மந்திரச்சொல்
ஒரு விதை விதைத்தவுடன் மரமாகிவிடாது. மண்ணுக்குள் அது முதலில் வேர்களை உருவாக்குகிறது. வெளியில் எந்த மாற்றமும் தெரியாத காலத்தில்தான் அதன் மிகப்பெரிய வளர்ச்சி நடக்கிறது. மனித வாழ்க்கையும் அப்படித்தான்.
கனவுக்காக காத்திருக்கும் காலம் வீணானவை இல்லை, அவை ஒருவரை தகுதியாக்கும் காலம். ஒரு விஷயத்தைத் தொடர்ந்து நினைக்கும்போது, அதை நோக்கி கவனம் திரும்புகிறது. கவனம் திரும்பிய இடத்தில் வாய்ப்புகள் தென்படத் தொடங்குகின்றன. வாய்ப்புகளை அடையாளம் காணும்போது முயற்சி உருவாகிறது. முயற்சி தொடர்ந்து நடந்தால், எதிர்பார்த்த முடிவு கிடைக்கிறது.
அதனால்தான் சில நேரங்களில், தேடியது எப்படி சரியாக என் வாழ்க்கைக்குள் வந்தது? என்று ஆச்சரியப்படுகிறார்கள். உண்மையில் அது திடீரென்று வந்திருக்காது. அதைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு மனம் மாறியிருக்கும்.
ஒரு வேலை வேண்டும் என்று ஒருவர் தீவிரமாக நினைக்கத் தொடங்கும்போது, வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அவர் அதிகமாக கவனிக்கிறார். ஒரு நல்ல மனிதரை வாழ்க்கைத் துணையாக விரும்புபவர், மனிதர்களின் குணங்களை கவனிக்கத் தொடங்குகிறார். ஒரு எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்படுபவர், ஒரு சாதாரண சம்பவத்தில்கூட ஒரு கதையைப் பார்க்கத் தொடங்குகிறார்.
எதைத் தேடுகிறோமோ, அதற்கான கதவுகள் ஏற்கெனவே நம்மைச் சுற்றி இருக்கலாம். ஆனால் அந்தக் கதவுகளை அடையாளம் காணும் கண்கள் இன்னும் கிடைக்கத் தாமதம் ஆகலாம்.
இந்த தாமதம் தோல்வி அல்ல. சில விஷயங்கள் கிடைப்பதற்கு முன்பு, அவற்றைப் பெறக்கூடிய தகுதி வேண்டியிருக்கிறது. ஒருவர் வெற்றியைத் தேடும் பயணத்தில் பொறுமையைக் கற்றுக்கொள்கிறார். தோல்வியைத் தாங்கக் கற்றுக்கொள்கிறார். மக்களைப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்கிறார். தன்னுடைய பலவீனங்களை அறிந்துகொள்கிறார். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறார்.
இறுதியில் அவர் தேடிய வெற்றி கிடைக்கும்போது, அந்த வெற்றியைப் பெறுவதற்குத் தகுதியான நபராக மாறியிருக்கிறார். தேடிய இலக்கு அவரை மாற்றியிருக்கிறது என்பதுதான் இந்தத் தத்துவத்தின் அழகான ரகசியம்.
அதேநேரம், கனவு மட்டும் போதாது. நம்பிக்கை மட்டும் போதாது. விருப்பம் மட்டும் போதாது. தெளிவான இலக்கு, சரியான இடத்தில் தேடுதல், மீண்டும் மீண்டும் முயற்சி போன்றவை சேரும்போது விருப்பம் நிஜமாகிறது. எனவே தேடுவதை நிறுத்தாதீர்கள். அன்பைத் தேடும்போது, முதலில் அன்புக்குத் தகுதியானவராக மாறுங்கள். வெற்றியைத் தேடுபவர்கள், தோல்வியைக் கண்டு பயப்படாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
மன அமைதியைத் தேடுபவர்கள், மனதை தேவையற்ற சுமைகளிலிருந்து விடுவிக்கத் தொடங்குங்கள். ஒரு புதிய வாழ்க்கையைத் தேடுபவர்கள், புதிய முடிவுகளை எடுக்கத் தொடங்குங்கள். கனவுகளை கைவிடாதவருக்கு, அவை கொஞ்சம் தூரமாகக் காத்திருக்கின்றன.
அப்துல் கலாமுக்கு விமானங்களையும் விண்வெளியையும் பற்றிய மிகப்பெரிய கனவு இருந்தது. சரியான கல்வி, சரியான வாய்ப்புகள் மூலம் அதை நிஜமாக்கிக் கொண்டார்.
அமிதாப் பச்சன் உயரம் இடையூறாக கருதப்பட்டது. அவரது குரல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் அவர் தேடுவதை நிறுத்தவில்லை. பின்னர் அவரது உயரம், அவரது குரல் அவருடைய மிகப்பெரிய அடையாளங்களாக மாறின.
எனவே வாழ்க்கையில் வேகமாக ஓடுவது முக்கியமல்ல, உண்மையாகத் தேடிக்கொண்டிருக்கும் ஒன்றை நோக்கி ஒவ்வொரு நாளும் எடுத்து வைக்கும் சிறிய அடியே, அந்த இலக்கை வாழ்க்கைக்குள் அழைத்து வரும்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
