எழுத்தாளர் பாவண்ணன் சோற்று மணம்

ஆரோக்கிய அனுபவம்

புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் உள்ள வளவனூர் என்னும் சிற்றூரில் 1958ல் பிறந்தவர் எழுத்தாளர் பாவண்ணன். சிறுகதை, நாவல், கட்டுரை, பயணம் , விமர்சனம்,ஆய்வு, மொழி மொழிபெயர்ப்பு என்று 50 நூல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

தமிழ்நாடு மற்றும் புதுவை அரசுகளின் விருதுகள், இலக்கியச் சிந்தனை,சாகித்ய அகாடமி, கனடா இலக்கியத் தோட்டம், விளக்கு, கதா, சூர்யா போன்ற ஏராளமான விருதுகள் பெற்றவர். எப்போதும் ஓய்வில்லாமல் எழுத்துப் பணிகளில் தொடர்ந்து இயங்கி வரும் அவர், தனது ஆரோக்கியம் சார்ந்து இங்கே பேசுகிறார்!

எங்கள் குடும்பத்தில் நான் மூத்த பிள்ளை. நான், தம்பிகள், தங்கைகள், அம்மா, அப்பா, பாட்டி, அத்தை என ஒன்பது பேர்கள் இருந்தோம். அப்பா கடைத்தெருவில் தையற்கடை வைத்திருந்தார். பிற வீடுகளில் இருப்பதுபோல காலையில் சிற்றுண்டி, மதியத்தில் சாப்பாடு, இரவில் சிற்றுண்டி என வகைவகையாகச் செய்யமுடியாத குடும்பச்சூழலில் நாங்கள் வசித்தோம்.

எங்கள் உணவு என்பது ஒவ்வொரு நாளும் எங்கள் அப்பா ஈட்டக்கூடிய வருமானத்தைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். எல்லாம் நல்லபடியாக இருந்தால் மூன்று வேளையும் சாப்பாடு இருக்கும். ‘தொட்டுக்கோ தொடச்சிக்கோ’ என்று இருந்தால் ஒன்றிரண்டு வேளை சாப்பாடு இல்லாமல் இருக்கவும் நேரும். அப்படி இருந்து இருந்து பழகியதால் சாப்பாடு இல்லாத கஷ்டத்தை நாங்கள் ஒருபோதும் கஷ்டமாகவே உணர்ந்ததில்லை.

ஒவ்வொரு நாளும் மாலையில் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் கடைக்குச் சென்று அப்பா செலவுக்குக் கொடுக்கும் பணத்தில் அரிசி, காய்கறிகள், மளிகை சாமான்கள் வாங்கிவரும் வேலை என்னைச் சார்ந்தது. அவர் கொடுக்கிற பணத்துக்குத் தகுந்தமாதிரி எந்தப் பொருளைக் கூடுதலாக வாங்கவேண்டும், எந்தப் பொருளைக் குறைவாக வாங்கவேண்டும் என்று தீர்மானிப்பதற்குத் தேவையான பயிற்சியை எங்கள் அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார்.

சோற்று மணம்

அந்தக் காலத்தில் விறகு வைத்து எரிக்கும் அடுப்பில் பானையில்தான் சோறாக்குவார் அம்மா. சோறு கொதிக்கத் தொடங்கியதும் அதன் மணம் காற்றுவாக்கில் நடுவீட்டில் மண்ணெண்ணெய் விளக்கைச் சுற்றி உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கும் எங்களைக் கடந்துபோகும். சோற்று மணம் போல ஓர் இனிய மணம் இந்த உலகத்திலேயே இல்லை என்பதை நான் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். அதுவும் நம் வயிற்றில் பசி நிறைந்திருக்கும் தருணத்தில் அந்த மணம் ஒரு தூண்டிலைப்போல இழுக்கும்.

