இன்று உலக தண்ணீர் தினம்
தாயைக் கழித்தாலும் தண்ணீரைக் கழிக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
’நீர் இன்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர். அதனால் தண்ணீர் இருக்கும் ஆற்றங்கரையில்தான் மனிதர்களின் நாகரிகம் தொடங்கியது.
இந்த பூமியில் 30 சதவிகிதம் மட்டுமே நிலப்பரப்பு. மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீர் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் மனிதனின் சுயநல செயல்பாடுகள்தான்.
நீருக்காகத்தான் மூன்றாவது உலகப்போர் வெடிக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள். அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டி, நீர் வளத்தைப் பாதுகாப்பதற்காக, `உலக தண்ணீர் தினம்’ கொண்டாடுவதற்கு அழைப்பு விடுத்தது. ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏரி, குளம், கண்மாய்களைக் காக்கவேண்டியது அரசின் கடமை என்றால் பொதுமக்களுக்கும் கடமைகள் இருக்கின்றன.
ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வீணாகக்கூடாது என்ற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும். ஒழுகும் குழாய்களை சரி செய்யுங்கள். மழை நீரை சேகரிக்க வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த முன்வர வேண்டும். தண்ணீர் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால்தான் வரும் கால சந்ததியினர் தாகமின்றி இருப்பார்கள். தண்ணீரை காப்போம் என்று இன்றைய தினத்தில் உறுதி எடுத்துக்கொள்வோம்.
