பெண்களுக்கு எப்போது வரும் ஹார்ட் அட்டாக்..?

Image

எச்சரிக்கிறார் டாக்டர் ஜெயராஜா

இன்று, இளம் வயதினரும் அதிக அளவில் ஹார்ட் அட்டாக்கினால் பாதிக்கப்பட்டு, மரணத்தை தழுவுவது அதிகரித்து வருகிறது. இதனால், ஒரு  குடும்பமே உடைந்துபோகும் சூழல் உண்டாகிறது. இளம் வயதினருக்கும் ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணம் குறித்து, சென்னை, சூர்யா மருத்துவமனையின்  மூத்த இதயவியல் மருத்துவர்  எம்.ஜெயராஜாவிடம்  பேசினோம்.


ஹார்ட் அட்டாக் எனப்படும்  மாரடைப்பு என்றால் என்ன?
இதயத்துக்கு ஏராளமான பிரச்னைகள் உருவாக வாய்ப்புண்டு. அவற்றில், முக்கியமானது, அதிக ரத்த கொதிப்பு.  மேலும், கொலஸ்ட்ரால் சம்பந்தமான நோய்களும் வரலாம்; மாரடைப்பு வரலாம். இதயத்துக்கு ரத்தம் கொடுக்கக்கூடிய ரத்தக்குழாய்களில் ஏற்படும்  தடை, குறுகல் அல்லது அடைப்புதான்  மாரடைப்பு ஆகும். மொத்தத்தில், ரத்தக் குழாய்களில் ரத்தம் ஓட்டம் இல்லையென்றால், ஹார்ட் அட்டாக் வந்துவிடும்.

இதயத்துக்கு மேலே மண்புழு போன்று மூன்று ரத்தக் குழாய்கள் உள்ளன. இந்த ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவங்கள்  சேர்ந்து குறுகல் ஏற்படும். அந்தக் கொழுப்பு படிவங்கள் உறைந்துபோகும்போது ஹார்ட் அட்டாக் வரும். இது, சில சமயங்களில் மைல்டாக அதாவது மாரடைப்பு வந்ததே தெரியாத அளவுக்கு வரும்.  இதயத்துக்கு வரும் ரத்தம் ஓட்டம் பாதிக்கப்பட்டால், இதய தசையும் பாதிக்கப்பட்டுவிடும். கொஞ்சமாக  பாதிக்கப்பட்டால்  இதயத்துக்கு பாதிப்பு வராது. மேஜராக  ரத்தக் குழாயில் அடைப்பு உண்டாகி, ரத்தம் நகர்ந்துசெல்ல முடியாத நிலைமை ஏற்பட்டால் மரணம் ஏற்படலாம். இதயத்துக்கு ரத்தம் செல்வது குறைதல், கடுமையான உழைப்பு, அதிகம் மூச்சு வாங்குதல், தொடர்ந்து நீண்ட நேரம்  வேலை செய்தல், வேகமாய் நடத்தல் போன்ற காரணங்களாலும்  நெஞ்சு வலி வர வாய்ப்பிருக்கிறது.


ஹார்ட் அட்டாக் எத்தனை முறை வரும்? யாருக்கெல்லாம் இந்த நோய் வர வாய்ப்பிருக்கிறது? இதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்?

மூன்று ரத்தக் குழாய்கள் இருப்பதால், ஏதேனும் ஒரு குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஹார்ட் அட்டாக் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதேபோன்று, ஒவ்வொரு ரத்தக் குழாயிலும் தனித்தனியாக வரவும் வாய்ப்பிருக்கிறது. பொதுவாக, மூன்றிலும் ஒரே நேரத்தில் அடைப்பு வராது.  அந்தக் காலத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வியாதி வந்தது. மேலை நாடுகளில் தற்போதகூட 65-70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் அதிகம்  வருகிறது. ஆனால், இந்தியாவில் பொதுவாக பத்து வருடங்களுக்கு முன்னாடியே வந்துவிடுகிறது. சமீபகாலமாக, 30-40 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கும்  வருகிறது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.
 நெஞ்சு வலி பல்வேறு காரணங்களால்  வரலாம். முக்கியமாக, வயதானவர்களுக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் வலி இல்லாமல் வர வாய்ப்பிருக்கிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு காலிலோ அல்லது வேறு எங்கோ அடிப்பட்டாலோ வலி தெரியாது. உணர்ச்சி நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், அவர்களுக்கு வலி தெரியாமல் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பிருக்கிறது.  நடு மார்பில் ஏதோ ஒரு பரவலாக இருப்பதுபோன்று தெரியும். கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் பரவலாம். அதேநேரத்தில், தொப்புளுக்குக் கீழே பரவாது. ஊசி குத்துவது போன்றெல்லாம் வலிக்காது. அதுபோல், மேல்தாடைக்கும் போகாது.  ஏதோ  வலி அழுத்துவது போன்று இருக்கும். எரிச்சல் இருக்கும். ஏதோ பளு வைத்த மாதிரி இருக்கும். சில பேருக்கு வியர்வை இருக்கும். இது தவிர வாந்தி, மயக்கம், படபடப்பு போன்றவை அதன்கூடச் சேர்ந்துவரும் அறிகுறிகள் ஆகும்.


ஹார்ட் அட்டாக் வருவதற்கு முக்கியமான காரணங்கள் எவை?
மன அழுத்தம், வேலை, கவலை, உணவுப் பழக்கவழக்கம், ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது, சர்க்கரை வியாதி உள்ளிட்ட காரணங்களாலேயே ஹார்ட் அட்டாக் அதிகம் வருகிறது. இதில், மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, கொழுப்புச் சத்து, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகம் வருகிறது. அதேநேரத்தில், சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டில்  வைத்திருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் மிகவும் தாமதமாகத்தான் வருகிறது. மேலும், சுற்றுச்சூழலும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. பரம்பரையாகவும் ஹார்ட் அட்டாக் வரலாம்.