சோற்று மணம் வீசியதும் அடுப்பிலிருந்து விறகை வெளியே இழுத்து நெருப்பின் வேகத்தைச் சற்றே குறைத்துவிடுவார் அம்மா. அதற்குப் பிறகு பானைக்குள்ளேயே தளதளவென சோறு கொதிக்கத் தொடங்கும். வெள்ளைவெளேரென பாலேடு போல நுரை கட்டி வெடித்தடங்கும் குமிழ்களைப் பார்ப்பது பேரின்பமாக இருக்கும். சிறிது நேரத்துக்குப் பிறகு பானைக்குள் கரண்டியால் ஒரு துழாவு துழாவிவிட்டு, கொஞ்சம்போல சோற்றை அள்ளியெடுத்து கைவிரலால் தொட்டு பதம் பார்ப்பார். போதுமான பதம் வந்ததும் சோற்றுப்பானையின் மீது வடிதட்டைப் போட்டு மூடி கரித்துணியால் பிடித்து மேடையின் மறுபக்கம் கொண்டுவந்து மெல்ல மெல்ல கவிழ்த்து தண்ணீரை வடிகட்டுவார். மேடையை ஒட்டி கீழே வைக்கப்பட்டிருக்கும் பானையில் அந்தத் தண்ணீர் இறங்கி நிரம்பி வழியும்.

புத்தகத்தில் ஒரு கண்ணும் சோற்றுப்பானையில் ஒரு கண்ணுமாக நாங்கள் படித்துக்கொண்டிருப்போம். நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் கவிழ்த்த பானையை மெல்ல மெல்ல மேலே நிமிர்த்தி அடுப்பங்கரையை ஒட்டி இருக்கும் பிரிமணையின் மீது சமநிலை பிறழாதவண்ணம் வைப்பார் அம்மா. அதைத் தொடர்ந்து வடிநீர் இறங்கிய பானையிலிருந்து இரண்டு மூன்று செம்பு எடுத்து இன்னொரு பாத்திரத்தில் தனியாக ஊற்றுவார். அந்தத் தண்ணீருக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்குப் போதுமான உப்பை மட்டும் எடுத்து அந்தத் தண்ணீரில் கலப்பார். உப்பு நன்றாகக் கரையும் வகையில் ஒருசில நிமிடங்கள் ஒரு கரண்டியால் நிதானமாகக் கலக்கிவிடுவார். அந்தக் கரண்டியிலிருந்து ஒரே ஒரு சொட்டு மட்டும் தன் உள்ளங்கையில் விழும் வகையில் செய்து நாக்கை நீட்டி ஒருமுறை சுவை பார்ப்பார். அளவு சரியாக இருப்பதை அம்மாவின் கண்களைப் பார்த்தே நாங்கள் புரிந்துகொள்வோம்.

வடிநீர்

அந்த வடிநீர்ப் பானையையும் சில தம்ளர்களையும் எடுத்துக்கொண்டு நாங்கள் படித்துக்கொண்டிருக்கும் இடத்துக்கு வந்து உட்கார்வார் அம்மா. முதல் தம்ளரில் அந்த வடிநீரை ஊற்றியதும், நான் அதை எடுத்துச் சென்று பாட்டியிடம் கொடுத்துவிட்டு வருவேன். அதற்குப் பிறகு நாங்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு தம்ளர் எடுத்துக்கொள்வோம். கடைசியாக ஒரு தம்ளரில் ஊற்றிக்கொண்டு சுவரை ஒட்டி சாய்ந்தபடி அம்மாவும் அருந்துவார். கதகதப்பான அந்த வடிநீரின் சுவையை ஒருபோதும் மறக்கமுடியாது.

பணம் குறைவாகக் கொடுக்கும் நாட்களில் எங்கள் வீட்டில் சோறுதான் பிரதான சமையல். அதில் ஊற்றிச் சாப்பிட அம்மா ரசம் மட்டும் வைப்பார். அல்லது ’கிள்ளிப் போட்ட சாம்பார்’ என அழைக்கப்படும் பருப்பில்லாத சாம்பார் வைப்பார். பணம் கூடுதலாகக் கொடுக்கும் நாட்களில் கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய் என ஏதேனும் ஒரு காய் கலந்த சாம்பார் அல்லது புளி சேர்த்த காரக்குழம்பு வைப்பார். கூட்டு, பொறியல் போன்றவற்றையெல்லாம் அபூர்வமாக ஒருசில பண்டிகை நாட்களில் மட்டுமே பார்க்கமுடியும். பெரும்பாலும் இரவு வேளையில் கடையிலிருந்து திரும்பும்போது அப்பா ஒரு பொட்டலம் பக்கோடா அல்லது மிக்சர் வாங்கி வருவார். அதைப் பிரித்து ஒவ்வொரு தட்டிலும் ஒரு கை அள்ளி வைப்பார் அம்மா.

