ஞானகுரு தரிசனம்
கேள்வி : பாஜகவின் மத அரசியல் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லையே ஏன்..?
- ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.
ஞானகுரு :
இந்தியா முழுவதும் பா.ஜ.க.வின் மத அரசியல் மிகச்சிறப்பாக எடுபடுகிறது. கடவுளுக்கு கோயில் கட்டினால், கடவுளுக்கு பூஜை செய்தால் அவர் மகிழ்ச்சி அடைந்து நாட்டு மக்களை நன்றாக வைத்திருப்பார் இல்லையென்றால் அழித்துவிடுவார் என்ற ஃபார்முலா அங்கே எடுபடுகிறது. ஆனால், தமிழக மக்களுக்கு கடவுளிடம் பயம் கிடையாது. காரணம், பெரியார்.
கடவுளை செருப்பால் அடித்தாலும், நாத்திகர்களை கடவுள் எதுவும் செய்ய மாட்டார் என்று கருப்புச்சட்டையினர் இங்கே வாழ்ந்து காட்டிவிட்டுப் போய்விட்டார்கள். ஆகவே, மதத்தைக் காட்டி தமிழர்களை பயமுறுத்த முடியாது. நாடு முழுக்க ஒரு வியூகமும் தமிழகத்திற்கு மட்டும் வேறு வியூகமும் வகுப்பது பா.ஜ.க.வுக்கு தற்போது சாத்தியமில்லை.
…………..
கேள்வி : செய்திதாள் வாசிப்பவர்கள் எண்ணிக்கை குறைவது ஏன்..?
- பி.தனலட்சுமி, அல்லம்பட்டி.
ஞானகுரு :
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். ரேடியோவில் செய்தி கேட்டு, நாளிதழில் செய்திகள் படித்து, தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்தவர்கள் இப்போது செல்போனில் படிக்கிறார்கள். செய்தி படிப்பவர்களின் எண்ணிக்கை முன்பை விட இப்போது அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை, செய்தி தாள்களின் விற்பனை எண்ணிக்கை மட்டுமே குறைந்துள்ளது. இந்த மாற்றங்களை ஏற்கத்தான் வேண்டும்.
