ஆண்களை மட்டுமே பாதிக்கும் திக் திக் திக்குவாய்

திக்குவாய் பிரச்னை என்பது ஒரு நோயல்ல, மனதில் உறுதியிருந்தால் வாக்கில் தெளிவு கிடைத்துவிடும்.

சிலர் பேசும்போது வாய் தந்தி அடிக்கும். சட்டென்று வாயிலிருந்து வார்த்தை வெளிவராது. பேசத் திணறுவார்கள். அவர்கள் திக்குவாய் எனும் பாதிப்பால்தான் திணறுகிறார்கள் என்பது நமக்குப் புரிந்துவிடும்.

திக்குவாய் என்பது நோய் அல்ல; அதுவொரு சிறு பாதிப்பு அவ்வளவுதான். பேச்சில் தடுமாற்றம் இருக்கும். வார்த்தைகளை (அ) ஒலிகளை மீண்டும் மீண்டும் உச்சரிப்பார்கள். இந்தப் பேச்சுக் கோளாறு ஆண்களிடம்தான் அதிகம் காணப்படும். 

வாய் மற்றும் அதன் தசைகள் பேச இயலாமல் செயல் திறன் குறைவது, நரம்பு தசைகளில் பிரச்னை போன்ற காரணங்களால் திக்குவாய் ஏற்படலாம் என்றும், மரபணு அல்லது மூளையின் சில பகுதிகள் செயல்படுவதுடன் தொடர்புடைய பாதிப்பாக இருக்கலாம் என்பதுதான் விஞ்ஞானரீதியான காரணமாக இதுவரை சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், திக்குவாய் எதனால் ஏற்படுகிறது என்கிற காரணம் முழுமையாக எவராலும் இதுவரை கண்டறியப்படவில்லை.     

பொதுவாக பலருக்கு தமிழில் ‘ழ’ உச்சரிப்பு சரியாக வராது. கிட்டத்தட்ட அதேபோன்றதே திக்குவாய் பாதிப்பும். பொதுவாக குழந்தை பருவத்திலேயே அதாவது குரல்வளை வளரும் பருவமான 3 முதல் 5 வயதிலேயே திக்குவாய் பாதிப்புத் தொடங்கிவிடும். அந்த வயதில் அதனை மழலைப் பேச்சு என்று பெற்றோர் நினைத்துக் கொள்வார்கள். இந்த பாதிப்பு 10 வயதுக்கு மேல் அதிகரிக்கும். இந்த பாதிப்பு உள்ள  ஒருவர், பேச்சு திக்குவதால் ஏற்படும் தயக்கம், குழப்பம், பயம் போன்றவை காரணமாக தன்மீதே நம்பிக்கை இழக்கலாம். 

திக்குவாய் பாதிப்பு உள்ளவருக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்கள் திக்கிப் பேசுகிறார் என்பதற்காக, அவரை ஒதுக்கி வைக்கக்கூடாது. கேலி பேசக்கூடாது. குடும்பத்தினரும், நண்பர்களும் அவர்களிடம் மிக மென்மையாக நடந்துகொண்டால் அந்தப் பாதிப்பின் தீவிரம் குறைந்துவிடும். 

இதற்கென்று பிரத்யேக பேச்சு சிகிச்சையாளரை அணுகி இந்தப் பாதிப்பின் தீவிரத்தை குறைத்துக்கொள்ளலாம். மன அழுத்தம், பயம், அவநம்பிக்கை போன்றவற்றில் இருந்து முழுமையாக மீள முயற்சிப்பதுகூட திக்குவாய் பாதிப்பை சீர் செய்துகொள்வதற்கு சிறந்த வழியாகும். 

திக்குவாய் என்பது மிக கடுமையான நோய் இல்லை என்பதனால், இந்தப் பாதிப்பை சரி செய்ய பாதிப்புள்ளவருக்கு முதலில் தேவை மன உறுதிதான். வாய், நாக்கு, உதடு, தொண்டை, ஆகிய பகுதி களின் சக்தியை அதிகரிக்க செய்யம் சில பயிற்சிகள் உள்ளன. அதனை உறுதியான மனநிலையுடன் மேற்கொண்டால் திக்குவாய் பாதிப்பில் இருந்து நிச்சயம் விடுபடலாம்.

• எழுத்துகளை முதலில் தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்லிப் பழக வேண் டும். ய,ர,ல,வ,ழ,ள போன்ற தொண்டையில் பிறக்கும் எழுத்துகளை அடிக்கடி சொல்லிப் பார்க்க வேண்டும். இதனால், சொற்கள் தடையின்றி வர வழி பிறக்கும். 

• வாயை நன்கு திறந்து பேச வேண்டும். வாயில் உள்ள ஜவ்வு திறக்கும்போது அதன் தசைகள் நன்றாகப் பேசுவதற்கு உதவி செய்யும். இதனால் தடையின்றி பேச முடியும்.தினமும் உங்கள் நாக்கை வெளியே நீட்டி கீழ்புறமாக மசாஜ் செய்யவும். இப்படி செய்வதால் தசைகள் வலுவடையும். திக்குவது குறைந்து திணறலின்றி பேசலாம்.

• இந்த பாதிப்பு உள்ளவர் மூச்சு பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வது அவசியம். மூச்சை மெல்ல உள்ளே இழுத்து, மறுபடியும் மெல்ல வெளியே விடவேண்டும் .இதனால் தயக்கம், பயம் இன்றி பேச முடியும். பொதுவாகவே, மூச்சை நெஞ்சில் இருந்து சுவாசிப்பதற்கு பதிலாக வயிற்றில் இருந்து சுவாசிக்க வேண்டும். 

• வேகமாக படிப்பது திக்குவாய் பாதிப்புள்ளவருக்கு ஓர் அற்புதமான பயிற்சி. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து வாய்விட்டு உரக்க சத்தம்போட்டு படித்து வந்தால் எளிதில் இந்த பாதிப்பிலிருந்து மீளலாம். வாய்விட்டு வேகமாக படிக்கும் போது சொற்கள் பழகி, திணறலின்றி சரளமாக பேச்சு வரும்.

• வாய்விட்டு உரக்க பாடல்களை பாடுவது மற்றோரு அருமையான பயிற்சியாகும். இந்தப் பயிற்சிகளை ஆரம்பத்தில் தனி அறையில், அமைதியான இடங்களில் தனிமையில் மேற்கொள்ளுங்கள்.   

திக்குவாய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து கவலைப்படுவதை, பயம் கொள்வதை விட்டொழியுங்கள்.

பின் குறிப்பு: உலகின் மிகச்சிறந்த பேச்சாளர் என்று புகழ்பெற்றவர் டெமஸ்தனிஸ். அவருடைய பேச்சை கேட்க ஆயிரக் கணக்கான மக்கள் பல மணிநேரங்கள் காத்திருந்து கேட்டு ரசித்தனர். அற்புதமான பேச்சாளரான அவர், ஒரு காலத்தில் தீவிரமான திக்குவாய் பாதிப்பில் அல்லாடியவர். அதன்பின் தனக்குத்தானே சிகிச்சை எடுத்துக்கொண்டு பெரிய பேச்சாளராக மாறியவர்.

Leave a Comment