அநீதியைத் தடுக்கும் சக்தியற்றவராக இருக்கலாம், ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கத் தயங்காதீர்கள்.

மந்திரச்சொல்

ஒரு மனிதரின் உண்மையான வலிமை அவர் எத்தனை பேரைத் தோற்கடித்தார் என்பதில் இல்லை. தனக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிந்தும், தவறுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார் என்பதில்தான் இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொள்கை, கறுப்பின மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தது. இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார் நெல்சன் மண்டேலா. அதற்காக 27 ஆண்டுகள் சிறையில் வாடினார். அவருடைய உடலைச் சிறையில் அடைக்க முடிந்தது, அவரது நிறவெறிக்கு எதிரான கொள்கையை அழிக்க முடியவில்லை. அதனாலே விடுதலையானதும், தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபரானார்.

எதிர்ப்புத் தெரிவிப்பதால் உடனடியாக வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், எதிர்க்காமல் இருப்பதால் அநீதி நிரந்தரமாகிவிடும் ஆபத்து இருக்கிறது. சில நேரங்களில், இது தவறு என்று ஒருவர் துணிந்து சொல்வதே மாற்றத்தின் முதல் படியாக இருக்கும்.

உளவியல்ரீதியாக அச்சத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எதிர்த்துப் பேசினால் வேலை போய்விடும், உறவு முறிந்துவிடும், பகைத்துக்கொள்வார்கள் என்று பலரும் அஞ்சுகிறார்கள். பணம், பதவி, அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்தாலும், கேள்வி கேட்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். எதிர்ப்பு தெரிவித்தாலும் எதுவும் மாறாது, தனக்கு பாதிப்பு வராதவரை நல்லது என்று சிலர் அமைதியாக இருக்கிறார்கள்.

வாழ்க்கைத்துணை, முதியவர்கள் புறக்கணிக்கப்படும்போது அவர்களுக்காக குரல் எழுப்ப வேண்டும். குடும்பத்தில் அன்பைக் காப்பாற்றுவதற்காக மௌனமாக இருக்க வேண்டிய தருணங்களும் உண்டு. அதே அன்பைக் காப்பாற்றுவதற்காகப் பேச வேண்டிய தருணங்களும் உண்டு.

அலுவலகத்தில் எல்லா அநீதிகளையும் ஒருவரால் தனியாகத் தடுக்க முடியாது. ஆனால், ஆதாரங்களுடன் பேசுவது, பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நிற்பது, தவறான செயல்களில் பங்கேற்க மறுப்பது மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

உணர்ச்சியைவிட உண்மையை முன்னிறுத்துங்கள். என்ன நடந்தது, யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள். தனியாக நிற்க முடியாவிட்டால் ஆதரவைத் தேடுங்கள். நம்பகமான நண்பர், குடும்ப உறுப்பினர், சக ஊழியர், தொழிற்சங்கம் அல்லது உரிய அமைப்பின் உதவியைப் பெறுங்கள்.

வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் நம்மால் வெற்றி பெற முடியாது. எல்லா அநீதிகளையும் தடுக்கவும் முடியாது. ஆனால், ஒரு தவறைக் கண்டு மனதிற்குள் அது தவறு என்று உணர்ந்தும், நம்முடைய வசதிக்காக அதற்கு ஆதரவாக நடந்துகொண்டால், நாளடைவில் நம் மனசாட்சியின் குரலே மங்கிவிடும்.

நீங்கள் எவ்வளவு பெரியவர் என்பது, உங்களைவிட பலவீனமானவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதில் தெரியும்; நீங்கள் எவ்வளவு துணிச்சலானவர் என்பது, உங்களைவிட வலிமையானவர்கள் தவறு செய்யும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் தெரியும்.

அநீதியை எதிர்க்கும் ஒவ்வொரு குரலும் உடனடியாக உலகத்தை மாற்றிவிடாது. ஆனால், ஒவ்வொரு நியாயமான குரலும் அநீதிக்கு எதிரான சமூகத்தின் மனசாட்சியை உயிருடன் வைத்திருக்க உதவுகிறது.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment