ஞானகுரு பதில்
கேள்வி : திடீரென பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்னாகும்..?
- பி.ஜான்சன், மன்னார்குடி.
ஞானகுரு :
மனிதர்கள் சிந்தனை, கற்பனை, கனவு, குழப்பங்களுக்கு எல்லையே இல்லை. ஏன் இங்கு பிறந்தேன், பிறப்புக்கு முன்பு எப்படி இருந்தேன், மரணத்துக்குப் பிறகு என்ன ஆவேன், இந்த பூமியை உருவாக்கியது யார், பூமி கீழே விழுந்தால் என்னாகும் என்றெல்லாம் மனதில் தோன்றும் சந்தேகங்களுக்கு விடை தேடுவார்கள்.
இந்த குழப்பங்களுக்கு காலம் காலமாக ஒரே ஒரு விடை சொல்லப்படுகிறது. அது, கடவுளே எல்லாவற்றையும் படைத்தார். கடவுளே எல்லா செயல்களுக்கும் காரணம் என்பது தான்.
பூமி சுற்றுவது நின்றால் என்னாகும் என்று ஆன்மிகவாதியிடம் கேட்டுப் பாருங்கள். தெரியவில்லை என்ற பதில் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும் வராது. கடவுள் நினைத்தால் பூமி சுற்றுவதை அப்படியே நிறுத்திவைக்க முடியும். காலத்தை பின்னோக்கி நகர்த்துவார் என்றெல்லாம் சொல்வார்கள். அதோடு, அதற்கு ஆதாரமாக சில கதைகளையும் சொல்வார்கள்.
இந்த கேள்விக்கு அறிவியல் சொல்லும் விடை சுவாரஸ்யமானது. பூமி சுற்றுவது நின்றுவிட்டால் தரையில் இருக்கும் அத்தனை பொருட்களும் அதாவது கட்டடங்கள், வாகனங்கள் என எல்லாமே விண்ணில் பறக்கத் தொடங்கும். கடல் தண்ணீர் துருவங்களை நோக்கிப் பாயும். சூரியக் கதிர்வீச்சு நேரடியாக உடலில் படும் என்பதால் அத்தனை உயிர்களும் நொடியில் கருகிவிடும். மனிதர்கள் உருவாக்கிய அத்தனை அதிசயங்களும், தொழில்நுட்ப சாதனங்களும் செயல் இழந்து போகும். ஆனால், இவற்றை எல்லாம் பார்க்கத்தான் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால், அடுத்த சில நூற்றாண்டுகள் பூமிக்கு அப்படியொரு நிலை வருவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
