• Home
  • அரசியல்
  • விஜய் ஒருபோதும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.. ஏன் தெரியுமா?

விஜய் ஒருபோதும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.. ஏன் தெரியுமா?

Image

எம்.ஜி.ஆர். புதிதாக கட்சி தொடங்கிய ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. ‘இந்த நேரத்தில் நமது கட்சி தேர்தலை புறக்கணிக்க வேண்டும், நமக்கு உருப்படியாக சின்னம் கூட இல்லை’ என்று பலரும் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னார்கள். ஆனால், கட்சி தொடங்கிவிட்டு போட்டியிடாவிட்டால் நம்மை அவமானம் செய்வார்கள். சுயேட்சை சின்னத்தில் நிற்போம் என்றே இரட்டை இலை சின்னத்தைத் தேர்ந்தெடுத்து நின்றார்.

கருணாநிதி தலைமையில் இயங்கிய அன்றைய ஆளும் கட்சியான தி.மு.க., காமராஜர் தலைமையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டையும் தோற்கடித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மிகப்பெரும் வெற்றி வாகை சூடினார்.

இன்று காலம் விஜய்க்கு அற்புதமான ஒரு வாய்ப்பு கொடுத்தது. ஈரோடு இடைத்தேர்தலை முக்கிய எதிர்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்துவிட்டது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் போட்டியை புறக்கணித்துவிட்டது. ஆகவே, களத்தில் இறங்கி கணிசமான வாக்குகளை வாங்கினாலே தமிழக அரசியலை விஜய்யால் புரட்டிப் போட்டிருக்க முடியும். ஆனால், அப்படியொரு அரிய வாய்ப்பை சீமானுக்குக் கொடுத்துவிட்டு புற முதுகு காட்டி ஓடிவிட்டார். ஆகவே, எம்.ஜி.ஆர். போன்ற தைரியமும் வெற்றியும் விஜய்க்கு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை.

இன்னொரு வகையிலும் எம்.ஜி.ஆர் அருகில்கூட விஜய் நெருங்க முடியாது. சினிமாவில் தான் பேசும் டயலாக், பயன்படுத்தும் உடை, ஹேர்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எம்.ஜி.ஆர். அறிவார். அதனாலே ரசிகர்களின் நன்மையை முன்னிறுத்தி நடிப்பார். புகை, மது, மாது போன்ற கெட்ட பழக்கங்களை திரைக்குக் கொண்டுவர மாட்டார்.

ஆனால், விஜய் இதற்கு நேர்மாறாக செயல்படுபவர். எம்.ஜி.ஆர். பெற்றோருக்கு பெருமதிப்பு கொடுப்பவர் என்றால் விஜய் பெத்த அப்பனைக் கொல்வார், காதலியைக் கொல்வார். தன்னை மாஸ் ஹீரோவாகக் காட்டுவதற்கு பாட்டில் மதுவை அப்படியே குடிப்பார். தன்னைப் பார்த்து ரசிகர்களும் செய்வார்களே என்ற கவலை அவருக்கு ஒருபோதும் கிடையாது.  

ரசிகர்கள் மீதும் மக்கள் மீதும் எந்த அளவுக்கு நேர்மையாக இருந்தார் என்பதற்கு எம்.ஜி.ஆர். கொடுத் இந்த ஒரே ஒரு பதில் போதும்.

‘’நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு, நடிக்க முடியாது என்று விலகுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே..?’’

’’நிறைய படங்கள் என்பது தவறான செய்தி. நான் அப்படி நடிக்க மறுத்த திரைப்படங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று காத்தவராயன் திரைப்படம். அந்த படத்தில் நிறைய மாந்திரீக காட்சிகள் இருந்தது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்கள் அந்த காட்சியை நீக்க மறுத்தனர். அதனால் அப்படத்திலிருந்து நான் விலகினேன். நான் நடிக்கும் படங்களில் தவறான கருத்துக்களை பரப்பும் காட்சிகள் இருக்க கூடாது என நினைப்பதே அதற்கு காரணம். ஏனென்றால் மாந்திரீகம் என்பது உண்மை இல்லை என்பது எனக்குத் தெரியும். மேஜிக்கை மாந்திரீகம் என்று ஏமாற்றுகிறார்கள். இந்த படத்தில் நடித்தால் என் ரசிகர்களும் அதை நம்பத் தொடங்கிவிடுவார்கள். ஆகவே, நடிக்கவில்லை. ஆனால், நான் கடவுளை கும்பிட மறுத்ததாக செய்திகளை பரப்பிவிட்டனர்.

அடுத்து நான் நடிக்க மறுத்த திரைப்படம் லலிதாங்கி. அப்படத்தில் கதாநாயகன் ‘பெண்கள் எல்லாம் விபச்சாரிகள்’ என பேசுவது போல் ஒரு காட்சி வருகிறது. தாய்குலத்தை மதிக்க வேண்டும் என சொல்லி வரும் நான் எப்படி அந்த வசனத்தை பேசுவேன். லட்சக்கணக்கான இளைஞர்கள் நான் நடிக்கும் திரைப்படங்களை பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் போது நான் எப்படி அப்படி ஒரு வசனத்தை பேசி அவர்களின் மனதில் நஞ்சை விதைக்க முடியும்?. அதனால்தான் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை’’ என்றார்.

நடிப்பு என்றாலும் பொய்யாக நடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் இன்று.

Leave a Comment