மதுவும் பிரியாணியும் கடவுள்தான்.

Image

ஞானகுரு அத்தியாயம் – 3

 ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியை நோக்கி நடந்தேன். கிட்டத்தட்ட ரயில் கிளம்பும் நேரத்தில் ஏறியதால், எல்லோருமே புருவம் உயர்த்தி ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள். எனக்குப் பின்னே ‘சிஷ்யகேடி’கள் வருகிறார்களா என எட்டிப் பார்த்து ‘இல்லை’ என்றதும் ஏமாற்றம் அடைந்தார்கள். நான் எவரையும் நேருக்குநேர் பார்க்காமல், எனது இடத்தைக் கண்டடைந்து சரணடைந்தேன். நான் அமர்வதற்காகவே காத்திருந்தது போல் வண்டி புறப்பட்டு வேகமெடுத்தது.

என் எதிர் ஸீட் இளைஞன், கும்மென்று தடித்த ஓர் ஆங்கில நாவலைப் பிரித்து அதில் ஒரு கண்ணையும், கோச்சுக்குள் தாண்டிச் செல்பவர்களில் இளம்பெண்கள் உண்டா என்று இன்னொரு கண்ணையும் மேய விட்டிருந்தான். அவன் கள்ளப் பார்வையை என்னுடைய பார்வை ‘கேட்ச்’ பிடிப்பதை உணர்ந்து, முழுசாக நாவலுக்குள் முகத்தைப் புதைத்தான்.

ஜோதிடர், வைத்தியர், சாமியார் போன்றவர்கள் தனிமையில் இருப்பதைப் பார்த்தால் பலருக்கு இருப்பே கொள்ளாது. எதையாவது பேசத் துடிப்பார்கள். ஒப்புக்காவது நெருங்கி நாலு விஷயங்களைக் கேட்கத் துடிப்பார்கள். என் வருகையை பலர் கவனித்திருக்கிறார்கள் என்பதால் எவராவது கண்டிப்பாக வருவார்கள் என்று யோசித்தபடியே கண் மூடிக் காத்திருந்தேன். என் கணிப்பு தப்பவில்லை.  ரயில் ஓடத் துவங்கி, டி.டி.ஆர். வந்து பயணச்சீட்டைப் பார்த்து டிக் அடித்துக் கொண்டு போன சிறிது நேரத்தில்,

’’சாமி…’’ என்றொரு பவ்யமான குரல்.

பளிச்சென மூடியிருந்த விழிகளைத் திறந்தேன். அறுபது வயதைக் கடந்த ஒரு முதியவர் குனிந்தபடி நின்றார். அருகே நிற்பது அவரது மனைவியாக இருக்க வேண்டும். அவர்கள் அருகே லட்சணமான ஒரு முப்பது வயதுப் பெண் தேமே என்று நின்றார். நகை, உடை, பாவனைகளைப் பார்த்தால் வசதியான குடும்பம் என்று தெரிந்தது.

’’சாமி… ரொம்ப நேரமா நிற்குறோம், கண்ணைத் திறக்குற மாதிரி தெரியலை.. அதான் நிஷ்டையைக் கலைச்சுட்டேன்… மன்னிக்கணும்’’  என்றார் பெரியவர்.

’’அதான் கலைச்சிட்டீங்களே… சொல்லுங்க’’ என்றபடி அளவாய் புன்னகைத்து என் எதிரில் இருந்த இளைஞனை உற்றுப் பார்த்தேன்.

‘‘நீங்க பேசுங்கோ, நான் கொஞ்சம் வெளியே இருக்கேன்…’’ என்று பாக்கெட்டைத் தடவியபடி எழுந்தான். பாத்ரூமில் போய் புகை ஊதுவான்! சைகையாலே எதிரே மூவரையும் அமரச் சொன்னேன். சங்கோஜத்துடன் எதிரே அமர்ந்தார்கள்.

’’சாமி… என் பெயர் பத்மநாபன். இவ என் வீட்டுக்காரி பஞ்சவர்ணம். நாங்க மதுரையில இருந்து காசிக்குப் போறோம். நான் எலெக்ட்ரிகல்ஸ் கடை வச்சிருக்கேன், வியாபாரத்துக்குக் குறைவில்லே. என் மனசுலேயும் குறையில்ல. என் பொண்டாட்டி ரொம்பவும் அடம்பிடிச்சதால, வேறு வழியில்லாம கடையைப் பூட்டிட்டு காசிக்குப் போறோம். எத்தனை நாள்தான் மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டே இருக்கிறவளைப் பார்க்கிறது… அது என் மருமகப் பொண்ணு செல்வி…’’ என்று அறிமுகப் படலத்தை முடித்தார். உடனே கழுத்தை வளைத்து அவர்களைத் தாண்டி எம்பிப் பார்த்தேன்.

