கொள்ளையடிக்க ஆசைப்படும் இளம் தலைமுறை

சினிமா காரணம்..?

நேர்மை, நியாயமாக இருப்பவர்களை மதித்தது ஒரு காலம். இன்று எப்படியாவது பணக்காரராகிவிட்டால் மரியாதை என்று மாறிவிட்டது. தவறு செய்தாலும் அதை தவறாக செய்யாமல் பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் திரைப்படங்களில் பிரபல நடிகர்களே நடிக்கிறார்கள்.

நீதி, நியாயம் பேசிய தலைவர்கள், நடிகர்களுக்கு மத்தியில் ஹீரோயிசம்தான் முக்கியம், இங்கே நேர்மைக்கு இடமில்லை என்று வெளிப்படையாக சினிமாவில் காட்டுகிறார்கள். குறிப்பாக விஜய், அஜித் போன்ற பிரபலங்களே பணமே பிரதானம் என்று சினிமாவில் காட்டுகிறார்கள். லக்கி பாஸ்கர் படத்தின் வெற்றி இளசுகளின் அடிமனதின் ஆசையாக மாறியிருக்கிறது.

அதனால், உழைப்பை நம்பாமல் குற்றத்தின் மூலம் பணக்காரர்களாக நினைக்கும் ஒரு கும்பல் உருவாகியிருக்கிறது என்பதையே மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் உறுதிபடுத்துகிறது.

இன்றைய இளைஞர்களின் சிந்தனை, பணத்தின் மீதான மோகம், உழைப்பின் மீதான நம்பிக்கையின்மை, குறுக்கு வழியில் ஆடம்பரமான வாழ்க்கையை அடைய வேண்டும் என்ற மனநிலைக்கு மாறிவிட்டது.

இதுகுறித்து பேசும் சுயமுன்னேற்ற எழுத்தாளர், ‘’ஒரு மனிதன் தனது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு உழைப்பு, கல்வி, தொழில், வியாபாரம் என எத்தனையோ நேர்மையான வழிகள் இருக்கும்போது, ஏன் கொள்ளையடிப்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

 பல நாட்கள் திட்டமிட்டு, நகைக்கடையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்து, கட்டடத்தின் அமைப்பைப் புரிந்துகொண்டு, காவல்துறையிடம் சிக்காமல் தப்பிப்பதற்கான வழிகளையும் யோசிக்கத் தெரிந்த ஒருவரால், அதே அறிவையும் நேரத்தையும் முயற்சியையும் ஒரு தொழிலை உருவாக்குவதற்கோ, திறமையை வளர்த்துக்கொள்வதற்கோ, நேர்மையான முறையில் பணம் சம்பாதிப்பதற்கோ பயன்படுத்த முடியாதா?

குற்றம் செய்வதற்குத் திட்டமிடும் அளவிற்கு அறிவும் முயற்சியும் இருப்பவர்கள், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அதே அளவு உழைக்கத் தயாராக இல்லாதது ஏன்? இன்றைய சமூகத்தில் ஒரு சிலருக்கு உழைத்துச் சம்பாதிப்பதைவிட, குறுகிய காலத்தில் பெரும் பணக்காரர்களாகிவிட வேண்டும் என்ற ஆசை அதிகரித்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் காட்டப்படும் ஆடம்பரமான வாழ்க்கை, விலை உயர்ந்த வாகனங்கள், நகைகள், பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்து, அவற்றை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. ஆனால் அந்த வாழ்க்கைக்குப் பின்னால் இருக்க வேண்டிய உழைப்பு, பொறுமை, ஒழுக்கம், பொருளாதார அறிவு ஆகியவற்றைப் பற்றி சிந்திப்பதில்லை.

 பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தவறில்லை. ஆனால் அதற்காக மற்றொருவரின் சொத்தை அபகரிப்பதையோ, சட்டத்தை மீறுவதையோ நியாயப்படுத்த முடியாது. ஒரு தொழிலாளி தனது குடும்பத்திற்காக நாள் முழுவதும் உழைக்கிறார். ஒரு விவசாயி பல மாதங்கள் பாடுபட்டு விளைச்சலை உருவாக்குகிறார். ஒரு சிறு வியாபாரி முதலீடு செய்து, கடன் வாங்கி, நஷ்டங்களைச் சந்தித்தும் தனது தொழிலை முன்னேற்ற முயற்சிக்கிறார். ஒரு இளைஞர் பல ஆண்டுகள் படித்து, திறமைகளை வளர்த்துக்கொண்டு வேலைவாய்ப்பிற்காகப் போராடுகிறார். இவர்களெல்லாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக நேரத்தையும் உழைப்பையும் செலவிடும்போது, எந்த உழைப்புமின்றி மற்றொருவரின் சொத்தை ஒரே இரவில் அபகரித்துவிடலாம் என்று நினைப்பது எத்தகைய மனநிலை?

ஒரு கொள்ளை வெற்றியடைந்துவிட்டால் வாழ்க்கையே மாறிவிடும் என்று நினைப்பவர்கள், அந்த ஒரே குற்றத்தால் தங்களுடைய எதிர்காலம், குடும்பத்தின் நிம்மதி, சமூக மரியாதை, சுதந்திரம் என அனைத்தையும் இழக்க நேரிடலாம் என்பதை ஏன் உணர்வதில்லை?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இன் இளைய தலைமுறையினருக்கு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள், தொழில் முனைவோர் சிந்தனை, அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு, பொருளாதார ஒழுக்கம் ஆகியவற்றை வளர்ப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது.

பெற்றவர்களே பிள்ளைக்கு உடந்தையாக இருப்பதும் பெரும்கொடுமை. தவறு செய்தால் மாட்டிக்கொள்வோம் என்பதுகூட புரியாத தலைமுறையை பெற்றோரும், ஆசிரியரும் உடனே மாற்ற முன்வரவேண்டும். ஆளும் அரசு உடனடியாக பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் கொண்டுவர வேண்டும்.

Leave a Comment