• Home
  • அரசியல்
  • சபரிமலைக்கு இ-பாஸ் இல்லை ஊட்டிக்கு எதுக்கு..?

சபரிமலைக்கு இ-பாஸ் இல்லை ஊட்டிக்கு எதுக்கு..?

Image

சமீபத்தில் ஸ்டாலின் கொடைக்கானல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பினார். இந்த நிலையில் இன்று முதல் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப் பிரதேசங்களுக்கு செல்ல இ-பாஸ் விநியோகம்  தொடங்கப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் சார்பில் ஆசிரியர் வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு  வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும், அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து, ‘இ‌-பாஸ்’ பெற்று, அதன் அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா  பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில் தான் இ பாஸ் முறை இருக்கும் என்றும் தெரிவித்துள்ள தமிழக அரசு இந்த நடைமுறை அடுத்த மாதம் 30 ம் தேதி வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இ பாஸ் ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ள திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, ‘கடும் வெப்பம் நிலவுவதால், (தேர்தல் முடிந்த இடைவெளியும் மற்றொரு காரணம்) தமிழ்நாட்டில் பலரும் நடுத்தர வர்க்க மக்கள் உள்பட கொடைக்கானல், உதகமண்டலம் போன்ற சுற்றுலா மய்யங்களுக்கு கோடையில் இளைப்பாற்றிக் கொள்ள செல்லும் நிலையில், வருகையாளர்கள் எண்ணிக்கை பெருகும் நிலையில், கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் (டிராஃபிக்ஜாம்) ஏற்படுவது இயல்பே. எதிர்பார்க்க வேண்டியதே!

அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில்  சுற்றுலா மய்யங்களுக்கு அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) வாங்கிச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ள தீர்வு – பல வியாபாரிகளுக்கும், சிறு, குறு வணிகர்கள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள்  நடத்துவோர் என பல தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுவதால் அவர்கள் அதை ரத்து செய்து தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யுமாறு கோரியுள்ளனர்.

 சீசன் நேரத்தில்தான் அவர்கள் சம்பாதிக்க முடியும் என்பதால் இது நியாயமான கோரிக்கையே! அதற்காக தமிழ்நாடு அரசு அதனை (இ-பாஸ்) நிறுத்தி வைக்கவோ, ரத்து செய்யவோ தீர்ப்பின்மீது மேல் முறையீடு உடனே செய்து, வணிகர்கள் மற்ற பொது மக்களுக்கும் சுற்றுலா பாதிக்காமல் செய்யலாம்! சபரிமலை மற்றும் திருவிழாக்களில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலின் போதும்கூட உயர்நீதிமன்றம் இ-பாஸ் முறையையா தீர்வாகக் கூறியது?  பின் ஏன் வணிகர் வாழ்வாதாரத்திற்கும், மக்கள் சுற்றுலாவிற்கும் இப்படி ஒரு இடையூறு ஏற்படுத்த வேண்டும்?’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்

Leave a Comment