ஞானகுரு பதில்
கேள்வி : இல்லற பந்தத்தில் நுழையும் தம்பதிகள் பின்பற்ற வேண்டிய முக்கியமான அறிவுரைகள் என்ன..?
- கே.முரளி சங்கர், அல்லம்பட்டி.
ஞானகுரு :
விட்டுக் கொடுத்து வாழ்வதற்கும், தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவர் மட்டுமே திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைவதற்குத் தகுதி பெற்றவர்கள். என் இஷ்டப்படி மட்டுமே வாழ்வேன், யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்ற செல்லப்பிள்லை மனப்பான்மை இருப்பவர்கள் திருமணம் முடிக்காமல் இருப்பதே நல்லது.
திருமணத்தில் நுழையும் முன்பு வரவுக்குள் செலவழிக்கும் சாமர்த்தியத்தை கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்தவர் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.
இருவருக்கு இடையில் மனக்கசப்பு வரும் நேரங்களில் அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். பிரச்னை பெரிதாகும்போது கவுன்சிலிங் அல்லது மருத்துவரிடம் மட்டுமே உதவி கேட்க வேண்டும். உறவுகளின் ஆலோசனை உறவை சிதைத்துவிடும்.
குழந்தை பிறக்கும் வரை, இருவருக்கும் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாகத் தான் வாழ்க்கை குழப்பமாக இருக்கும். எத்தனை சிரமங்கள் இருந்தாலும் திருமணம் முடிக்கத் தயங்காதீர்கள். ஏனென்றால், ஒரு நல்ல துணை கிடைத்துவிட்டால் உலகம் இனிமையாக மாறிவிடும். வாழ்வதற்கு ஒரு அர்த்தம் கிடைத்துவிடும். இல்லறம் நல்லறமாக மாறிவிடும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
