குளிர்ச்சிக்குத் தயங்கி காலம் தாழ்த்துவதால், தண்ணீர் சூடாகப்போவதில்லை.

மந்திரச்சொல்.

முடிந்த வரையிலும் பிரச்னைகளை தள்ளிப் போடுவதற்கே மக்கள் விரும்புகிறார்கள். பொதுவாக புதிதாக ஒன்று தொடங்குவது, முடிவு எடுப்பது போன்ற சூழல் வரும்போது இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம் என்ற மனநிலை வருகிறது.

தள்ளிப்போடுவது ஒரு பாதுகாப்பு கவசம் போன்று தோன்றும். பொறுமையாக இருந்தால் தானாகவே பிரச்னை தீர்ந்துவிடும் என்று நம்புவார்கள். ஆனால் தள்ளிப்போடுவது அல்லது தவிர்ப்பதால் எந்த பிரச்னையும் தீர்வதில்லை, நாளுக்கு நாள் பெரிதாகிறது.  

பயத்தை வெல்லும் ஒரே வழி, அதிலிருந்து விலகி ஓடாமல் நேருக்கு நேராக அதை எதிர்கொள்வதுதான். குளிர்ந்த நீரில் கால் வைக்காமல் நின்றுகொண்டே இருந்தால், அந்த நீர் சூடாகாது. தைரியமாக இறங்கினால் சில நொடிகள் மட்டுமே குளிர் அதிகமாகத் தெரியும். அதன் பிறகு குளிர் நீருக்கு ஏற்ப உடல் தன்னை தகவமைத்துக்கொள்ளும். அதனால் மாற வேண்டியது சூழ்நிலை அல்ல, அதை எதிர்கொள்ளும் மனநிலை.

சினிமா இயக்குவதற்கு விரும்புபவர் வாய்ப்பு தானாக வரும் என்று காத்திருந்தால் எதுவும் நடக்காது. தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்ல வேண்டும். தயாரிப்பாளர்களை சந்தித்தால்தான், அவர்கள் எப்படிப்பட்ட கதைகளைத் தேடுகிறார்கள் என்பது புரியும்.  

நன்றாக ஓடுபவர் என்றால், பல போட்டிகளில் பங்கேற்க வேண்டும். நிறைய போட்டிகளில் பங்கேற்ற பிறகுதான், இன்னும் திறமையை எப்படி மேம்படுத்த முடியும் என்பது தெளிவாகத் தெரியும்.

மனைவியுடன் ஒரு பிரச்னை என்றால், தயங்காமல் பேசித் தீர்க்க வேண்டும். தானாக சரியாகிவிடும் என்று விலகிச் சென்றால் பிரிவு பெரிதாகிவிடும். அதேநேரம், பேசத் தொடங்கினால் பிரச்னை விரைவில் சரியாகிவிடும்.

வாழ்க்கையின் மிகப் பெரிய மாற்றங்கள், மனம் தயாரான பிறகு தொடங்குவதில்லை; தொடங்கிய பிறகுதான் மனம் தயாராகிறது.

எனவே, சரியான நேரம் வரம் என்று காத்திருக்காதீர்கள். சரியான நேரம் என்பது செயல்படத் தொடங்கும் அந்த நொடியாக இருக்கலாம். குளிர்ந்த நீரில் இறங்கிய பிறகுதான் உடல் பழகுகிறது; அதுபோல பிரச்னைகளை சந்தித்த பிறகு மனம் வலிமை பெறுகிறது.

தைரியமாக காலெடுத்து வையுங்கள்.

  • எஸ்.கே.முருகன், மந்திரச்சொல்

Leave a Comment