அந்த அம்மாள் புரிந்து கொண்டார். ‘‘என் பையன் வரலீங்க சாமி. அவன் நைஜீரியாவுல வேலை பார்க்கிறான். படிக்கிற காலத்திலேயே நாலு வார்த்தை பேச நேரமில்லாம ஓடிக்கிடே இருந்த புள்ளை. இப்பவும் பணம் பணம்னு ஓடிக்கிட்டிருக்கான். என்னிக்கு ஒரு முட்டா என்கிட்டே வந்துடறானோ… அன்னிக்குத்தான்
எனக்கு நிம்மதி!’’

‘எங்களோட’ என்று சொல்லாமல், தன்னை மட்டும் முன்னிறுத்தி அந்த அம்மாள் சொன்னது மாறுபாடாக இருந்தது. மருமகப் பெண்ணைப் பார்த்தேன். அடக்கமும் அழகும் தாண்டவமாடியது. மருண்டு அலைந்த விழிகளைப் பார்த்தபோதே கபடு, சூது தெரியாதவள் என்று அடித்துச் சொல்ல முடிந்தது.

அந்த அம்மாள் தொடர்ந்தார். ‘‘அஞ்சு வருஷமா நிம்மதியே இல்ல சாமி, காசிக்குப் போனா நிம்மதி கிடைக்குமான்னு தெரியலை, ஆனா ஏதாவது முடிவு தெரியட்டும்னுதான் காசிக்கு கிளம்பியிருக்கேன்…’’ பேசி முடிக்கும் முன்னரே அவளது குரல் கம்மத் தொடங்கியது.

’’காசிக்குப் போனா சஞ்சலமெல்லாம் தானா போயிடும்னு யார் சொன்னா? நல்லதும் கெட்டதும் அடுத்தவங்க தந்து வர்றதில்லை. சந்தோஷமும் துக்கமும் மனசுக்கு வெளியிலிருந்து அர்றதும் இல்லை. புது ஊரு, புது இடம், புது தெய்வம், புது மனுஷங்க… இதையெல்லாம் பார்க்கிறதே நம் மனசுக்குள்ள இருக்கிற அழுக்கையும் பயத்தையும் விரட்டறதுக்குத்தான்!’’  இப்படி பொத்தாம் பொதுவாக நான் பேசுகிற வார்த்தைகள்தான்,
 பல சமயங்களில் தத்துவரூபம் எடுத்து, எதிராளியை இன்னும் பக்திமயமாக்குவது வழக்கம். நான் சொன்னதில் அந்தக் குடும்பத்தைக் குத்தக்கூடிய ஏதோ உள்ளர்த்தம் இருந்திருக்க வேண்டும்.

அந்த அம்மாள் தன் கணவர் பக்கம் திரும்பி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தாள்.

உடனே எலக்ட்ரிக்கல் பத்மநாபன், ‘‘பெரியவங்கள தொந்தரவு செய்யாத… பார்த்தமா, ஆசிர்வாதம் வாங்கினமானு போயிடணும். உசுரை வாங்காத வா…’’ என்றபடி இருப்பு கொள்ளாமல் எழுந்தார். குற்றமுள்ள நெஞ்சு குதித்துப் புறப்படுவதாகப் பொறி தட்டியது.

புன்னகையை அழுத்தமாகவே சிந்தி, கண்களாலே தடுத்து நிறுத்தி அமரச் சொன்னேன். பத்மநாபன் அவசரமாக பேசத் தொடங்கினார். ‘‘என் பையன் வெளிநாட்டுல வேலை பார்க்கிறான், என் மருமகப் பொண்ணை அங்க கூப்பிட்டுப் போக முடியலை. அதனால அவ, மதுரையில எங்க வீட்லே இருக்குறது இவளுக்கு பிடிக்க மாட்டேங்குது. வழக்கமான மாமியார்,
 மருமகள் பிரச்சினைதான் சாமி’’ என்று இழுக்க… பதிலுக்கு அந்த அம்மாள் முகத்தில் கோபக்குறி படர… நான் மருமகப் பொண்ணு பக்கம் திரும்பி,

’’எல்லாம் உன் புருஷனுக்குத் தெரியுமா?’’ என்றேன், குரலில் வேண்டுமென்றே கடுமை கூட்டி. பூட்டிய அறைக்குள் மாட்டிய எலியானார் பத்மநாபன். எதிர்பாராத கேள்வியால் மிரண்டு போய், மருமகள் பத்மநாபனைப் பார்த்தாள். அவரிடமும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

’’ஒண்ணுமில்லே… சாமி காசிக்கு கிளம்புறதைப் பத்திக் கேட்குறாரு, நீ போய் நம்ம இடத்துல இரு வர்றேன்’’ என்று விரட்டாத குறையாக சொல்ல, அவள் மாமியார் பக்கம் தயங்கித் தயங்கி பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். அப்போதும் பிசினாக அங்கேயே மனைவி அமர்ந்திருப்பதைப் பார்த்தார் பத்மநாபன்.