மழைக்காலங்களில் பெரும்பாலும் அப்பாவுக்குப் போதிய அளவு வருமானம் இருப்பதில்லை. தைப்பதற்கு யாரும் துணி எடுத்துவரமாட்டார்கள். அதுபோன்ற சமயங்களில் சேமிப்பிலிருந்து சில்லறைகளைத் தேடி எடுத்துக் கொடுப்பார் அப்பா. அது அரிசி வாங்குவதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். குழம்பு வைக்க வழி இருக்காது.

அம்மாதிரியான நேரங்களில் எங்கள் வீட்டு வேலியோரமாக நின்றிருக்கும் முருங்கைமரம்தான் ஒரே அடைக்கலம். சொரட்டுக்கோலால் அதன் கிளைகளைத் தாழ்த்தி தளிரான கீரையைப் பறித்துக்கொள்வார். தண்ணீர் ஊற்றி அவித்தெடுத்து உப்பு போட்டுத் துவட்டி எடுத்தால் பொரியல். நன்றாக மசியும்படி கடைந்தெடுத்தால் குழம்பு. அதுதான் வேறுபாடு. அன்றைய பொழுது எப்படியோ ஓடிவிடும்.

இம்மாதிரியான மழைக்காலத்தில் சமாளிப்பதற்கு இன்னொரு வழியையும் கண்டுபிடித்து வைத்திருந்தார் எங்கள் அம்மா. சிற்சில சமயங்களில் தயிர்க்காரப் பாட்டி தம் கூடையில் கேழ்வரகு அல்லது கம்பு நிறைந்த கைப்பையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு சில்லறையை வாங்கிக்கொண்டு செல்வார். அம்மா அந்தத் தானியங்களை வெயில் காலத்தில் நன்றாக உலரவைத்து பானையில் சேமித்துவைத்திருப்பார். மழைநாள் தொடங்கியதுமே அந்தப் பானையைத் திறந்து ஒரு வேளைக்குத் தேவையான அளவுக்கு கேழ்வரகை அல்லது கம்பை எடுத்து முறத்தை நிறைத்துக்கொள்வார். எங்கள் வீட்டுத் திண்ணையிலேயே கல் எந்திரம் இருந்தது. அரைமணி நேரத்தில் தானியம் மாவாக மாறிவிடும்.

கேழ்வரகு மாவுடன் முருங்கைக்கீரையைக் கலந்து பிசைவார் அம்மா. எப்போதாவது கைமறதியாக சாமி மாடத்தில் அல்லது துணிப்பெட்டிக்குள் வைத்த சில்லறைகளைத் தேடிக் கண்டுபிடித்து வெல்லம் வாங்கிவரச் சொல்வார். மின்னல் வேகத்தில் நான் கடைக்கு ஓடி வெல்லம் வாங்கிவந்து கொடுப்பேன். அம்மா அந்த வெல்லத்தை வெற்றிலை உரலால் இடித்துத் தூளாக்கி அதையும் மாவுடன் சேர்த்துப் பிசைந்துவிடுவார்.

அடுப்பில் தோசைக்கல்லை ஏற்றி உண்டையாக உருட்டிய மாவை நடுவில் வைத்து தட்டித்தட்டி வட்டமாகப் பரப்பி அடை சுடுவார். அடை வேகவேக அதன் மணம் ஏற்கெனவே இருக்கும் பசியை  இன்னும் கொஞ்சம் தூண்டும். ஆளுக்கு ஒரு அடை. தின்று முடித்து வயிறு நிறைய தண்ணீர் குடித்தால் திம்மென்று இருக்கும். கம்பு மாவுக்கும் இதே வழிமுறைதான்.

ஒருநாள் இரவில் கம்பு அடை என்றால் அடுத்த நாள் இரவில் கேழ்வரகு அடை என மாற்றிமாற்றிச் செய்து கொடுப்பார் அம்மா.  மழையாக இருந்தாலும் சிற்சில நாட்களில் கடையில் அப்பாவுக்கு வேலை அமைந்துவிடும். அப்போது என்னிடம் பணம் கொடுப்பார் அப்பா. நான் அரிசி, பருப்பு, புளி, மிளகாய், காய்கறிகளை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். அன்றைய தினம் அடை உடனடியாக நிறுத்தப்படும். அம்மா சோறு சமைக்கத் தொடங்கிவிடுவார்.

