மந்திரச்சொல்
ஒரு நாள் திடீரென்று நீங்கள் சம்பாதித்த செல்வம் முழுவதும் காணாமல் போய்விட்டதாக கற்பனை செய்து பாருங்கள். அதாவது வீடு இல்லை, சேமிப்பு இல்லை, வங்கி இருப்பு இல்லை, சொத்து இல்லை.
இப்போது நீங்கள் யாராக இருப்பீர்கள்..? இந்த கேள்விக்கான பதிலில்தான் உங்கள் உண்மையான செல்வம் இருக்கிறது.
பணத்தை இழந்தால் வசதிகளை இழக்கலாம். வாழ்க்கைத் தரம் குறையலாம். சில கனவுகள் தள்ளிப்போகலாம். ஆனால், அறிவு அழிந்துவிடாது. அனுபவம் குறைந்து விடாது. திறமை போய்விடாது. நம்பிக்கை குறையாது. உண்மையாக நேசிக்கும் மனிதர்களும் மறைந்து போக மாட்டார்கள்.
அதனால் ஒரு மனிதனின் உண்மையான சேமிப்பு என்பது உங்கள் மனதிலும், மற்றவர்களின் மனதிலுமே இருக்கிறது. நீங்கள் இல்லாதபோது உங்களைப் பற்றி நல்ல வார்த்தை பேசும் ஒருவர் இருந்தால், அவர் உங்கள் சொத்து. நீங்கள் விழுந்தபோது கை கொடுக்க ஒருவர் இருந்தால் சொத்து. தவறு செய்தபோதும் திருத்த முயற்சிக்கும் ஒருவர் சொத்து. உங்கள் வெற்றியைப் பார்த்து பொறாமைப்படாமல் மகிழும் ஒருவர் சொத்து. என்ன நடந்தாலும் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று சொல்பவர் வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம்.
உளவியல் சொல்லும் மிக முக்கியமான உண்மை என்னவென்றால், மனித மூளை பாதுகாப்பையும், அன்பையுமே அதிகம் தேடுகிறது. அதனால்தான் ஒருவர் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், உள்ளுக்குள் தனிமையாக உணர்ந்தால் வாழ்க்கை வெறுமையாகத் தோன்றலாம்.
மாறாக குறைவான வசதிகளுடன் வாழ்ந்தாலும், எனக்காக சிலர் இருக்கிறார்கள் என்ற உணர்வு மனிதனுக்கு மிகப்பெரிய மன வலிமையைத் தருகிறது. இதைத்தான் உணர்ச்சி பாதுகாப்பு என்கிறார்கள். பணம் நமக்கு வெளிப்புற பாதுகாப்பைத் தரலாம். ஆனால் உறவுகள் நமக்கு உள்ளார்ந்த பாதுகாப்பை தருகின்றன. பணத்தை மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால் சில மனிதர்களை இழந்துவிட்டால், அவர்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை வாங்க முடியாது.
பணத்தால் வாங்க முடியாத சில சொத்துகள் இருக்கின்றன. உடல்நலம், அறிவு, குடும்பத்தினர் அன்பு போன்றவை பணத்தால் கிடைப்பதில்லை. அதேபோல், எதையும் மீண்டும் தொடங்கும் துணிச்சல் இருந்தால் இப்போதும் நீங்கள் பணக்காரர்தான்.
நாம் பணத்தை முதலீடு செய்கிறோம். சொத்து வாங்குகிறோம். காப்பீடு செய்கிறோம். ஓய்வுக்காகச் சேமிக்கிறோம். ஆனால் உறவுகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம்.
ஒரு நண்பருக்கு தொலைபேசி செய்வது ஒரு முதலீடு. பெற்றோருடன் அமர்ந்து பேசுவது ஒரு முதலீடு. குழந்தை பேசும்போது செல்போனை பார்க்காமல் கவனமாகக் கேட்பது ஒரு முதலீடு. கணவன் அல்லது மனைவியிடம் தினமும் அரை மணி நேரம் உரையாடுவதும் உண்மையாக இருப்பதும் என்றும் குறையாத முதலீடு.
தேவைப்படும் நேரத்தில் உறவினருக்கு உதவுவது ஒரு முதலீடு. இந்த முதலீடுகளுக்கு உடனடியாக வட்டி கிடைக்காது. ஆனால் வாழ்க்கையின் கடினமான காலத்தில் அதன் வட்டி மிகப்பெரியதாக இருக்கும்.
ஒரு மனிதன் இறக்கும் போது வங்கி இருப்பு அவருடன் வராது. அவரது வீடு வராது. அவரது பதவி வராது. சேமித்த நகைகள் வராது. ஆனால் அவரை நினைக்கும் மனிதர்கள் மட்டும் வருவார்கள்.
எனவே, பணம் சம்பாதியுங்கள். ஆனால் பணத்தைச் சேர்க்கும் வேகத்தில்
மனிதர்களை இழந்துவிடாதீர்கள். வீட்டைக் கட்டும்போது உறவையும் கட்டுங்கள். வங்கிக் கணக்கை நிரப்பும்போது மனதையும் நிரப்புங்கள். பிள்ளைகளுக்கு சொத்தை விட்டுச் செல்லும்போது, அவர்களுக்கான அழகான நினைவுகளையும் விட்டுச் செல்லுங்கள்.
அதுவே, உண்மையான சொத்து.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
