிக பணம் சம்பாதிக்க முடியும்.
- மாதச் சம்பளத்துக்கு வேலை செய்பவரால் ஒருபோதும் பணக்காரராக முடியாது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். அவசர நிதி, பாதுகாப்பு நிதி, இன்சூரன்ஸ் என தனித்தனியே நிதி ஒதுக்குவது முக்கியம். இதன் மூலம் எதிர்பாராத செலவுகள், நஷ்டத்தையும் தாங்கிக்கொண்டு முன்னேக்கி நகர முடியும்.
பணம் என்ன செய்யும் என்பதையும் பணத்தின் மதிப்பையும் உணர்ந்தவர் ஒருபோதும் வீணாக பணத்தை செலவழிக்க மாட்டார். பணத்தின் அருமையை உணரவில்லை என்றால், வேறு யாராவது ஒருவர் உங்கள் அறியாமையைப் பயன்படுத்தி பணத்தை சுருட்டி விடுவார்.
எனவே, உங்களிடம் இருக்கும் பணம் சிறிது என்றாலும் பரவாயில்லை. அதை, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடையச் செய்யுங்கள். பணத்தை கட்டுப்படுத்தும் கலையைக் கற்கவில்லை என்றால், பணம் உங்களைக் கட்டுப்படுத்தும். எனவே, பணத்தின் அருமையை உணர்ந்து, உங்களை நோக்கி வரவழையுங்கள்.
மதிப்பு உணர்ந்தவர்களிடம் பணம் சமர்த்தாக நடந்துகொள்ளும். எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றிவிடும்.