ஹார்ட் அட்டாக் தடுப்பதற்கு  உணவு முறைகள் உள்ளனவா?
நெய், வெண்ணெய், பால், மட்டன், ரெட் மீட், பீப்… போன்றவை மூலம் ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் சேரும். முட்டையில் மஞ்சள் கரு நிறையச் சாப்பிடுபவர்களுக்கும் பாதிப்பு வரும். எண்ணெய் வகையில் ஆலிவ் எண்ணெய் சிறந்தது. மத்திய  தரைக்கடல் நாடுகளில் எல்லாம் ஆலிவ் எண்ணெய்  அதிகம் உபயோகிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவது குறைவு என ஆய்வில் சொல்லப்படுகிறது. அதனால் நம்மூரிலும் ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். அதன் மணம், சுவை  பிடிகாதவர்கள் சன் ஃப்ளவர், நல்லெண்ணெய், தாவர  எண்ணெய், கார்ன் எண்ணெய் உள்ளிட்டவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
பொதுவாக உறையக்கூடிய தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லதல்ல. அதுபோல், கொழுப்பான உணவுப் பொருட்களை அதிகம்  சாப்பிட்டாலும் ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரிக்கும். ஆகையால், அவற்றையும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள் மிகவும் நல்லது. அத்துடன் பழங்கள் சாப்பிடலாம். மத்திய தரைக்கடல் நாடுகளில் பலர், பால் தயாரிப்புகளைச் சேர்க்க மாட்டார்கள். மீன் நிறையச் சாப்பிடுவார்கள்.


பெண்களுக்கு மாரடைப்பு வருமா? எப்போதும் வரும்?
பொதுவாக ஆண்களுக்குத்தான் மாரடைப்பு அதிகம் வரும். பெண்களுக்கு மாதவிடாய் முடியும் நேரத்தில் வர வாய்ப்பிருக்கிறது. அதாவது, 50 வயதுக்குக் கீழுள்ள பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான  வாய்ப்பு குறைவு. ஈஸ்ட்ரஜன் என்ற ஹார்மோன் அவர்களை பாதுகாக்கிறது. 50 வயதுக்குப் பிறகு அவர்களுக்கும் வர வாய்ப்புண்டு.


ஹார்ட் அட்டாக் தடுப்பதற்கு வழிமுறைகள் உள்ளனவா..?
புகைப்பழக்கத்தை அடியோடு விடவேண்டும். கூடவே புகையிலை, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களையும் விட வேண்டும்.  சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உணவு விஷயத்தைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஏரோபிக்ஸ், மிதமான நடை, ஜாக்கிங், ஸ்டெப்பர், டிரட் மில்  உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பொதுவாக 30 – 40 நிமிடம் மிதமான நடையே போதும். தூரம் முக்கியமல்ல. நேரமே போதும். அதை, வாரத்தில் ஐந்து நாட்களாவது செய்ய வேண்டும். வெயிட் லிஃப்டிங் மற்றும் கடினமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியதில்லை. இதுதவிர பொதுவாக, இதயத்தில் சாதாரணமாக வலி இருந்தாலே இ.சி.ஜி எடுத்துப் பார்த்துவிட வேண்டும். அதன்மூலம், அனைத்து தெரிந்துவிடும். அதிலும் குறிப்பாக, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை வியாதிக்காரர்கள் எடுத்துப் பார்ப்பது மிகமிக நல்லது. எதையும் வருமுன் காப்பதுதான் சிறந்தது. வந்தபின் காப்பதற்கும் வழிமுறைகள் வந்துவிட்டன.

ஹார்ட் அட்டாக் என்பது எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். அப்படி நிகழும் ஒருவருக்கு வெளிநாடுகளில் நவீன இயந்திர உதவியின் மூலம், இதயத்தில் ஷாக் கொடுத்து நின்றுபோன இதயத்தைக்கூடத்  துடிக்கவைத்துவிட முடியும். அதுபோன்ற வசதிகள் நம்மூரிலும் இருக்கின்றன. அதுபோல் சி.பி.ஆர். மூலமும் முதலுதவி அளிக்க முடியும். இதனால், இன்று பல உயிர்களைப் பாதுகாக்க முடிகிறது. பொதுவாக, இன்று ஹார்ட் அட்டாக் வந்த நிறையப் பேர்  25 – 30 ஆண்டுகள் வரை சந்தோஷமாக வாழ்கிறார்கள்.  இல்லறத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். காரணம், அதற்கான நவீன மருத்துவ வசதிகளும், மருந்துகளும் வந்துவிட்டன.

அதுபோல், சின்னச்சின்ன மருத்துவமனைகளில்கூட ஐ.சி.யூ வந்துவிட்டது. ஹார்ட் அட்டாக் வந்த ஒருவருக்கு, எவ்வளவு சீக்கிரம் சிகிச்சையை ஆரம்பிக்கிறோமா, அவ்வளவு சீக்கிரம் அவரைக் காப்பாற்ற முடியும். அதுபோல், ஆஞ்சியோகிராம் மூலமும் அடைப்புகளைச் சரிசெய்ய முடியும். இதற்கான அனைத்து வசதிகளும் நம்முடைய சூர்யா மருத்துவமனையில் உள்ளது. அரசு மருத்துவமனைகளிலும் நவீன வசதிகள் பெருகிவிட்டன. அதன்மூலமும் பலர் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். இது, பாராட்டத்தக்க விஷயம்.

Leave a Comment