துயரம் கொடுத்த இதயமே மகிழ்ச்சியும் கொடுக்கும்.

கலீல் ஜிப்ரான் மந்திரச்சொல்

உலகப் புகழ்பெற்ற கவிஞன் கலீல் ஜிப்ரான் லெபனானில் பிறந்து, அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர். மனித உணர்வுகளை எழுத்துக்களில் செதுக்கிய சிற்பி. இவரது எழுத்து நவீன அரபு இலக்கியத்தின் மறுமலர்ச்சி என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்காவில் கலைப் பள்ளிகளில் பயின்றார், ஓவியம் மற்றும் எழுத்தில் தனது திறமையைக் காட்டினார், அரபு, ஆங்கிலம் இரண்டிலும் எழுதினார், அவரது ‘தி ப்ராஃபெட்’ தலைசிறந்த தத்துவப் படைப்பாகப் போற்றப்படுகிறது, காதல், திருமணம், குழந்தைகள், வேலை போன்ற மனித வாழ்வின் அடிப்படைத்தன்மையை அசைத்துப் பார்க்க்ககூடியது.

காச நோயினால் 48வது வயதில் காலமானார் என்றாலும் காதல் என்றாலே கலீல் ஜிப்ரானே நினைவுக்கு வரும் அளவுக்கு எழுதிக் குவித்திருக்கிறார். அவரது புகழ்பெற்ற வாசகங்கள் இங்கே….

  • துயரம் கொடுத்த இதயமே மகிழ்ச்சியும் கொடுக்கும். வருத்தமாக இருக்கையில் இதயத்தைப் பாருங்கள். துயரத்தை விட இன்பம் பெரிதில்லை என்ற உண்மை புரியும்.
  • காதல் நேசிக்கச் செய்யும். அதேநேரம் சித்ரவதையும் செய்யும்.
  • காதலை யாரும் வழிநடத்த முடியாது. காதலை மனிதர்களை கூட்டிச்செல்கிறது.
  • நாம் அனைவருமே சிறைக்கைதிகள்தான்…!  சிலர் சிறைக்கம்பிகளோடு… சிலர் கம்பி இல்லாமலேயே…!
  • அடிமைச் சுமையைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்பவனே உண்மையான சுதந்திர மனிதன்.
  • தோல்வியடைந்தவர்களைப் பார்த்து வெற்றியடைந்தவர்கள் கூறும் உபதேசத்தை என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
  • அதிகம் பேசுபவனைப் பார்த்து ஊமை மட்டுமே பொறாமைப்படுவான்.
  • மனிதனுக்கு பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை… அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் உள்ளது.
  • இது மிகவும் வேடிக்கை…! சில இன்பங்களை அனுபவிக்கத் துடிக்கும் ஆசையே என் வலிக்கும் காரணமாக அமைகிறது.
  •  ஒவ்வொரு மனிதனும் என்றோ வாழ்ந்த ஓர் அரசன் அல்லது அடிமையின் சந்ததி…!
  • நீ யாருடன் சேர்ந்து சிரித்தாயோ… அவர்களை மறந்து விடலாம்…! நீ யாருடன் சேர்ந்து அழுதாயோ… அவரை ஒருபோதும் மறக்காதே…!
  • உப்பில் ஏதோ ஒரு புனிதம் இருக்கிறது…! எனவேதான் அது நம் கண்ணீரிலும் இருக்கிறது… கடலிலும் இருக்கிறது.
  • இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது. நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்…!
  • அதிகம் பேசுபவன் குறைந்த அறிவு உடையவன்.. பேச்சாளிக்கும் ஏலம் போடுபவனுக்கும் அப்படியொன்றும் அதிக வித்தியாசமில்லை…!
  • இன்பங்களையும் துன்பங்களையும் புரிந்து கொண்டு அனுபவிக்கும் முன்பே தேர்ந்தெடுத்து விடுகிறோம்.
  • குற்றம் என்பது தேவையின் மறுபெயர்… வியாதியின் ஓர் அங்கம்…! மற்றவன் செய்த குற்றங்களைப் பெரிதுபடுத்துவதைவிட பெரிய குற்றம் ஏதுமில்லை…!
  • பூமியில் நடக்கும் அனைவருடனும் நான் நடக்க விரும்புகிறேன்…! ஊர்வலம் என்னைக் கடந்து செல்வதை என்னால் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது…!
  • நாம் இவ்வுலகில் வாழுவது அழகைக் கண்டுபிடிக்க மட்டுமே…! மற்றவை எல்லாம் ஒரு வகையில் காத்திருத்தல் போன்றது…!
  • உன் வாயில் உணவு நிறைந்திருக்கும் போது உன்னால் எப்படி பாட முடியும்? கையில் நிறையப் பணம் உள்ள போது மற்றவர்களை வாழ்த்த எப்படிக் கைகளை உயர்த்த முடியும்…?
  • வேடிக்கை என்னவென்றால் நாம் சரியானவற்றைச் செய்வதில் காட்டும் சுறுசுறுப்பைவிட, நாம் செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதில்தான் அதிகம் சுறுசுறுப்பை காட்டுகிறோம்.
  • கண்களைத் திறந்து பார்ப்பாயானால் எல்லா உருவத்திலும் உன் உருவத்தையே பார்ப்பாய்! காதுகளைத் திறந்து வைத்து மற்றவர்கள் சொல்வதைக் கவனிப்பாயானால், எல்லாக் குரல்களிலும் உன் குரலையே கேட்பாய்!

Leave a Comment