திண்ணை

சாப்பிட்ட பிறகு வாசலில் அல்லது திண்ணையில் பாய் விரித்துப் போட்டு வட்டமாக உட்கார்ந்து அம்மா அல்லது அப்பா அல்லது பாட்டி யாராவது ஒருவர் சொல்லக்கூடிய கதைகளை, வானத்தில் மின்னும் நட்சத்திரங்களையும் நகர்ந்துசெல்லும் நிலவையும் வேடிக்கை பார்த்தபடியே ஆர்வத்துடன் கேட்கத் தொடங்குவோம். எப்போது உறக்கத்தில் மூழ்கினோம் என்று தெரியாமலேயே கதை சுவாரசியத்தில் உறங்கிவிடுவோம். பிறகு ஒவ்வொருவராக தூக்கிச் சென்று வீட்டுக்குள் படுக்கவைப்பது அப்பாவின் வேலையாக இருக்கும். 

முதல்நாள் இரவில் மிஞ்சிய சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவார் அம்மா. அடுத்தநாள் காலையில் அந்தச் சோற்றுடன் இன்னும் கொஞ்சம் தண்ணீரையும் உப்பையும் அளவாகக் கலந்து நன்றாகப் பிசைவார். அந்தத் தண்ணீரைப் பார்ப்பதற்கு மோர் மாதிரி இருக்கும். அதற்குப் பெயர் நீராகாரம். அப்பா ஒரு செம்பு நிறைய நீராகாரம் குடித்துவிட்டு கடைக்குப் புறப்பட்டுவிடுவார். பள்ளிக்கூடம் செல்லும் எங்களுக்கு ஆளுக்குக் கொஞ்சம் பழைய சோறும் நீராகாரமும் கலந்து கொடுப்பார் அம்மா. நாங்கள் அதைச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடத்துக்கு ஓடிவிடுவோம்.

இப்படித்தான் என் பள்ளிக்காலம் கழிந்தது. சாப்பாடு தொடர்பாகவும் ஆரோக்கியம் தொடர்பாகவும் எப்போதும் நான் பெரிய ஈடுபாடோ, எதிர்பார்ப்போ கொண்டிருந்ததில்லை. இருந்தால் சரி, இல்லாவிட்டாலும் சரி என்றுதான் அந்த நாட்களை நான் கடந்துவந்தேன். 

பட்டம் பெற்று, வேலை கிடைத்து சொந்தமாகச் சம்பாதிக்கத் தொடங்கிய போதும் சாப்பாட்டைப் பொறுத்தவரை என் மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அந்தந்த நேரத்துப் பசிக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் என்பதுதான் எப்போதும் என் எதிர்பார்ப்பு.

கர்நாடகத்துக்கு வந்த பிறகுதான் பல சிற்றுண்டி வகைகளை நான் தெரிந்துகொண்டேன். அவலக்கி, சேமியா உப்புமா, அடைதோசை, நீர்தோசை, வாங்கிபாத், தட்டு இட்லி, காராபாத், வெண்ணெய் தோசை, அக்கி ரொட்டி என ஏராளமான வகைகள். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கடையில் ஏதேனும் ஒரு வகை சிற்றுண்டியைச் சாப்பிட்டு வேலைக்குச் சென்றுவிடுவேன்.

கூடாரங்களில் தங்கி, இரு நகரங்களுக்கிடையில் தொலைபேசி கேபிள் வழியாக இணைப்பை ஏற்படுத்துவது, கேபிள் இணைப்பை வழங்கமுடியாத ஊர்களில் நுண்ணலை கோபுரங்களை எழுப்பி இணைப்பை உருவாக்குவது ஆகியவற்றை இலக்காகக் கொண்ட பிரிவில் நான் வேலை செய்ததால் பயணம் செய்யும் ஊரில் என்ன கிடைக்கிறதோ, அதுதான் என் உணவு என ஆகிவிட்டது. நான் எப்போதும் உணவுக்காகத் தேடிச் செல்பவன் கிடையாது. பணியிடத்துக்கு அருகில் உண்பதற்கு என்ன கிடைக்கிறதோ அதையே சாப்பிட்டுவிடுவேன். சைவ உணவாக இருக்கவேண்டும். அது மட்டுமே என் விருப்பமாக இருக்கும்.

திருமண விருந்துகளில் கலந்துகொள்ளும்போது பரிமாறுகிறவர்களிடமிருந்து எனக்கு என்ன தேவையோ அதை மட்டுமே வாங்கிக்கொள்வேன். பிறவற்றை வைக்க வரும்போதே தடுத்துவிடுவேன். காய்கறிப் பொரியல்களை விரும்பிச் சாப்பிடுவேன். முதல்முறை வைக்கும் சோற்றையே மூன்றாக வகுத்து குழம்பு, ரசம், தயிர் என மூன்றையும் வாங்கிச் சாப்பிட்டுவிடுவேன். இப்போதெல்லாம் பல திருமணங்களில் நீளமான பெஞ்சுகளில் சமைக்கப்பட்ட பாத்திரங்களை வைத்துவிடுகிறார்கள். தேவையானவற்றை நாமே எடுத்துக் கொண்டு சென்று சாப்பிடுகிற வகையில் ஏற்பாடு செய்துவிடுகிறார்கள்.

அம்மாதிரியான இடங்களில் நான் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். பலர் ஒவ்வொரு பாத்திரத்தின் முன்னாலும் நின்று ஒரு கரண்டி எடுத்துப் போட்டுக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய நடைமுறை வேறு. அந்த இடத்தில் இட்லி, தோசை இருந்தால் இரண்டு இட்லி, ஒரு தோசை அல்லது சப்பாத்தி இருந்தால் மூன்று சப்பாத்தி என்பதுதான் என் அளவு. அவற்றை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு இருக்கைக்கு வந்து சாப்பிடத் தொடங்கிவிடுவேன். பிற உணவுப்பொருட்களின் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன். ஆரோக்கியமாக இருப்பதற்கு என்னென்ன, எந்த அளவுக்குத் தேவையோ, அதை மட்டும் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால் போதும் என்பதுதான் என் நிலைபாடு.

உற்சாகமே ஆரோக்கியத்தின் ஊற்றுக்கண்

சின்ன வயதிலிருந்தே நடப்பதில் எனக்கு ஆர்வம் மிகுதி. எங்கு சென்றாலும் நடந்து செல்வதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். வேடிக்கை பார்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அந்தப் பழக்கத்துக்கு நடப்பதுதான் வசதி. அந்தப் பழக்கத்தை நான் இன்றுவரைக்கும் பின்பற்றி வருகிறேன். நடை அளிக்கும் உற்சாகத்தை இந்த உலகத்தில் வேறெதுவும் அளிக்கமுடியாது. உற்சாகமே ஆரோக்கியத்தின் ஊற்றுக்கண். உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பல நேரங்களில் தோன்றுவதுண்டு.

எங்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு பெரிய ஏரி இருக்கிறது. அதைச் சுற்றி நடைப்பயிற்சிக்கு ஏற்ற வகையில் செம்மைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். காலையிலும் மாலையிலும் அந்த ஏரிக்குச் சென்று வேடிக்கை பார்த்தபடி நடப்பேன். அந்தப் பயிற்சி ஒவ்வொரு நாளும் எனக்குத் தேவையான உற்சாகத்தை வழங்கும்.

நடக்கச் செல்லும்போது கைப்பேசியை எடுத்துச் செல்லக்கூடாது என்பது எனக்கு நானே வகுத்துக்கொண்ட விதி. நடக்கும் நேரம் என்பது எனக்கு சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்க்கும் நேரம். முன்னும் பின்னும் நடக்கும் மனிதர்களையும் சிறுவர் சிறுமியரையும் பாதையோரக் கடைகளையும் கோவில் வாசலில் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டிக்கடைகளையும் பார்த்துக்கொண்டும் அவர்களுடைய குரல்களைக் கேட்டுக்கொண்டும் செல்வேன். தெரிந்தவர்களாக இருந்தால் நின்று நாலு வார்த்தை பேசிவிட்டு நடப்பேன்.  ஒருவர் தியானம் செய்யும்போது எந்த அளவுக்கு லயித்திருப்பாரோ, அந்த அளவுக்கு நடப்பதில் நான் லயித்திருப்பேன். நடை நான் பெற்ற பெரும்பேறு.

– அருள்செல்வன்

Leave a Comment