’’வா… சாமி தூங்கட்டும். காலையில பேசுவோம்’’ என்று அவளையும் நகர்த்த முயற்சிக்க, எங்கிருந்துதான் வந்ததோ அந்த சீற்றம்.

’’எனக்கு எல்லாம் தெரியும், நீங்க போங்க, நான் பேசிட்டுத்தான் வருவேன்…’’ என்ற அம்மாள், ரயிலின் இரண்டு ஸீட் இடைவெளியில் தொபுக்கென்று என் காலில் விழுந்து பாதங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அதிர்ந்தே போனேன் நான். வெடிக்கப் போகிற பட்டாசைப் பார்த்த மாதிரி அவசரமாகப் பின்வாங்கி, அங்கிருந்து நகன்றார், பத்மநாபன்.

 நான் தலையைத் தொட்டதும், சிரமப்பட்டு நிமிர்ந்த அம்மாள், ‘‘சாமி, என் மருமகப் பொண்ணு மேல தப்பு சொல்ல முடியாது, எல்லாம் இந்த மனுஷன் வயசான காலத்துல இப்படி நாக்கைத் தொங்கப் போட்டுட்டு அலையறதுதான் தாங்க முடியலை. பிள்ளைக்கு வச்ச சோத்தை அப்பன் தின்னலாமா சாமீ…’’ கன்னங்களில் கண்ணீர் கோடு போட்டது. என் யூகம் சரிதான்.

’’அப்புறம் ஏம்மா மருமகளையும் காசிக்கு கூட்டிட்டுப் போறீங்க…’’

’’எங்கே போனாலும் இந்த மனுஷன் விட்டாத்தான சாமி! நேரடியாக் கேக்க நான் வக்கத்துப் போயிட்டேன்கிற தைரியத்துல, துணிஞ்சே… தெரிஞ்சே… அந்தப் பொண்ணைப் பாடாப் படுத்துறாரு சாமி…’’

’’உங்க மருமககிட்ட கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே…’’ என்றேன்.

எந்த கேள்வியென ஒரு கணம் அவள் சிந்தித்த நேரத்தில், பாத்ரூம் போன இளைஞன் திரும்பி வந்து, காலடியில் அந்த அம்மாள் கிடந்த கண்ணீர் கம்பலைக் கோலத்தில் துணுக்குற்று, மறுபடி திரும்பிப் போனான்.

 ‘‘இல்லை சாமி, என் மகனுக்குத் தெரிஞ்சிருக்க நியாயம் இல்லை. அவனை வெளிநாட்டுக்குப் போகவேண்டாம்னு செல்வி எவ்வளவோ தடுத்துப் பார்த்தா, முடியலை. நானும் சொன்னேன், அவன் கேட்கலை. தங்கமாட்டம் இருக்கிறா பொண்டாட்டியோட சேர்ந்து வாழாத நாளெல்லாம் வீண்தான்னு புரியாம, தங்கத்தைத் தேடிக்கிட்டு அவன் திரும்பிப் போயிட்டான். காரணத்தைச் சொல்லி நான் அவனைத் தடுத்து நிறுத்த முடியுமா?’’

’’நீங்க சாப்பாடு போட்டிருக்க மாட்டீங்க, ஹோட்டலுக்குப் போயிட்டார்…’’ நான் குற்றமாகச் சொன்னதும் பஞ்சவர்ணத்தம்மாள் அதிர்ச்சியடைந்தாள்… கோபத்துடனே பேசினாள்,

’’என்ன சாமி! நீங்களும் இப்படிப் பேசுறீங்க, பையனுக்கு கல்யாணம் கட்டிக் குடுத்து வீட்டுக்கு மருமகப் பொண்ணு வந்தாச்சு. பேரக் குழந்தையைப் போட்டு தொட்டிலை ஆட்டவேண்டிய வயசுல கட்டிலைப் பத்தியா புத்தி போகுறது…’’ என்று மெதுவான குரலில் சங்கோஜத்துடன் சொன்னாள்.

