இன்சுலின் சீக்ரெட்ஸ்
நீரிழிவுக்கு மாத்திரை எடுத்துக்கொண்ட பிறகும் அது கட்டுக்குள் வரவில்லை என்றால் மருத்துவர் ஊசி போடுவதற்குப் பரிந்துரை செய்கிறார். ஏன் இப்படியொரு மாற்றம் நிகழ்கிறது…?
நீரிழிவு நோய் கண்டறியப்பட்டதும் முதலில் மாத்திரைகளே பரிந்துரை செய்யப்படும். அதாவது உடலில் இன்சுலினை முறையாக வேலை செய்ய வைக்கும் மாத்திரை மட்டும் தரப்படும்.
மாத்திரை போடும் அனைவருக்கும் நீரிழிவு கட்டுக்குள் இருப்பதில்லை. உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, ஜீன் போன்ற பல்வேறு காரணங்களால் பீட்டா செல்கள் முழுவதும் அழிந்தும் போய் விடும்.
இப்போது அவர் டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து டைப் 1 நீரிழிவு நோயாளியாக மாறுகிறார். இப்போது இவருக்கு கணையத்தில் இருந்து இன்சுலினே சுரக்காது. ஆகவே இன்சுலினை வேலை செய்ய வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது. இன்சுலினை சுரக்க வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது.
அதனாலே இன்சுலின் ஊசிகள் போடப்படுகின்றன.
இன்சுலின் என்பது புரதமாக இருப்பதால் மாத்திரையாக போட்டால் நமது ஜீரண மண்டலம் அதை செரிமானம் செய்து விடும். பலன் இருக்காது. ஆகவே தான் தோலுக்கு அடியில் போடும் ஊசியாக இன்சுலின் கிடைக்கிறது.
ஆகவே, இன்சுலின் ஒருவருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்றால் இனிமேல் அவருக்கு உடலில் சுரக்க இன்சுலின் இல்லை என்று அர்த்தம். இதுவன்றியும் சில அசாதாரண சூழ்நிலைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படும்.
கடும் நோய் தொற்று, விபத்தில் மோசமான காயம், அறுவை சிகிச்சை, ஸ்டிராய்டு மருந்து உபயோகிக்கும் போது, கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு மாத்திரைகளுடனோ அல்லது தனியாகவோ இன்சுலின் ஊசி உபயோகிக்கப்படும்.
உணவு முறை மாற்றம் மூலம் ஒரு சில நோயாளிகள் டைப் 1 நிலையிலிருந்து டைப் 2 நிலைக்குப் போக முடியும் என்றாலும், அது மிகவும் கடினமான செயல். அதேநேரம், முடியாதது இல்லை.
இன்சுலின் மருந்தை ஆபத்தாகப் பார்க்க வேண்டாம், அது நீரிழிவு நோயாளிகளுக்குக் கிடைத்திருக்கும் அமிர்தம்.
- Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, சிவகங்கை
