குழந்தை பாலுறுப்பை தொட்டு விளையாடுகிறதே….?

ஞானகுரு பதில்

கேள்வி : என் மகனுக்கு 5 வயசு. சின்ன வயதிலிருந்தே அவன் பாலுறுப்பைத் தொட்டு விளையாடுவதில் ஆர்வம் காட்டுகிறான். விருந்தினர்கள் முன்னிலையிலும் அவன் இப்படி செய்வது அவமானமாக இருக்கிறது. இந்த பழக்கத்தை எப்படி நிறுத்துவது..?

ஞானகுரு :

தங்களுக்குப் பிடித்ததை செய்வதற்கு சூழ்நிலை பற்றி குழந்தைகள் கவலைப்படுவதில்லை. குழந்தைக்கு தாயிடம் பால் குடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே, பசி இல்லையென்றாலும் பால் குடிக்க அழுகின்றன. பால் கிடைக்காத பட்சத்தில் நிப்பிள் அல்லது கைசூப்புவதில் சந்தோஷம் அடைக்கிறார்கள்.

கொஞ்சம் வளர்ந்ததும் சிறுநீர், மலம் கழித்தல் போன்றவற்றில் விளையாடுகின்றன. அதோடு பாலின உறுப்புகளைத் தடவுதல், தொடுதலில் இன்பம் காண்கின்றன. சில குழந்தைகள் தாய், தந்தையின் உறுப்பைத் தொட்டு விளையாடுவதும் உண்டு.

இதை காம விளையாட்டு என்று அடையாளப்படுத்தக்கூடாது. தங்கள் உடல் பற்றி குழந்தைகள் ஆய்வு செய்கிறார்கள். சில உறுப்புகளைத் தொடும்போது கிளர்ச்சி வருவதால், அடிக்கடி தொடுகிறார்கள். இதற்கு திட்டுவது, அடிப்பது, மிரட்டுவது பயனளிக்காது. அதுவும் குழந்தைகளுக்கு விளையாட்டாகத் தோன்றும்.

அடுத்தவர் முன்பு இப்படி செய்வது சரியல்ல என்று அன்பாகவும், அமைதியாகவும் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டும். அதோடு, இன உறுப்புகளைத் தொட்டு விளையாடுவதை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்த வேண்டும். இப்படி நடந்துகொண்டால் கொஞ்ச நாட்களில் அந்த பழக்கத்தை குழந்தைகளே நிறுத்தி விடுவார்கள்.

உறுப்பைத் தொடவில்லை என்றால் பிடித்த உணவு தருவேன் என்று ஆசை காட்டலாம். உறுப்புகளைத் தொட முடியாத அளவுக்கு ஆடை அணிவிக்கலாம். குழந்தையின் கவனத்தை விளையாட்டு காட்டி திசை திருப்பலாம். பொதுவாக ஆறேழு வயதில் அவர்களே இந்த பழக்கத்தை மறந்துவிடுவார்கள். எனவே இதற்காக ரொம்பவும் கவலைப்பட வேண்டாம். மாற்றம் வந்துவிடும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment