ஞானகுரு பதில்
கேள்வி : பிச்சைக்காரர்களுக்கு எவ்வளவு பணம் தர்மம் செய்யலாம்..?
- சுலோசனா ராஜேஷ், தேனி.
ஞானகுரு ;
பிச்சை கேட்பவருக்கு ஐந்து அல்லது பத்து ரூபாய் தர்மம் செய்வது நிறைய பேருக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் தருகிறது. அதனாலே கையில் சில்லறை வைத்துக்கொண்டு பிச்சைக்காரர்களுக்கு காசு போடுவதை பெருமிதமாகச் செய்கிறார்கள்.
பாத்திரமறிந்து பிச்சை இடு என்ற தமிழ் பழமொழியை பின்பற்ற வேண்டும். அதாவது பசியில் அழும் குழந்தைக்கு பால் தர வேண்டுமே தவிர, பொம்மை தரக்கூடாது. எனவே பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பது ஒரு தவறான அணுகுமுறை.
பொதுவாக ஊனமுற்றவர்கள், முதியோர்கள், அனாதைகளே பிச்சை எடுக்கிறார்கள். இவர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதே உண்மையான கருணை. அவர்கள் நீண்ட காலத் தேவைக்கு வழி காட்டும் வகையில் உதவிகள் செய்வது அதைவிட சிறந்த வழி.
ஆனால், பணம் கொடுப்பது பிச்சையை மறைமுகமாக ஊக்கப்படுத்தும் செயல். சிலரை பிச்சை எடுக்கவைத்து பணம் சம்பாதிக்கும் மோசமான கும்பல் நிறைய இடங்களில் இருக்கிறார்கள். பிச்சையாக யாரும் பணம் போடவில்லை என்றால் இந்த அயோக்கியத்தனத்தை தொடர்ந்து செய்ய மாட்டார்கள். எனவே, பிச்சைக்காரர்களுக்கு பண உதவி செய்வதில்லை என்பதில் உறுதியாக இருங்கள்.
பிறருக்கு உதவி செய்ய ஆசைப்பட்டால் நேரடியாக அனாதை ஆசிரமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, தேவையானவற்றை மட்டும் வாங்கிக்கொடுங்கள். யாரேனும் கல்வித்தொகை கட்டுவதற்குத் தடுமாறுவது தெரிந்தால் உதவி செய்யுங்கள். இதுவே நல்ல தர்மம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
