தவறு செய்வதற்கு அஞ்சுவதில்லை, தவறு பிறருக்குத் தெரியக்கூடாது என்றுதான் அஞ்சுகிறார்கள்.

மந்திரச்சொல்

மனிதர்கள் என்றாலே தவறு செய்வது சகஜம். தவறு செய்தவர்களுக்கு குற்றவுணர்வு வரும். எனவே, வருத்தப்பட்டு அதை திருத்துவதற்கு முயற்சி எடுப்பார்கள். இதுவே, நியாயமான செயல்.

ஆனால், நான் செய்த தவறு மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டதே என்று மட்டும் வருந்துபவர்கள், தன்னுடைய பிம்பத்தைப் பாதுகாப்பதில் இறங்குவார்கள். அதாவது, தவறுக்காக வருந்தாமல் தனக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உடைந்து அவமானம் கிடைத்துவிடும் என்று செய்த தவறை நியாயப்படுத்துவார்கள்.

ஒவ்வொரு மனிதருக்கும் தன்னைப் பற்றி உயர்வான எண்ணம் இருக்கிறது. தனக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பு, மரியாதை, சமூக அந்தஸ்தை பாதுகாப்பதற்கு விரும்புகிறார்கள். மற்றவர்கள் தன்னை நல்லவர், நேர்மையானவர், சிறப்பான நிர்வாகி என்றெல்லாம் பாராட்ட விரும்புகிறார்கள். அந்த பிம்பத்துக்கு ஒரு களங்கம் ஏற்படுவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடிவதில்லை.

அதனால் தவறைச் சரிசெய்வதைவிட, தவறு வெளியில் தெரியாமல் சமாளிப்பதற்கு அதிக ஆற்றலைச் செலவிடுகிறார்கள். இதுதான் பல பொய்களின் தொடக்கம். ஒரு பொய் மற்றொரு பொய்யை உருவாக்குகிறது. அதை மறைக்க இன்னொரு விளக்கம் தேவைப்படுகிறது. பின்னர் ஆதாரங்களை மறைக்க வேண்டிய நிலை வருகிறது. இறுதியில் செய்த தவறைவிட, அதை மறைக்க முயன்றதே பெரிய பிரச்சினையாகிறது.

சிறு வயதுப் பழக்கம்

தவறு மறைக்கும் பயிற்சியை நிறைய மனிதர்கள் குழந்தையாக இருக்கும்போதே கற்றுக்கொள்கிறார்கள். அதாவது பள்ளியில் லஞ்ச் பாக்ஸ் தொலைத்துவிட்டது என்றால் பயம் வருகிறது. அம்மாவும், அப்பாவும் தவறை ஒப்புக்கொண்டால் கடுமையாகத் தண்டிப்பார்கள் என்ற சூழலில், குழந்தை உண்மையைச் சொல்லாமல், தவறை எப்படி மறைப்பது என்று யோசிக்கிறது. அதற்காக ஒரு பொய் சொல்லத் தொடங்குகிறது.

பயத்திலிருந்து தவறு ஆரம்பமாகிறது. ஆகவே, குழந்தைகளை அச்சமில்லாதவர்களாக வளர்க்க வேண்டும். அதாவது, தவறு செய்துவிட்டால் தயங்காமல் சொல்ல வேண்டும். தவறைச் சரிசெய்வதற்கு பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள் என்ற எண்ணம் வரவேண்டும். தவறுக்கு தண்டிப்பு, கண்டிப்பு, அவமதிப்பு இருக்காது என்பதை அழுத்தம்திருத்தமாக புரியவைக்க வேண்டும். அப்போதுதான் தவறை மறைக்கும் குழந்தையாக இல்லாமல், தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்பவராக வளர்வார்கள்.

உறவுச் சிக்கல்

கணவன், மனைவி உறவிலும் இந்த பிரச்னை இருக்கிறது. மனைவிக்கு கணவன் செய்த தவறு தெரியவருகிறது. அதை மனைவி கண்டுபிடித்துக் கேட்கும்போது உண்மையைச் சொல்லாமல் மறைக்கிறார். அதற்கு ஒரு பொய் சொல்கிறார். இப்போது அவர் செய்த முதல் தவறு மட்டும் பிரச்னையாக இருக்காது. அடுத்து சொன்ன பொய் மிகப்பெரிய பிரச்சினையாக மாறும். தவறை ஒப்புக்கொள்ளும் தைரியம் இல்லாததால், அங்கு நம்பிக்கையே உடைந்து போகலாம். குடும்ப உறவு சிதைந்துபோகலாம்.

அதிகாரம் இருக்கும் இடங்களில் இந்த மனநிலை இன்னும் ஆபத்தானது. ஒரு அலுவலக மேலாளர் தவறான முடிவு எடுக்கிறார். அதை ஒப்புக்கொண்டால் தனது பதவி, மரியாதை பாதிக்கப்படும் என்று நினைக்கிறார். அதனால் தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் பணியாளர்கள் மீது பழியைப் போடுகிறார். உண்மையை மறைக்கும் கலாச்சாரத்தால், நிறுவனத்தின் தவறு மறைக்கப்படுவது, நாளடைவில் சிக்கலாக மாறுகிறது.

இன்று பலர் தங்கள் வாழ்க்கையின் அழகான பகுதியை மட்டும் மற்றவர்களிடம் காட்டுகிறார்கள். அதாவது வெற்றி, பணம், பயணம், குடும்ப மகிழ்ச்சி, பதவி, புகழ் போன்றவற்றை வெளியில் காட்டி, நான் எல்லாவற்றையும் வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறேன் என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள். அந்த பிம்பத்துக்கு ஆபத்து வராமல் செய்த தவறை மறைக்கத் துடிக்கிறார்கள்.

இங்கு ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது. அதாவது தவறு செய்தவர்கள் எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்ல வேண்டுமா?

அவசியமில்லை. எல்லா தவறுகளையும் எல்லோரிடமும் பகிர வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், செய்த தவறால் வேறு ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதை மறைப்பதற்குப் பதிலாக பொறுப்பேற்க வேண்டும். அதுவே நேர்மை.

தவறு செய்யாமல் இருப்பது நல்லது. ஆனால் சில நேரங்களில் எல்லோருக்கும் தவறு நடக்கும். அந்த நேரத்தில் இது என்னுடைய தவறு என்று ஒப்புக்கொள்வது பலவீனம் அல்ல, மிகப்பெரிய மனவலிமை. தவறை ஒப்புக்கொண்டவரால் மட்டுமே, தவறுக்கான காரணத்தை ஆராய முடியும். அந்த காரணத்தை ஆராய்ந்தால்தான் பாடம் கிடைக்கும். பாடம் கிடைத்தால்தான் நடத்தை மாறும். நடத்தை மாறினால்தான் வாழ்க்கை மாறும்.

ஆனால் தவறை மறைத்துவிட்டால், எந்த ஒரு தவறையும் மறைத்துவிடலாம் என்ற எண்ணமே தோன்றும். மீண்டும் மீண்டும் தவறு செய்யத் தூண்டும்.

எனவே, தவறு மனிதனைத் தாழ்த்துவதில்லை. தவறை மறைக்க பொய் சொல்லிக்கொண்டே இருப்பதுதான் மனிதனைத் தாழ்த்துகிறது. தன்னுடைய மதிப்பை இழந்துவிடுவோமா என்று பயப்படுவதற்குப் பதிலாக, நேர்மையை இழக்கக்கூடாது என்று பயப்படுவதே உண்மையான மனவலிமை.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment