75 ஆயிரம் வேலை ரெடி
இன்று சட்டப்பேரவையில் அடுத்த ஆண்டு 75 ஆயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் செய்த அறிவிப்பு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இன்று சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், ‘’திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த 3 ஆண்டுகளில் தேர்வு முகமைகள் வாயிலாக 32,774 இளைஞர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் 32,709 இளைஞர்கள் என மொத்தம், 65,483 இளைஞர்கள் அரசுப் பணி நியமனங்கள் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் 77,78,999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது; நா முதல்வன் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத் துறையின் மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக மொத்தம் 5,08,055 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த 18 மாதங்களில் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் உங்களுக்காக உருவாகிறது. உங்களது திறனும் அர்ப்பணிப்புணர்வும் அரசு நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட பங்களிக்க வேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I-க்கான பணிகளில் 21 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 25 உதவி ஆணையர்கள் (வணிக வரிகள்), 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள், 7 உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) மற்றும் 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் என மொத்தம் 95 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 14 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை ஸ்டாலின் வழங்கினார்.