ஞானகுரு தரிசனம்
கேள்வி : நாடு முன்னேற சுபிட்சமாய் வாழ ராணுவபலம், பொருளாதார பலம் ஆகியவற்றில் எது உதவும்..?
- எம்.தங்கராஜ், மல்லாங்கிணறு.
ஞானகுரு :
ராணுவ பலத்தினால் ஒரு நாடு முன்னேறிவிட முடியும் என்றால், இன்று உலகில் அத்தனை நாடுகளிலும் ராணுவ ஆட்சியே நடைபெறும். பொருளாதாரத்தில் கவனம் செலுத்தாமல் மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள் அமைந்தால் மட்டுமே நாடு சுபிட்சமாகும்.
கேள்வி : மனிதன் ஞானம் பெற தூண்டுதலாக அமைவது தோல்வியா… வெற்றியா… துன்பமா… இன்பமா..?
- என்.ராஜா, எம்.ஜி.ஆர். காலனி.
ஞானகுரு :
எதிர்பாராத தோல்வி, எதிர்பாராத இழப்பு, தாங்கமுடியாத சுமை போன்றவையே மனிதனை புதிதாக சிந்திக்க வைக்கிறது. இவையெல்லாம் உன் விதிப்பயன் என்று மனிதனுக்கு ஆறுதல் சொல்லவே அத்தனை மதங்களும் முயற்சி செய்கின்றன. அது உண்மையா என்று ஒருவன் யோசிக்கத் தொடங்கினால் ஞானத்தின் பாதை திறந்துவிடும்.
