கலீல் ஜிப்ரான் தத்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும்.
லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான். இவர் சிறந்த ஓவியரும்கூட. அரபியிலும், ஆங்கிலத்திலும் ஏராளமான கவிதைகளை எழுதியுள்ளார்.
இவர் எழுதியதில் புகழ்பெற்ற கவிதை இது. படித்துப் பாருங்கள், உயிரை உரசும்.
ஒரு நதியின் நடுக்கம்
கடலுக்கு நுழைவதற்கு முன்பு ஒரு நதி பயத்தில் நடுங்குவதாக கூறப்படுகிறது.
தாம் பயணித்த பாதையை அது திரும்பிப் பார்க்காது.
மலைச் சிகரங்களில் தொடங்கி, வனங்கள், கிராமங்கள் என்று கடந்துவந்த நீண்ட நெடிய பாதை.
எதிரில் அது பார்க்கிறது, மிகப்பெரிய சமுத்திரத்தை. அதற்குள் நுழைவது என்றால், என்றென்றைக்கும் காணாமல் போவது என்று அர்த்தம்.
ஆனால் வேறு வழியில்லை, அந்த நதி திரும்பிச்செல்ல முடியாது. எவரும் திரும்பிச் செல்ல முடியாது. திரும்பிச் செல்வது என்பது வாழ்வில் சாத்தியம் இல்லை.
சமுத்திரத்தில் நுழைவது எனும் முடிவை எடுத்துத்தான் ஆகவேண்டும். ஏனெனில் அப்போதுதான் அச்சம் அகலும். ஏனெனில் அங்குதான் நதிக்குப் புரியும்.
சமுத்திரத்தில் நுழைவது என்பது மறைந்து போவது அல்ல, அது சமுத்திரமாய் ஆவது.
