வாழ்க்கையில் உண்மையான பொக்கிஷம் எது..?

ஞானகுரு பார்வை

கேள்வி : உண்மையான பொக்கிஷம் புத்தகங்களா… பொற்காசுகளா..?

  • கே.செளந்திரபாண்டியன், கண்ணபிரான் தெரு.

ஞானகுரு :

அந்தந்த நேரத்தில் எதுவெல்லாம் ஆனந்தம் தருகிறதோ அவையெல்லாம் பொக்கிஷங்களே. சிறுவர்கள் மணலை எடுத்து அரிசி என்றும் பருப்பு என்றும் விளையாடுவார்கள். அந்த நேரத்தில் அதுவே அவர்களுக்குப் பொக்கிஷம். ஒருவருக்குப் பொக்கிஷமாகத் தெரிவது மற்றவர் பார்வையிலும் பொக்கிஷமாகத் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை.

1950ம் ஆண்டு மாடல் காரை வைத்திருப்பவர் பொக்கிஷம் என்று நினைக்கலாம். பிறர் பார்வைக்கு அது பழைய இரும்பு டப்பாவாகத் தெரியலாம். ஒருவருக்கு நினைக்கும் நேரமெல்லாம் எது மகிழ்ச்சி தருகிறதோ, அவை எல்லாமே பொக்கிஷங்கள்.

கேள்வி : யாருடைய வழிகாட்டுதல் வாழ்வை சீர்படுத்த உதவும்..?

  • ஜி.விஜயலட்சுமி, காரியாபட்டி.

ஞானகுரு :

இந்த உலகில் கோடிக்கணக்கான ஞானிகள், சித்தர்கள் வாழ்க்கை குறித்து யோசித்து என்னென்னமோ எழுதி வைத்திருக்கிறார்கள். நிறைய படியுங்கள், நிறைய கேளுங்கள். உங்கள் மனதுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ, அதை பின்பற்றுங்கள். எந்த ஒரு நபரையும் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள வேண்டாம்.

Leave a Comment