’’சந்தோஷமா இருக்கிறது எப்படிம்மா தப்பாகும்?’’

’’வயசான காலத்துல மனுஷங்ககூட சாமி மாதிரினு சொல்வாங்க. கடைசி காலத்துலயாவது சுத்தபத்தமா இருந்து, நிம்மதியா ஆண்டவன்கிட்டப் போய்ச் சேரலாம்னு நினைக்கிறப்ப… அசிங்கம்… அசிங்கம்…’’

’’சுத்தமா இருந்தா கடவுள்கிட்ட போகமுடியும்னு யாரு சொன்னது? செத்தப்புறம் சொர்க்கத்துக்குப் போகணும்னா வாழுறப்ப நரகத்துக்குள்ளதான் இருக்கணும்னு யாரும்மா சொன்னது? எது இயல்போ அதுப்படி இருந்தா ஆண்டவன்கிட்டே சேர்க்க மாட்டான்னு எந்த வேதம் சொல்லுச்சு..?’’

’’தப்பு என் மேலதான்னு சொல்றீங்களா…’’ அம்மையார் மருண்டு போய்க் கேட்டார்.

’’இல்லேம்மா… தப்பு உங்களிடம்தான் ஆரம்பமாகி இருக்குன்னு சொல்றேன். உங்க கையால கருவாரு தின்ன பூனை… இப்ப உரிப்பானை, உயரத்துக்குப் போனதும் திருடித் திங்க ஆரம்பிக்குது.  திருட்டுப் பூனைக்கு சூடு அவசியம்தான்’’
 என்றேன் தீர்மானமாக.

’’அது சூடு சொரணை கெட்டுப்போன ஜெம்னம் சாமி. அதோட இனிமே என்னால சந்தோஷமா வாழவே முடியாதுங்க. காசியை மட்டும் கடைசியாப் பார்த்துட்டு, கங்கையில போயிடலாம்னுதான் முடிவோட வந்திருக்கிறேன். ஏதோ உங்ககிட்ட பேசுனதுல கொஞ்சம் நிம்மதியா இருக்கு… இனி போற வழிக்குப் பாரமில்ல’’ என்று கண்களைத் துடைத்துக் கொண்டவளைப் பார்த்தபோது, உள்ளுக்குள் ஏதோ உருகியது.

’’அம்மா… நாம் இங்கே சந்திக்க வேண்டும் என்பது விதி, இனி எல்லாமே நலமாக மாறும். உடம்பும் உயிரும் கங்கையோட போகணும்னா அதுக்கும் ஒரு கொடுப்பினை இருக்கணும். நான் காசியில் உங்களுடன்தான் சில தினங்கள் இருக்க வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை. நிம்மதியாகப் போய்ப் படுங்க…’’ என்று சாய்ந்து கொண்டேன்.

 ஒரு கணம் பிரகாசமானவள், சுற்றும் முற்றும் கண்களைச் சுழற்றி, ‘‘சாமி… இது எங்க குடும்பத்தோட மானப் பிரச்னை…’’ என்றாள்

வாய்வரை வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி முகம் திருப்பிக் கொண்டேன். மீண்டும் ஒரு முறை கால் தொட்டுக் கும்பிட்டுச் சென்றாள்.

அப்பாடா… காசியில் போய் கடந்த முறை போன்று தடுமாறித் தவிக்க வேண்டியது இல்லை. இரண்டு நாட்கள் இந்தக் குடும்பத்துடன் இருந்துவிட்டால், காசியும் பழகிப் போய்விடும்… காசுக்கும் பங்கமிராது என்று மனசு கணக்குப் போட்டது!

அதுவரை வெளியே காத்திருந்த இளைஞன் வேகமாக வந்து அமர்ந்தான். பைக்குள் இருந்து ஒரு உணவுப் பொட்டலம் எடுத்தான். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘’சாமி சாப்பிடுறீங்களா… தயிர் சாதம்…’’
 என்று தயங்கியபடியே நீட்டினான்.

’’வாய் நமநமக்குது. சிக்கன் பிரியாணி இருந்தால் ஒரு கட்டுக் கட்டலாம்…’’ என்று தலைக்குப் பின்னால் கைகோத்தபடி நான் திருவாய் மலர… அவன் அதிர்ந்தான்.  தயிர் சாத இளைஞனின் அதிர்ச்சியை ஓரக்கண்ணால் ரசித்தபடி எழுந்து அன்னநடை போட்டு அடுத்தடுத்த கூபேகளுக்களில் வலம் வரக் கிளம்பினேன்.

–         –  ஞானகுரு வருவார்

Leave a Comment